×

கழுகுமலை கோயிலில் சுவாமி கழுகாசலமூர்த்தி பச்சை சாத்தியில் வீதியுலா: நாளை தேரோட்டம்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவின் 8ம் நாளான இன்று சுவாமி  கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி அலங்காரத்தில் வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ம்தேதி புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அதிகாலை 5மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் 7ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிகப்பு மலர் சூடி சிவன் அம்ச(ருத்திரர்) வீதியுலாவும், வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்ச வீதியுலாவும் நடந்தது. 8ம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி கழுகாசலமூர்த்தி, பச்சை சாத்தி அலங்காரத்தில் திருமால் அம்சமாக வள்ளி, தெய்வானையுடன் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.  இந்நிகழ்ச்சி தை மற்றும் பங்குனி மாதத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சண்முகர் சிவன் மற்றும் பிரம்மன், திருமால் அம்சமாக காட்சி தருகிறார். இதனால், கோவில் நடை இரவு முழுவதும் அடைக்காமல் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இதில்  தொழிலதிபர் ராமமூர்த்தி, கந்தசாமி, கழுகுமலை ரெட்டியார் மண்டப நிர்வாகி ராமசாமி, முருகன், காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், வட்டார ரெட்டி சமுதாயத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 17ம்தேதியான நாளை விழாவின் சிகரமான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மேற்கொள்ளப்படும். காலை 6 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து 8.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி முக்கிய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

வரும் 18ம்தேதி (நாளைமறுநாள்) தீர்த்த வாரியும், இரவு 8மணிக்கு தபசு காட்சியும் 19ம்தேதி திங்களன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், 20ம்தேதி பட்டினப் பிரவேசம், 21ம்தேதி மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் சீர்பாத தாங்கிகள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



Tags : Swami Kangasalamurthi Green Satyula ,Kakumalamalai Temple , Swami Kalugasalamoorthy Green Sathi Veediula at Kalugumalai Temple: Tharottam tomorrow
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...