×

பிரச்னைக்கான தீர்வு நம்மிடம்தான் உள்ளது!

நன்றி குங்குமம் தோழி

“இந்தக் காலத்தில் பெண்களுக்கு எவ்வளவோ வாய்ப்புகள், குடும்பத்தார் ஆதரவு, வசதி வாய்ப்புகள், படிப்புகள்… என எல்லாமே இருக்கும்போது கொஞ்சம் உழைத்தாலே போதும் எங்கேயோ போகலாம்” என்கிறார், இதுபோன்ற எந்த ஒரு வாய்ப்பும், வசதியும் இல்லாமல் தனது அயராத  உழைப்பின் மூலம் மட்டுமே இன்று ஓர் உயர் பதவியில் இருக்கும் விஜய கிருஷ்ணன்.

பிரபல விளம்பர நிறுவனத்தில் தென் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருக்கும் விஜயக்கு, படங்கள் வரைவது, கோலங்கள் போடுவதில் அலாதி ஆர்வம்.“ஒரு ஹாபிக்குதான் வரைய ஆரம்பித்தேன். பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றில் திரு.கேசவ் வெங்கடராகவன் என்பவர் ‘கிருஷ்ணா ஃபார் டுடே’ என்ற தலைப்பில் தினம் ஒன்று என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருஷ்ணர் உருவங்களை வரைந்திருந்தார்.

அவர் வரைந்த ஓவியத்தை ரங்கோலியில் வரைந்தால் என்ன என்று எனக்குள் எண்ணம் ஏற்பட்டது. அவரிடம் அவரின் ஓவியங்களை நான் ரங்கோலியில் வரையலாமான்னு பர்மிஷன் கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் சரி என்றார். இரண்டு வருஷமா நானும் அவர் வரைந்த கிருஷ்ணர் படங்களில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்களை ரங்கோலி கோலங்களாக போட்டுள்ளேன். ஒவ்வொரு கோலமும் போட்டு முடிக்க எப்படியும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும். மார்கழி மாதத்தில் முதல் நாள் இரவே கோலம் போடுவது வழக்கம். பின் மறுநாள் அழிச்சுட்டு புது கோலத்துக்குத் தயாராகுவேன்.

நான் போடும் கிருஷ்ணர் கோலங்களை படம் பிடித்து அவருக்கு அனுப்பியும் வைப்பேன். ‘இவ்வளவு அழகா போட்டுட்டு, அதை எப்படி அழிக்க மனசு வருது’ன்னு அவர் கேட்டபோது அதை புகைப்படமாக பொக்கிஷமாக சேமித்து வைத்திருக்கேன் என்பதுதான் என்னுடைய பதிலாக இருந்தது. சங்கராச்சாரியாரை ஐம்பது படங்களுக்கு மேல் வரைந்திருக்கிறேன்.

கோயில் கற்சிற்பங்களை தற்போது ஆர்வமாக வரைந்து கொண்டிருக்கிறேன். இப்படி நானாகவே கற்றுக் கொண்டு வரைய ஆரம்பித்த படங்களை எக்ஸிபிசனில் வைப்பதோடு மட்டுமல்லாமல், 30 திருப்பாவைப் பாடல்களையும் ஒரு பெரிய ஹாலில் கோலமாகப் போட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவு. எப்படியும் இந்த கோலங்கள் போட எனக்கு, இரண்டு வாரங்களுக்கு மேல் கூட ஆகலாம்” என்று கூறும் விஜய, கடந்து வந்த பாதை சாதனை படைக்கத் துடிக்கும் பெண்களுக்கான ஓர் உதாரணம்.

‘‘பிளஸ் 2 முடிவுகள் வந்து மார்க் சீட் வாங்கிவிட்டு வீடு திரும்பியவளிடம், ‘நாளை உனக்குத் திருமண நிச்சயதார்த்தம்’ என்று மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த என் அம்மா சொன்ன போது, விவரம் புரியாத 16 வயதிலிருந்தேன். திருமணம் முடிந்த அடுத்த மூன்று வருடங்களில் மணியான இரண்டு ஆண் குழந்தைகள். அந்த 19 வயதில் தொடர்ந்து கணவரால் பல இன்னல்கள், கவலைகள்… இப்போது போல் பிரிந்திருப்பது, விவாகரத்து என்று பேசினால் பெண்களுக்குத்தான் முதல் அறிவுரை. கற்றிருந்த தையல் தொழில் என்னை கைவிடவில்லை.

எதிரிக்குக் கூட வரக்கூடாத கஷ்டங்களை அனுபவித்து எதிர்கொண்டு வந்திருக்கிறேன். கேள்விக்குறியான எதிர்காலத்தை நோக்கி எதிர்நீச்சல் போட்டேன். அந்த நேரங்களில் எனக்கான ஆறுதல் மாமனாரும், மாமியாரும். அவர்களின் அனுமதியோடு கணவரைப் பிரிந்து குழந்தைகளுக்கான என் வாழ்வை 1993-ல் தொடங்கினேன்.

வாழ்க்கை ஓடியது... நானும் ஓடினேன். கடவுள் அருள், நல்ல நட்புகள், மாமியார், மாமனார் அவர்களின்  ஆசீர்வாதங்கள்… இவைகள் துணைவந்தன. கஷ்டங்கள், நஷ்டங்கள், இழப்புகள், இறப்புகள்... கொஞ்ச நஞ்சமல்ல.  துன்பங்களும் துயரங்களும் இருந்தாலும்  இறைவனின் கருணை, அவன் அளித்த மனோதைரியம், இடைவிடாது பதினெட்டு மணிநேர ஓய்வில்லா உழைப்பு ,அதற்கான உடல் வலிமையும் கூடவே தந்தான்.

இருபது வருடங்கள் என்னைப் பலவாறாகச் சோதித்தவன், அதிலிருந்து மீள்வதற்கு வழியும் காட்டி பொற்காலத்தை தற்போது கொடுத்திருக்கிறான். இரண்டு மகன்களும் கை நிறையச் சம்பளத்துடன் வேலை பார்த்துவந்தாலும், என் தொழிலில் ஏற்பட்ட கடன்களை மகன்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல், சுயமாக உழைத்துச் சம்பாதித்து அடைக்கும் திறன் தந்து சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளான் இறைவன்.

பலருக்கு உதவும் ஒரு வாய்ப்பு. தேவைக்கு மேல் வருவாய். நோயற்ற வாழ்க்கை. எவரிடமும் எதற்கும் கையேந்த வேண்டா நிலை. அலுவலகம், உடற்பயிற்சி, ஸ்லோகம், பாட்டு, கோலம், பூஜை, பெயிண்டிங், விதவிதமான சமையல், பயணங்கள்… என்னவெல்லாம் செய்ய தோன்றுகின்றதோ அத்தனையும் சுதந்திரமாகச் செய்கிறேன். இதைவிட என்ன வேண்டும்? யாருக்கு கிடைக்கும் இன்று எனக்குக் கிடைத்த வாழ்க்கை. எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் ஓடாமல், அதை எதிர்கொண்டு போராட வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு இல்லாமல் இல்லை. அதற்கு நம் முயற்சி மட்டும்தான் வேண்டும்” என்று நம்பிக்கையான வார்த்தையால் தன் வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்தார் விஜய ஸ்ரீகிருஷ்ணன்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு