செலிபிரிட்டிக்கே இந்த சிக்கலா?!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

ஒரு சிறப்பான சிகிச்சை என்பது துல்லியமான நோய் கண்டறிதலில் இருந்தே தொடங்குகிறது. மலேரியாவை டைபாய்டு என்று புரிந்துகொண்டு சிகிச்சை தொடங்கினால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்... முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றுதானே ஆகும்?! இதனை மருத்துவர்களின் அலட்சியம்(Medical negligence) என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மருத்துவர்களோ Medical error என்று சமாளிக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை யாரும் இதிலிருந்து தப்பிப்பதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணமாகி இருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்றாலும், ‘அச்சம் என்பது மடமையடா’ மூலம் தமிழில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்திருந்தார்.

 

‘சில வாரங்களுக்கு முன்பு இரும்பு கதவு ஒன்றில் இடித்துக் கொண்டேன். மருத்துவமனைக்கு சென்றபோது சாதாரண காயம்தான் என்று மருந்து வைத்து கட்டினார்கள். ஆனால், காயம் ஆறவில்லை. சீழ் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. மீண்டும் பரிசோதனை செய்தேன். அப்போதுதான் காலில் இரும்பு துகள்கள் இருந்தது தெரிய வந்தது. இப்போது அறுவை சிகிச்சை செய்து இரும்புத்துகள்களை அகற்றிவிட்டார்கள்.

ஒரு மாதமாக காலில் கட்டுடன் படுக்கையிலேயே கழித்து வருகிறேன். படுத்த படுக்கையாக இருப்பது எளிதானது இல்லை. இதனால் எனது வேலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றன’ என்று கூறியிருக்கிறார். பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை என்னவென்ற கேள்வியையே மீண்டும் மஞ்சிமாவின் சூழல் உணர்த்தியிருக்கிறது.

மருத்துவர்கள் பற்றாக்குறை, நேரமின்மை என்று இதுபோன்ற தவறுகளுக்கான காரணங்களை எளிதில் சொல்ல முடியும். ஆனால், ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுமளவுக்கான அபாயம் இந்த மருத்துவத் தவறுகளில் இருக்கிறது. எனவே, அதையும் புரிந்துகொண்டு கூடுதல் கவனத்துடன் நோயாளிகளைக் கையாள வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு இருக்கிறதுதானே?!

தொகுப்பு: என்.ஹரிஹரன்

Related Stories: