கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பிலை மற்றும் ஒரு கையளவு உப்பு ஆகியவற்றை போட்டு அதன்மேல் கோதுமையை கொட்டி வைத்தால் எத்தனை நாளானாலும் கோதுமையில் வண்டு வராது.

*அவல் பொரியைப் பாகில் போடும் முன்பாகப் பொரியை வெறும் வாணலியில் லேசாகச் சூடு செய்து போட்டுப் பிடித்தால் கரகர பொரி உருண்டை கிடைக்கும்.

*காய்கறிகளை வதக்கும்போது எண்ணெயில் அரை ஸ்பூன் உப்பை போட்டு விட்டுப் பிறகு வதக்குங்கள். எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அடிப்பிடிக்காமல் சீக்கிரம் வதங்கும். உப்புடன் வதங்குவதால் காய் அதிக ருசியாக இருக்கும்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிது ஓமத்தையோ அல்லது சுக்குப் பொடியையோ சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி வாசனையாகவும் இருக்கும். சுலபமாக ஜீரணம் ஆகும்.

*இட்லி தோசைக்கு உளுந்தம்பருப்பு அரைக்கும்போது கொஞ்சம் பெருங்காயத்தைச் சேர்த்து அரைத்தால்

கமகமவென்று மணமாக இருக்கும்.

- N. குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

*வாணலியில் கருமை படிந்திருந்தால் சிறிது காபி தூளைக்கொண்டு தேய்த்துக் கழுவினால் சுத்தமாய் இருப்பதோடு கீறல் விழுவதையும் தடுக்கலாம். இதனை நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கும் பயன்படுத்தலாம்.

*முட்டைக்கோசை பொரியலுக்கோ, கூட்டுக்கோ நறுக்கிய பின் அதில் எஞ்சியுள்ள தண்டுப்பகுதியை சாம்பாரில் போட்டு சமைத்தால் மணமும், ருசியும் கொண்டதாய் இருக்கும்.

- கஸ்தூரி லோகநாதன், சென்னை.

*தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், வெந்தயம், வெங்காயம் சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுது, உப்பு தேவையான தண்ணீர், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். பின்னர் நறுக்கிய மாம்பழத்துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.

*தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சித்துண்டுகள் சேர்த்து அரைத்து ‘தோசை’ வார்க்க இஞ்சி மணத்துடன்

அருமையான தோசை தயார்.

*நறுக்கிய நெல்லிக்காய்த்துண்டுகளை, குடிக்கும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து குடிக்க, சுவையான மருத்துவ குணம் மிக்க குடிநீர் தயார்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*விளாம்பழம் ஒன்றை எடுத்து பால் ஊற்றி வெண்ணெய் போல அரைத்து வெல்லப்பாகுடன் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்ய வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

*புளி வைக்கும் பாத்திரத்தின் அடியிலும் மேலும் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் புளி கெடாமலிருக்கும்.

*குலோப் ஜாமூனுக்கு செய்து வரும் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும், கெட்டுப் போகாமல் இருப்பதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.

- ஆர்.பூஜா, சென்னை.

*காலிஃபிளவர், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு ஊற்றிச் செய்தால் அதன் ருசியே அலாதி.

*ரசம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களை வறுத்துப் பொடி செய்து பின் ரசம் வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளிக்க ரசம் சுவையாக இருக்கும்.

*சாம்பாரில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது கடலை மாவை அதனுடன் சேர்க்க சாம்பார்  சகஜ நிலைக்கு வந்துவிடும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*அடைக்கு அரைக்கும்போது சிறிது ஜவ்வரிசி சிறிது கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால் அடை மொறு மொறுவென்றும், மிருதுவாகவும் இருக்கும்.

*வேப்பம்பூவை எண்ணெயில் தெளித்து வைத்துக்கொண்டு ரசம் ஊற்றிக்கொண்ட பின்பு மேலாகத் தூவிக் கொண்டு சாப்பிட்டால், மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

*தோசை மாவு அளவுக்கு அதிகமாக புளித்துவிட்டால் சிறிது சர்க்கரை கலந்தால் சரியாகி விடும்.

*சமைத்து உணவு கெட்டுவிட்டால் அதை கீழே கொட்டி விடாமல் செடிகளின் பக்கவாட்டில் கொட்டி மண்ணுடன் கலந்துவிட்டால் நல்ல உரமாகும்.

4மோர்க்குழம்பு வைப்பதற்கு, மிளகாய் அரைக்கும்போது மிளகாயை நன்றாக வதக்கி பிறகு அரைத்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும். அரைப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

- ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

வாழைத்தண்டு புளிக்குழம்பு!

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று வாழைத்தண்டு. வாழைத்தண்டில் அதிக அளவு நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

சத்துக்கள் நிறைந்த வாழைத்தண்டை வைத்து எளிமையான முறையில் சுவையான வாழைத்தண்டு புளிக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - அரை அடி நீளத்துண்டு

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

தக்காளி - 2

காய்ந்த மிளகாய் - 6

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்  

சீரகம் - அரை டீஸ்பூன்  

தனியா - 2 டேபிள் ஸ்பூன்  

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்  

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு - 1 டீஸ்பூன்  

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெல்லம் - சுண்டைக்காய் அளவு.

செய்முறை

வாழைத்தண்டின் தோலை சீவி, வட்டமாக நறுக்கி, அதை இரண்டாகவோ அல்லது நான்காகவோ நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் தனியா தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து லேசாக வதக்கவும்.

ஆறியதும், தேங்காய்த் துருவலை சேர்த்து நைசாக அரைக்கவும்.  புளியைக் கரைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அதனுடன் வாழைத்தண்டுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும். சுவையான வாழைத்தண்டு புளிக்குழம்பு தயார்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

Related Stories:

>