பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்... ஆளும் அரசை மிரள வைத்த பெண் சிங்கம்!

நன்றி குங்குமம் தோழி

கான்ஸ்டபிள் சுனிதா

கடந்த  வாரம் சமூக ஊடகங்களில் டிரெண்டிங். மிடுக்கான உடல் மொழி. அதட்டல் நிறைந்த குரல். “ஷ்ஷ்ஷ்... வாயை மூடு.. நீ யாரா இருந்தா எனக்கென்ன” என உருட்டல் மிரட்டலோடு மினிஸ்டர் மகனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தொனி என வைரலானார் இந்த துணிச்சல் பெண். குஜராத்தின் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிள் சுனிதா சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் இரவுப் பணியில் பாதுகாப்பிற்காக இருந்துள்ளார். அப்போது ஐவர் கொண்ட கும்பல் மாஸ்க் அணியாது ஊரடங்கு விதிமுறையை மீறி காரில் வந்துள்ளனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய சுனிதா விசாரணையில் இறங்கியுள்ளார்.

பதிலுக்கு அவர்களோ அவரை அலட்சியப்படுத்தி, தன் நண்பரும் குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்து சம்பவத்தைச் சொல்ல, அடுத்த சில மணித் துணிகளில் அமைச்சரின் காரில் பந்தாவாக வந்த அவரது மகன் பிரகாஷ் கனானி, தன் நண்பர்களை விடுவிக்கும்படி கான்ஸ்டபிள் சுனிதாவிடம் கேட்டுள்ளார். சுனிதா இதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

'ஊரடங்கு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற உங்களுக்கெல்லாம் யார் அதிகாரம் கொடுத்தது. இந்தச் சமயத்தில் இந்தியப் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என கான்ஸ்டபிள் சுனிதா கூற, பதிலுக்கு அமைச்சரின் மகனோ 'வருடத்தின் 365 நாட்களும் உன்னை இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என மிரட்ட, 'நான் உன் வீட்டுப் பணியாளோ அடிமையோ இல்லை’ என துணிவாக பதில் அளித்தார். பிறகு சுனிதா, தனது காவல் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து சம்பவத்தை தெரிவிக்க, அவரோ பதிலுக்கு சம்பவ இடத்திலிருந்து சுனிதாவை வெளியேறுமாறு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

அமைச்சரின் மகனும் கான்ஸ்டபிள் சுனிதாவும் பேசும் காணொளி சமூக வலைத் தளங்களில் வைரலாக, அமைச்சர் மகனுக்கு எதிர்ப்பும், சுனிதாவுக்கு பாராட்டும் மக்களிடம் அதிகரித்தது. ‘சிங்கப் பெண்’, ‘லேடி சிங்கம்’ என  சுனிதா சமூக ஊடகங்களால் தொடர்ந்து பாராட்டப்பட்டார். இந்த விவகாரம் குஜராத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியது. தன் மகனின் செயலுக்கு விளக்கமளித்த அமைச்சர் குமார் கனானி, ‘எனது மகன் அவரது மாமனாருக்கு ஏற்பட்ட கொரோனா  சிகிச்சைக்காகவே எனது காரை எடுத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழி மறித்த பெண் கான்ஸ்டபிள் ‘வண்டியில் ஏன் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது?  நீங்கள் ஏன் இந்தக் காரில் வந்தீர்கள்?’ எனக் கேள்வி கேட்டுள்ளார். என் மகனின் விளக்கத்தை அவர் புரிந்துகொள்ளாத நிலையில் ஒருவருகொருவர் விவாதித்துள்ளனர்எனக் குறிப்பிட்டுள்ளார்.

விவகாரம் பெரிதாகவே அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் ஊரடங்கை மீறியதாகக் கைது செய்யப்பட்டு ஐ.பி.சி. 144, 188, 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சுனிதா போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு, தொடர் மருத்துவ விடுமுறையில் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த பல்வேறு அழுத்தங்கள் காரணமாக கான்ஸ்டபிள் சுனிதா தனது காவல் துறை பணியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. வழக்கு விசாரணையில் இருப்பதால், அவரின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சுனிதா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், ‘‘ஏராளமான மிரட்டல்கள், அவதூறு பேச்சுகள் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக எனக்கு வந்து கொண்டே இருக்கின்றது. அமைச்சரின் மகன் போன்றவர்கள் தங்களை வி.வி.ஐ.பி என நினைத்துக் கொள்கிறார்கள். அங்கே நான் சீருடையிலிருந்தேன்.

சாதாரண பெண்ணிடம் கூட அவர்கள் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. ஒரு காவலராய் நான் எனது கடமையைச் செய்தேன். ஜவான் ஒருவர் நடந்த சம்பவத்தை கைபேசியில் பதிவு செய்திருக்காவிட்டால், நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்பதை என்னால் நிரூபிக்க முடியாமலே போயிருக்கும். குமார் கனானியின் மகன் என் செல்போனை அப்போது பறித்துக் கொண்டார். அதைத் திரும்பப் பெறுவதற்கு நான் அவருடன் சண்டையிட வேண்டியிருந்தது. அதனால் தள்ளுமுள்ளு வேறுஏற்பட்டது. மிகுந்த சிரமத்திற்குப் பிறகு எனது கைபேசியை மீட்டேன்’’ எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, ‘‘சீருடை அணியும் போது எப்போதும் நான் என்னை ரொம்பவும் பெருமையாக உணர்வேன். இனி அந்தப் பெருமை எனக்குக் கிடைக்காது. என் காக்கி சீருடையின் கண்ணியம் இங்கே திருடப்பட்டு விட்டது. உயர் பதவியில் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உணர்ந்த தருணம் அது. உயர் பதவியை அடைந்த பிறகே சீருடை அணிவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். என் எண்ணமெல்லாம் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற வேண்டும் என்பதிலே இப்போது இருக்கிறது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories:

>