×

வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வாய்ப்புகளைத் தானாக அமைக்க நேரிடும். அவ்வாறு அமையும் வாய்ப்பினைக் கூட நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். ஆனால், தானாக அமையும் வாய்ப்புகளை விட தனக்காக ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிற்கு வீரியம் அதிகம். அந்த வழியில் தனக்காக அமைத்துக் கொண்ட பாதையில் வெற்றி பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்காக ஐந்து விருதுகளைப் பெற்றிருக்கும் நடிகர் ஸ்ரீனி.

“கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு நல்ல நடிகனாகணும் என்பதற்காக முயற்சியும் அதற்கான பயிற்சியும் செய்து கொண்டிருக்கிறேன். நிறைய இடங்களில் வாய்ப்புகள் தேடிய போது புறக் கணிப்புகள்தான் அதிகமாக இருந்தது. நாம் தான் வாய்ப்பை உருவாக்கணும், அதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தணும், அதன் மூலம் நல்ல படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பத்து நண்பர்களை ஒருங்கிணைத்து முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு ‘பொம்மை வச்ச பென்சில்’ என்கிற ஒரு குறும்படம் எடுத்தோம்.

கௌதம் ராஜேந்தர் இயக்கிய அந்த குறும்படத்திற்கு ஸ்பெஷல் கேட்டகரி விருதும் கிடைத்தது. அதன் பின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘நானும் இந்த உலகத்தில் தான் இருக்கிறேன்’ என்ற 10 நிமிட குறும்படத்தில், சிங்கில் ஷார்ட்டில் ஒரு பெர்ஃபார்மன்ஸ் செய்திருந்தேன். அடுத்து ‘தோழர்’ என்ற குறும்படத்தில் 45 வயது நபராக வாழ்ந்திருப்பேன்” என்று கூறும் னி, ‘எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படம் உருவான விதத்தைக் கூறினார்.

“எந்த வித சினிமா பின்புலமும் இல்லை. ஏழ்மையான குடும்ப பின்னணி. இங்கு நமக்கு மட்டுமில்லை, என்னைப் போல் பலருக்கும் பிளாட்பார்ம் இல்லை என்பதை ஒவ்வொரு சினிமா நண்பர்களை சந்திக்கும் போது தெரிந்து கொண்டேன். எனவே நாம் தான் பிளாட்பார்ம் உருவாக்க வேண்டுமென்று, ‘பிளாட்பார்ம்’  என்ற பெயரிலேயே சிறிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தேன்.

குறும்படங்கள் தயாரிப்புக்கு மொத்தமாக பணம் போடுவதற்கு என்னிடம் வசதி இல்லை, ஆனால் நல்ல நண்பர்கள் சுற்றியுள்ளனர். எங்கள் குழுவில் ஐந்து கேமராமேன், இரண்டு எடிட்டர், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள்… என்று ஒரு படம் எடுக்க தேவையான அத்தனை பேரும் உள்ளனர். எனவே தயாரிப்பு செலவு மட்டுமே ஒழிய, அவர்களுக்கான தொகை இல்லை.  

‘எது தேவையோ அதுவே தர்மம்’ படத்தின் இயக்குநர் து.ப. சரவணன் கதை சொன்னதுமே பிடித்துவிட்டது. இதை என்னால் மட்டுமே பண்ண முடியாது. எனவே இயக்குநர், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் பங்கு பெரியது. வினோத்தான் அதிக சப்போர்ட் பண்ணான். ஷீலாவும் அப்பதான் ‘டூலெட்’ முடிச்சு இருந்தாங்க. அவங்களுக்கும் கதை பிடித்து நடித்து கொடுத்தாங்க. சினிமாவில் நான் வாய்ப்பு தேடி போற இடத்தில் நண்பர்கள் ஆனவர்கள் இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்தாங்க. எப்படியோ ஒரு வழியா படத்தின் அவுட் எடுத்தோம்” என்று கூறும் னி இக்குறும் படத்திற்கு கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி பேசினார்.

“தமிழ் ஸ்டுடியோ அருண், சினிமா மீது பற்றுள்ளவர். 2019 ஆம் ஆண்டு அவங்க ஒருங்கிணைத்த ‘பாலுமகேந்திர’ திரைப்பட விழாவில் எங்கள் படத்தையும் அனுப்பி இருந்தோம். அதில் டாப் 10ல் தேர்வானது. நம்முடைய படத்தை முதன் முறையாக 70mm தியேட்டரில் பார்க்கும் போது அந்த தருணம் மறக்க முடியாத அனுபவம். விருதுகள் எல்லாம் மற்ற படங்களுக்கு போய்க் கொண்டிருந்த நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் என்று எங்கள் படத்திற்கு விருது கிடைத்தது. வந்திருந்த ஆடியன்ஸ் எல்லாம் ஓட்டு போட்டு என் படத்திற்கு ஒரு விருது வழங்கினாங்க.

அது தவிர பாலுமகேந்திர சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், அதில் நடிச்சிருந்த குட்டி பையனுக்கும் விருது கிடைத்தது. இந்த விருதுகள் எங்கள் குழுவிற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. தொடர்ந்து பல திரைப்பட விழாக் களுக்கு அனுப்பி வைத்தோம். அவ்வாறு அனுப்பியதன் விளைவு சிறந்த நடிகருக்காக ஐந்து விருது களும், சிறந்த படம் போன்ற பிரிவுகளில் 15 விருதுகளும் என மொத்தம் 20 விருதுகளுக்கு மேல் கிடைத்தது.

பெரும் நம்பிக்கையை எங்கள் குழுவில் ஏற்படுத்திய இந்த குறும்படத்தை யாரை வைத்து ரிலீஸ் செய்யலாம் என்று பல சினிமா பிரபலங்களை தொடர்பு கொண்டோம். அதில் எங்களுக்கான முதல் அங்கீகாரம் கொடுத்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சார். அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சார். மூன்றாவதாக இயக்குநர் ரஞ்சித் அண்ணன். மொத்த டீமுக்கும் கான்பிரன்ஸ் போட்டு பேசினாங்க. விஷால் சார் எங்களை வாழ்த்தியதோடு எங்க டீமோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதாக வாக்கும் கொடுத்துள்ளார்.

இவர்களோடு சேர்ந்து இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராஜு முருகன், விஜய் மில்டன், அருண்ராஜா காமராஜ், நவீன், தேசிங்கு பெரியசாமி, கணேஷ் விநாயக், சண்முகம் முத்துசாமி, விருமாண்டி, அருண் மோ, ஆனந்த குமரேசன், எழுத்தாளர்கள் கொற்றவை மற்றும் M K மணி ஆகியோர் வெளியிட்டார்கள்” என்று கூறும் னி தனக்கு நடிப்பின் மீது வந்த ஈர்ப்பு, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றி
கூறினார்.

“சின்ன வயதிலிருந்தே எல்லா நடிகர்கள் மாதிரி நடித்து மிமிக்ரி செய்வேன். பிறந்ததிலிருந்தே அப்பா கிடையாது. அம்மாதான் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாங்க. அதற்கு மேல் வேலைக்கு போய் படித்தேன். லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்க ரொம்ப ஆசை. கிறிஸ்டியனும் இல்லை,
வசதியும் இல்லாததால் அங்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால், அதே கல்லூரியில் மீடியா தொடர்பான வேறு படிப்பு படிச்சேன். அங்குதான் 15 நிமிடத்திற்கு முதல் மேடை கிடைத்தது.

படிப்பு முடித்த பின் நடிக்க ஆசை இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். என்னதான் வேலை செய்தாலும், சினிமா தான் எனக்கான பாதை என்று முடிவு செய்து, 2014ஆம் ஆண்டிலிருந்து முழு நேரம் அதை நோக்கி பயணப்பட்டேன். தற்போது திரைப்படம் ஒன்றில் செகெண்ட் லீடாக நடித்துள்ளேன். அந்த படம் வெளியே வரும் போது நானும் வெளியே தெரிவேன் என்று நம்புகிறேன்.

அடுத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘வெல்வட் கில்லர்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறேன். எங்கள் குழு வெள்ளித் திரையில் கால் பதிக்க காத்துக் கொண்டிருக்கிறோம். அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஸ்ரீனி.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!