×

ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கும் 8ம் வகுப்பு மாணவி!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா தொற்று தொடங்கி 100 நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. பள்ளிகள் எல்லாம் ஆன்லைன் முறையில் கல்வியினை ஆரம்பித்துவிட்ட நிலையில், வீட்டில் மற்ற நேரங்களை பயனுள்ளதாக கழித்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமி கோமதி மாரி. எட்டாம் வகுப்பு படிக்கும் மாரி, வண்ண தாள்களை கத்திரிக்கோலால் வெட்டி அலங்கார பூக்கள் மற்றும் பிற கைவினை பொருட்கள் என 50க்கும் மேற்பட்ட வீட்டு அலங்கார பொருட்களை செய்துள்ளார். இவை அனைத்தும் இவரது வீட்டில் அலங்கார பொருட்களாக அலங்கரிக்கின்றன.  

‘‘நான் 3ம் வகுப்பு படிக்கும் போதே சிறு சிறு பேப்பர்களை வெட்டி அதில் அழகான பூக்கள் உருவாக்க பழகினேன். இதுதான் இந்த நேரத்தில் என்னுடைய மிகப் பெரிய பொழுதுபோக்காக மாறியுள்ளது. பைண்டிங் கலர் தாளில் தோகை விரித்தாடும் வண்ண மயில், கோவை பழத்தை கொத்தி தின்னும் கிளி, அன்பை பரிமாறும் கிளிகள் மரக்கிளையில் அமர்ந்து இருப்பது என சின்னச் சின்ன நுணுக்கங்களை என்னுடைய வேலைப்பாட்டில் இணைத்து இருக்கிறேன்.

இதயத்திற்கு இடையே கிளிகள் அமர்ந்து அதன் மேல் பகுதியில் சிவப்பு வண்ண பேப்பர் ரோஜாக்களை ஒட்டி அலங்கரித்துள்ளேன். இதை செய்ய இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும். ஒரே அட்டையில் 3 ரோஜாக்களை உருவாக்கி அதில் 3 வித வண்ண பெயிண்டிங் அடிப்பது சிரமமானது. இதனால் பொழுது போகவில்லை என்ற பேச்சுக்கு இடமில்லை. எனது பக்கத்து வீட்டு ஆன்டி ஒருவர் நான் உருவாக்கிய வண்ண மயில் சிற்பத்தை 50 ரூபாய் கொடுத்து வாங்கி சென்றார்.

இது எனது வாழ்வில் முதன்முதலில் சம்பாதித்த தொகை என்பதால் அதை உண்டியலில் போட்டு வைத்துள்ளேன். எனது அலங்கார பொருட்களை போட்டோ ஸ்டாண்டாகவும் பயன்படுத்த முடியும். எனது  பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியை அவர்கள் அளித்த ஊக்கமும்தான் எங்க ஊரில் அலங்கார பொருட்கள் என்றால் மாரி என்று பெயர் வாங்கி தந்துள்ளது.

இப்போது பக்கத்து வீடுகளில் பிறந்தநாள் என்றாலும் சுப நிகழ்ச்சிகள் என்றாலும் எனது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள் அங்கு இடம்பெறுகின்றன. பேரிடர் காலமான இந்த விடுமுறை நாட்களில் ஏற்கனவே எனது மனதில் இருந்த அலங்கார பொருட்களை வடிவமைத்து வருகிறேன். இதனை மேலும் சிறப்பாக செய்யும் அளவிற்கு எனது திறமையை வளர்த்துக் கொள்வேன்’’ என்றார் கோமதி மாரி.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : student ,
× RELATED முத்தையாபுரத்தில் பைக் மீது கார் மோதி மாணவன் பரிதாப பலி