எளிய மக்களின் வாழ்க்கையில் கொரோனாவை தடுப்பது சாத்தியமா?

நன்றி குங்குமம் தோழி

கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாத இறுதியில், எளிய மக்கள் வாழும் வடசென்னை மற்றும் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புப் பகுதிகளில்(slum) கொரோனா நோய் தொற்று சுத்தமாய் கட்டுக்குள் இல்லை. இந்நிலையில் மும்பை தாராவியில் கொரோனா பரவல் குறித்த செய்தி ஊடகங்களில் வரத் தொடங்கின. கொரோனா குடிசைப் பகுதிகளில் கட்டுக்குள் இல்லாமல் போனால் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை உணர்ந்த பெருநகர சென்னை கார்ப்பரேஷன் மே மாதம் 2ம் வாரத்தில், சென்னையில் செயல்படும் 96 தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து ‘கோவிட் கம்யூனிட்டி இன்டர்வென்ஷன் நிகழ்ச்சி’ ஒன்றைத் தொடங்கினர்.

இதன் செயல்பாட்டையும், இதில் பங்கேற்று பணியாற்றும் பெண்களின் பின்புலத்தையும் அறிய, வடசென்னையில் தாகூர் நகர், அயனாவரம் கே.கே.நகர், செட்டி தோட்டம், சபாபதி ஸ்லம், வீராசாமி ஹவுசிங் போர்ட், காந்தி நகர், அம்பேத்கர் நகர் என ஸ்லம் செட்டில்மென்ட் பகுதிகளில் இறங்கி, அங்குள்ள எளிய மக்களின் வீடுகளுக்குச் சென்று தீவிரமாய் பணியாற்றும் ‘நீலம் அமைப்பில்’ உள்ள ORWs (outreach workers) பெண்கள் சிலரை சந்தித்தபோது…

எங்கள் அமைப்பில் மொத்தம் 24 ORWs இருக்கிறார்கள். 12 நபருக்கு ஒருவர் என 2 கண்காணிப்பாளர்கள் உண்டு. ஒரு ORWக்கு 150 வீடு. மொத்தம் 3488 வீடுகளை நாங்கள் தினமும் கண்காணிக்கிறோம். காலையில் ஒவ்வொரு வீட்டுக்கும் விசிட் செய்து, குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலையை விசாரிப்போம். இதில் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வறட்டு இருமல், சுவை மற்றும் மணம் அறியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைப்போம்.

இதில் காய்ச்சல் மட்டுமே எங்களால் கண்டுபிடிக்க முடியும். மற்ற சிம்டம்ஸ் அவர்கள்தான் சொல்ல வேண்டும். தெர்மல் ஸ்கேன் மூலம் டெம்ப்ரேச்சர் பார்ப்பது, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் இதய துடிப்பு, மூச்சுத் திணறல் அறிவது போன்ற அடிப்படை விசயங்களை அறிந்து கண்காணிப்பாளர் மூலம் தகவல் அனுப்புகிறோம்.

அவர்கள் அரசாங்கம் நியமித்துள்ள வாகனத்தில் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் சென்று, அருகில் இருக்கும் மருத்துவ முகாம்களில் உள்ள மருத்துவர்களிடம் அவர்களைக் காண்பிப்பார்கள். கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தால், பரிசோதனை மையத்துக்கு அனுப்பி டெஸ்ட் எடுக்க வைப்பார்கள். ஒருவர் கொரோனா டெஸ்டிற்கு சென்றால் முடிவு வரும்வரை வெளியில் வராமல் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். உடன் அவர்கள் வீட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

ஸ்லம் பகுதியில் மட்டும் ஹோம் குவாரன்டைன் இல்லை. பாசிட்டிவ் எனத் தெரிய வந்தால், ஹோம்கேர் சென்டர் அல்லது தொற்று தீவிரம் எனில் மருத்துவமனைக்கும் அனுப்பப்படுவார்கள். 6 வயதுக்குள் உள்ள குழந்தை எனில் மட்டும் குழந்தையோடு குடும்பத்தினரை 14 நாள் வீட்டிலே தனிமைப் படுத்துவோம். சிலர் ஹோம் குவாரன்டைன் அல்லது மருத்துவமனைகளில் இருந்தாலும் அவர்களோடு தினமும் கைபேசி மூலம் தொடர்பு கொள்வோம்.இதில் துவக்க நாட்கள் எங்களுக்கு ரொம்பவே சவாலாய் இருந்தது. கொரோனா என்றாலே மக்களிடத்தில் ஒரு மிரட்சி இருந்தது.

அழுது கொண்டே டெஸ்டிற்கு சென்றவர்கள் இருந்தார்கள். வீட்டில் யாருக்காவது இருமல், சளி, காய்ச்சல் இருக்கா? என்று கேட்டாலே சபிக்க ஆரம்பித்தார்கள். ‘வந்துட்டா பாரு.. அரிசி இருக்கா, பருப்பு இருக்கா, சாப்புட வீட்ல வசதி இருக்கான்னு கேப்பியா? அதை விட்டுட்டு சிம்டம்ஸ் பத்தி கேட்டுட்டு இன்னா பண்ணப் போற, 5 ஆயிரம் கொடு. என் குடும்பத்தையே டெஸ்ட் எடுத்துக்க’ என்றனர் இளக்காரமாய். ‘கமிஷனுக்கு தானே ஆள் புடிக்க வந்துருக்க.

உனக்கு எவ்வளவுன்னு சொல்லு நானே கொடுக்குறேன்’ என்றும் பேசினார்கள்… சில வீடுகளில் தொடப்பத்தோடு அடிக்கவே வந்தார்கள். சில நேரங்களில் அசிங்கமான தரக்குறைவான வார்த்தைகளையும் கேட்க நேர்ந்தது. சிலர் கதவை பட்டென முகத்தில் அறைந்து சாத்துவார்கள். நீ எல்லாம் நல்லா இருப்பியா..? உன் குடும்பம் நல்லா இருக்குமா..? என சில குடும்பத்தில் அவமரியாதைகளையும் பலரின் சாபங்களையும் பெற நேர்ந்தது. நாய்கள் என் வீட்டுக்கு வந்து கதவை தட்டுது. இனி தட்டுன உன்னை கம்ப்ளெய்ன்ட் பண்ணுவேன் என்பார்கள். தண்டத்துக்கு காப்பரேஷன்ல போட்டுறுக்காங்க, இந்த ஏரியாவில் கால் வச்ச காலை வெட்டுவேன் என்பார்கள் சிலர்.

அம்பேத்கர் நகரில் தள்ளு வண்டியில் காய் விற்கும் ஒரு அக்காவிற்கு சிம்டம்ஸ் இருந்தது. டெஸ்ட் எடுக்க கேம்ப்பிற்கு அனுப்பி வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டினோம். ரிசல்ட் வரும்வரை வெளியில் வரக் கூடாது என அறிவுறுத்தியும் எங்களுக்குத் தெரியாமல் வெளியில் வந்து காய் விற்றுக் கொண்டிருந்தார். ரிசல்ட் வரும்வரை நீங்கள் வெளியில் வரக் கூடாது, பாஸிட்டிவானால் பரவும் என்றுதான் சொன்னோம். ‘நீ எல்லார் முன்பும் என்னை இப்படி சொல்லீட்ட யாரும் என்கிட்ட இனி காய் வாங்க மாட்டாங்க. என் மன உளைச்சலுக்கு நீதான் காரணம்னு எழுதி வச்சுட்டு சாகப் போறேன்’ என அழத் தொடங்கினார்.

கை குழந்தையுடன் இருந்த இன்னொரு அக்கா, ‘என் வீட்டுக்காரரை அழைச்சுட்டு போயிட்டீங்க. என் கையில் பணம் இல்லை. நான் குழந்தைக்கு பால் வாங்கித் தர என்ன செய்வேன்’ என்றார். அதேபோல் இன்னொரு அக்காவிற்கு பாசிட்டிவ் என வந்தது. அவர் 14 நாள் சரியாகி வீடுவந்து சேரும்வரை அவர் குடும்பத்தில் நாங்க பட்ட பாடு.

எங்களைப் பார்த்தாலே திட்டுவாங்க. இது நம் மீது இருக்கும் கோபம் இல்லை. இந்த மக்கள் பெரும்பாலும் வீட்டுவேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர், காய்கறி வியாபாரம், மீன் வியாபாரம், கட்டிட வேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மெக்கானிக் என வேலை செய்பவர்கள். கொரோனா டெஸ்டுக்குன்னு போனாலே அக்கம் பக்கம் இருப்பவர்கள் இவர்களை வேறுமாதிரியாக பார்க்கிறார்கள். அவர்களின் அன்றாட வருமானமும், தொழிலும் பாதிப்படைகிறது எனப் புரிந்தது. மொத்த குடும்பமும் வறுமையில் சிக்க, அதன் வெளிப்பாடுதான் எங்களைத் திட்டுவது, சபிப்பது எல்லாம்.

இப்போது அதே மக்கள்தான் வாம்மா நல்லா இருக்கியா? சாப்பிட்டியா? எனக் கேட்கும் அளவுக்கு குடும்பத்தில் ஒருத்தரா நாங்கள் மாறி இருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தி, நட்பான பிறகே எங்களை அனுமதிக்கத் தொடங்கினார்கள். தொடர் லாக்டவுன் கொடுத்த மன உளைச்சல், வாழ்வாதாரத்தை எப்படி சமாளிப்பது என்கிற அழுத்தம் இதெல்லாம் சேர்ந்து இந்த எளிய மக்களை இப்படி ரியாக்ட் பண்ண வைக்கின்றது. நெகட்டிவ் என அவர்களுக்கு வந்துவிட்டால், நீ என் மகள் மாதிரி. என் குடும்பக் கஷ்டத்தினால் அப்படிப் பேசிட்டேன். எங்களாலும் நிலைமைய புரிஞ்சுக்க முடியுது என்பார்கள். இதுதான் எளிய மக்கள் நிலை.

என்னை டெஸ்டுக்கு அனுப்பினால் 3 நாள் என்னால் வேலைக்கு போக  முடியாது. பாசிட்டிவ் என்றால் அடுத்த 14 நாள் நான் வேலைக்கே போக முடியாது. நானும் என் குடும்பமும் சாப்பாட்டுக்கு என்ன செய்வோம் என்பதே அவர்களின் கேள்வி? உனக்கு வருமானம் வருது. தினமும் வர்ற. நாங்க என்ன பண்றது என்பதே அவர்களின் ஒட்டுமொத்த வினா? பொருளாதார தேவைதான் அவர்களை பயமுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு ரேஷன் கிட் மட்டுமே தருகிறார்கள். அதில் அரிசி, பருப்பு, பாமாயில் மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வருமான இழப்புக்கு ஒரு தொகை நிர்ணயித்து கொடுத்தால் டெஸ்ட் எடுக்க கட்டாயம் அவர்கள் ஒத்துழைப்பார்கள்.

நாங்கள் 150 வீடுகளையும் விசிட் பண்ண மதியம் 1.30 ஆகும். தினமும் மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், மாதவிடாய் நேரங்களிலும் கால் வலியாக இருக்கும். சில நேரம் முடியாமல் நாங்கள் படியேறுவதைப் பார்த்து அவர்களே இரக்கப்படுவார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் மொத்த சர்வேயும் எங்கள் விரல் நுனியில். மொத்த வீடுகள், அதன் மக்கள் தொகை, குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிம்டம்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட நபர்கள், பாசிட்டிவ் கேஸ், அட்மிட் ஆனவர்கள், சரியாகித் திரும்பியவர்கள், இறப்பு என எல்லா தகவலுமே எங்களிடத்தில் உள்ளது.

மதியத்திற்கு மேல் முகக் கவசத்தின் முக்கியத்துவம், அதன் வகைகள், அதை எப்படி பயன்படுத்துவது, கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி குறித்தும் விழிப்புணர்வுகளைக் கொடுக்கிறோம். அருகாமை பகுதி கடைகளில் சமூக இடைவெளிக்கான வட்டம் போடுதல், கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல்கள், வீதி நாடகம் போன்றவற்றை அந்தப் பகுதி மக்களுக்கு வழங்குகிறோம். இதில் குழந்தைகள் எங்களோடு ஒன்றி விடுவார்கள். பள்ளிகள் இயங்காத நிலையில் கோலி, பம்பரம் விளையாடும் குழந்தைகளை திசைதிருப்பி டிராயிங் போட்டிகளையும் நடத்துகிறோம். லாக்டவுனால் எங்கள் குடும்பங்களிலும் வேலை இழப்பும், வருமானமும் பறிபோனது. இந்த வேலைக்கு எங்களை அனுப்ப ரொம்பவே பயந்தார்கள். தொற்றும் எனத் தெரிந்தும் குடும்ப பிரச்சனை காரணமாய் பாதுகாப்புடன் களமிறங்கினோம். எங்கள் தைரியத்தைப் பார்த்த பிறகே வீட்டில் சம்மதித்தார்கள்.

வருமானத்திற்காகத்தான் வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு பல அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தது. வருமானத்தை தாண்டி இந்த உலகத்தில் நிறைய இருக்கு என்பதை புரிந்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும்போது செமினார்களில் க்ளாஸ் எடுக்கச் சொன்னாலே பயந்த எங்களுக்கு நிறைய தைரியம் வந்திருக்கு. மக்கள் மத்தியில் தைரியமாய் மைக் பிடித்து பேசுகிறோம்.  சர்வதேச அளவில் பரவும் ஒரு நோயில் (pandemic) எங்கள் அமைப்புக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு மற்றும் அனுபவம் என்றவர்கள், கொரோனா இல்லாத தேசத்தை உயிர்ப்பிக்க எங்களின் நீலம் அமைப்பு ரொம்பவே ஸ்ட்ராங்காய் வேலை செய்கிறோம் என கோரசாய் சொல்லி விடைபெற்றனர்.

முத்தமிழ் கலைவிழி நிறுவனர், நீலம் அமைப்பு

சென்னை கார்ப்பரேஷன் நோக்கம் ஸ்லம்(slum) பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுப்பது. எளிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இதற்காக 96 தன்னார்வு அமைப்புகளைத் தேர்வு செய்து மே 19ல் சென்னை கார்ப்பரேஷனோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கம்யூனிட்டி இன்டெர்வென்ஷன் என்பதால் ஏரியாவோடு தொடர்பில் உள்ள அவுட் ரீச் வொர்க்கர்ஸாக(ORW) தேர்வு செய்து நியமித்துள்ளோம். குறைவான தகுதி 10, +2. மாத ஊதியம் 15000. காலை மற்றும் மதிய உணவு டிவிசன் அலுவலகத்தில் கொடுத்துவிடுவார்கள்.

இந்த வேலை டைம் பாஸ் கிடையாது. இவர்களை களத்தில் இறக்கும்போது தொற்று குறித்த பயம் நிறைய இருந்தது. சில முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. பாதுகாப்புக்கு கார்ப்பரேஷனில் மாதம் 5 முகக் கவசம், சானிடைசர்களோடு, சில மல்டி விட்டமின் மாத்திரைகளையும் தருகிறார்கள். தனிப்பட்ட முறையில் அமைப்பின் மூலம் ஃபேஸ் ஷீல்ட் வழங்குகிறோம்.

வீடு, கடை, மக்கள் கூடும் இடம், வாட்டர் பாயிண்ட், கோயில், அந்தப் பகுதி இன்புளூயன்ஸ் நபர் என அனைத்தையும் வரைபடத்திற்குள் கொண்டு வருகிறார்கள். பெண்களாய் இருப்பதால் தொற்றைத் தாண்டி பிறர் கஷ்டத்தை உணர்கிறார்கள். குடும்பத்தில் எந்தவொரு உயிரும் போய்விடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறார்கள். சுருக்கமாய் பவர்ஃபுல் ரிலேஷன்ஷிப் பில்ட் செய்கிறார்கள்.

நோய் தொற்று ஏற்பட்டவர்களை அடையாளப்படுத்துவது, அவர்களைச் சார்ந்தவர்களையும் கண்காணிப்பது, பரிசோதனைக்கு ஒத்துழைக்காதவர்களை காவலர் மூலம் அழைத்துச் செல்ல வைப்பது சானிட்டரி இன்ஸ்பெக்டரை வைத்து ஏரியாவை சுத்தம் செய்வது எனத் தீவிரமாய் வேலை செய்கிறார்கள். மேலும் முகக் கவசம், கபசுரக் குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை வழங்குவது என்று வேலைகள் இருக்கும். இவர்களை ஃபீல்ட் மானிடரிங் செய்ய ஏ.பி.ஒ., ஐ.எஸ்.ஒ அலுவலர்கள் சர்ப்ரைஸ் விசிட் செய்கிறார்கள்.

கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் சர்வே மட்டுமின்றி, எந்த மாதிரியான சமூகத்திற்குள் மாற்றம் கொண்டுவர தன் பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதை உணர்த்த, ஒர்க்‌ஷாப், ரெகுலர் டிரெயினிங், சேலஞ்ச் ஃபேஸ் பண்ண தியேட்டர் டிரெயினிங், ஸ்டீட் பிளே போன்றவற்றை மோட்டிவேஷனலாய் வழங்குகிறோம்.

இந்துமதி, பி.காம்.

அக்கவுண்டென்டாக பணியில் இருந்தேன். இப்போது வேலை இல்லை. வீட்டில் கஷ்டம் என்பதால் இந்த வேலைக்கு வந்தேன். எனக்கு 148 வீடுகள். பாசிட்டிவ் கேஸ் இல்லை.

கனிமொழி, பி.ஏ.பி.எல்., சூப்பர்வைஸர்.

செப்டம்பர் வரையில் 4 மாத புராஜக்ட் இது. எங்களுக்கு விடுமுறைகளே இல்லை. இப்போது தொற்று குறைந்து எங்கள் பகுதிகள் பக்காவாக உள்ளது. விரைவில் கொரோனா இல்லாத தேசமாக இது கட்டாயம் மாறும்.

லெட்சுமி, எம்.எஸ்ஸி.பிஎட்., சூப்பர்வைஸர்.

பள்ளி ஒன்றில் பெற்றோர்-குழந்தைகள் ஆலோசகராய் உள்ளேன். லாக்டவுன் நேரம் என்பதால் பள்ளிகள் இல்லை. எனக்கு அயனாவரம் ஏரியா கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை மிகவும் சாதாரணமாக நினைத்தேன். உள்ளே இறங்கி கால் வைக்கவே முதலில் பயமாக இருந்தது. தரக்குறைவான வார்த்தைகளோடு, சிலர் அடிக்கவே வருவார்கள். முதல் 1 வாரம் மட்டுமே இந்தப் பிரச்சனைகள். இப்போது அனைவரும் நண்பர்களாக, உறவினர்களாகப் பழகுகிறார்கள். நாங்கள்  சொல்வதை அப்படியே கேட்கிறார்கள்.

சுந்தரி, எம்.எஸ்.ஸி.

எனக்கு காந்தி நகர். மொத்தம் 496 வீடுகள். எனக்கு ஒதுக்கப்பட்டது 176 வீடு. முதலில் நான்கு பாசிட்டிவ் நோயாளிகளை அடையாளப்படுத்தினேன். அவர்களும் இப்போது சரியாகிவிட்டார்கள். இறப்பு எதுவுமில்லை. இப்போது அது கொரோனா தொற்று இல்லாத பகுதி.

ஏஞ்சல், ஆசிரியர் பயிற்சி மாணவி.

காந்தி நகரில் எனக்கு 160 வீடுகள். 9 பேரை அடையாளப்படுத்தினேன். எல்லோரும் சரியாகிட்டாங்க. வயதான ஒருவர் மட்டுமே இறப்பு.

பத்மஜா, பி.எஸ்ஸி.பி.எட். கணித ஆசிரியர்.

பள்ளிகள் இயங்காத நிலையில், குடும்பக் கஷ்டத்தால் இந்த வேலைக்கு செல்கிறேன். எனக்கு அம்பேத்கர் நகர். மொத்தம் 552 வீடுகள். இதில் எனக்கு 144 வீடு. இப்போது எல்லோருக்கும் கொரோனா பயம் போய்விட்டது. அறிகுறிகள் இருந்தால் சொல்லி விடுகிறார்கள்.

சர்மிளா, எம்.காம்.

என் அம்மா வீட்டு வேலை செய்பவர். கொரோனாவால் வேலையில்லாமல் போனது. எனவே நான் இந்த வேலைக்கு செல்கிறேன். அம்பேத்கர் நகர் வீராச்சாமி தெருவில் எனக்கு 160 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 பாசிட்டிவ் கேஸ்களை அடையாளப்படுத்தினேன். 4 பேர் ஹோம் கேரில் சரியானார்கள்.

சிவபாக்கியம், எம்.ஏ.

என் கணவருக்கு வேலை இல்லை. பெரியார் சாலையில் மொத்தம் 200 வீடுகள். எனக்கு 147 வீடுகள் ஒதுக்கப்பட்டது. 5 வீடுகளில் பாசிட்டிவ் இருந்தது. அதில் ஒருவர் மட்டுமே அரசு மருத்துவமனையில் இருக்கிறார். 4 பேர் சரியாகி வீட்டுக்கு திரும்பி விட்டார்கள்.

தாமரைச் செல்வி, பத்தாம் வகுப்பு.

கே.கே.நகர் மற்றும் செட்டித் தோட்டம் என் ஏரியா. மொத்தம் 155 வீடுகள். கேகே. நகரில் 3 நபரையும் செட்டி தோட்டத்தில் 1 நபரையும் அடையாளப்படுத்தி உள்ளேன்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Related Stories:

>