×

வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்... விரும்பிய வருமானம் ஈட்டலாம்!

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

2020ம் ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்றும் நாம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். காரணம் அந்த ஒற்றை அரக்கன் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் பெரிய அளவில் பின்னடைவினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. வாழ்க்கைக்கான பாடத்தை இந்த கொரோனா பலருக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். காரணம் எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காகவே இந்த காலத்திலும் தனக்கான ஒரு வாழ்க்கை முறையினை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள்.

‘‘பெண்கள் வேலைக்கு சென்றுதான் தனக்கான ஒரு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே அதற்கான வழியினை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பல யுக்திகள் உள்ளன. அதனை நாம் திறமையுடன் செயல்படுத்தினாலே போதும், ஊரடங்கு காலத்திலும் நமக்கான வருமானத்தை கணிசமாக நாம் பெறமுடியும். அதன் அடிப்படையில் உருவானது தான் ‘செந்கா குழுமம்’
என்கிறார் சென்னை அண்ணா நகரை சேர்ந்த காஞ்சனா.

‘‘நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் தான். எல்லா பெண்களைப் போல படிப்பு முடிஞ்சதும் எங்க வீட்டில் எனக்கு திருமணம் செய்து வச்சாங்க. என் கணவர் ஒரு பிசினஸ்மேன். அவர் மாற்றுத்திறனாளி என்பதால், அவருக்கு தொழிலில் நான் உறுதுணையாக இருந்தேன். எனக்கு பிசினஸ் குறித்து எதுவும் தெரியாது. இவருக்கு உதவ போன போது தான் ஒரு தொழிலை எப்படி இயக்கணும்ன்னு தெரிந்து கொண்டேன். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதனை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

அதே போல் லாபமும் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் விட நாம் செய்யும் தொழிலுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் ஆதரவு இருக்க வேண்டும். இது போன்ற பல விஷயங்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நாம் ஏன் சொந்தமா தொழில் ஒன்றை ஆரம்பிக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. என் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவரோ, ‘‘உன்னால் முடியும் என்றால் கண்டிப்பாக செய்’’ என்று ஆதரவு அளித்தார். அவர் கொடுத்த உத்வேகத்தில் களத்தில் இறங்கினேன்’’ என்றவர் தற்போது பல பெண்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளார்.

‘‘முதலில் ரெடி மிக்ஸ் பவுடரை விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தேன். அதன் படி 50, 100 கிராம் பாக்கெட்டில் எங்க தெருவில் இருக்கும் பெண்களிடம் குறைந்த லாபத்திற்கு விற்றேன். அது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது, இந்த ரெடி மிக்ஸ் தான் அவர்களின் டிபன் பாக்சுக்கு கைக்கொடுத்தது.

வீட்டிலே செய்வதால் பலரும் விரும்பி வாங்கினாங்க. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிச்ச போது, இட்லி தோசை மாவு வியாபாரத்தை களம் இறக்கினேன். இப்படியாக தொடர்ந்து தற்போது டீத்தூள் முதல் அரிசி பருப்பு என 350க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்’’ என்றவர் பெண்களுக்கும் தன்னுடைய தொழிலில் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார்.

‘‘ஆரம்பத்தில் பொருட்களை பேக்கெட் செய்வதற்காக பெண்களை நியமனம் செய்தேன். அதன் பிறகு பெண்களையே ஒரு தொழிலதிபராக மாற்றினால் என்ன என்று தோன்றியது. என்னுடைய வாடிக்கையாளர்களையே தொழிலதிபராக மாற்றினேன். அவர்கள் மூலம் பலர் வந்தனர். தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் பல ஏரியா, தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் என்னுடன் இணைந்து தொழில் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஏரியாவிலும் எனக்கென்று ஒரு ஏஜென்டுகள் இருப்பாங்க.

அவங்க எல்லாருமே பெண்கள் தான். இவர்களின் வேலையே எங்களிடம் பொருட்களை வாங்கி அதை லாபத்திற்கு விற்பது தான். குடும்பம் இயங்க, வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்களான உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்பு, சர்க்கரை, டீத் தூள் எல்லாம் அவசியம். இது போன்ற பொருட்களை மொத்தமா எங்களிடம் வாங்கிக் கொண்டு அதை அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் கடையிலோ அல்லது பக்கத்து வீட்டு பெண்களிடமோ விற்கலாம். இது போன்ற பொருட்கள் கெட்டும் போகாது.

அதற்கான காலாவதி தேதி இருக்கும். அதற்குள் பொருட்களும் விற்பனையாகிவிடும் என்பதால், பெண்கள் இந்த தொழிலை மிகவும் உற்சாகமா செய்ய முன் வருகிறார்கள். மேலும் இவர்கள் இதற்காக வெளியே சென்று அலையவேண்டும் என்றில்லை. எங்களிடம் பொட்களை மாதம் ஒரு முறை வாங்கினால் போதும், அதை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யலாம்.

வாடிக்கையாளராக சொந்த உபயோகத்திற்காக பொருட்களை வாங்க வருபவர்களுக்கு என தனி விலையும், எங்களிடம் ஏஜன்டுகளாக இருப்பவர்களுக்கு லாபத்திற்கு ஏற்ப தனி விலையிலும் கொடுக்கிறோம். மேலும் ஒருவர் மற்றொருவரை அறிமுகம் செய்தால், அதற்கான கமிஷன் தொகையும் கொடுக்கிறோம். மளிகை பொருட்கள் மட்டுமில்லாமல், வார நாட்களில் வாங்கக்கூடிய கறி மற்றும் மீன் போன்ற உணவுப் பொருட்களிலும் லாபம் பார்க்கலாம்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்ன என்றால், லாக்டவுனுக்கு அப்புறம் எங்க வீட்டுக்காரருக்கு வேல போயிடிச்சி. வருமானம் இல்லாம திண்டாடினோம். உங்க பொருளை கஷ்டப்படாம விக்கறதால தான் வீட்டுல சந்தோஷம் திரும்பி இருக்கு என இல்லத்தரசிகள் பலரும் தெரிவிக்கும் போது, நம்மால் பலரின் குடும்பங்கள் சந்தோஷமாக இருப்பதை நினைக்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார் காஞ்சனா.

‘‘என்னைப் பொறுத்தவரை எதுக்குமே உபயோகம் இல்லாமல் இருக்கிறோம் என யாரும் வருந்தக்கூடாது. அடுத்த வீட்டாரிடம் அன்பாக பேசி நட்பை வளர்த்துக் கொண்டால், இந்த தொழிலை எளிதாக செய்யலாம். இப்போதெல்லாம், அடிக்கடி தடையுத்தரவு, கடை அடைப்பு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடை என பல விதிகள் இருப்பதால் எந்த ஒரு பொருளையும் வாங்க அரக்க, பரக்க ஓட வேண்டி உள்ளது. ஆனால் வீட்டு பெண்கள் என்னிடம் உள்ள அனைத்து பொருட்களையோ அல்லது அதில் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களையோ வாங்கி விற்றாலே போதும்.

எனவே, சந்தர்ப்பம் என்பது கண்ணுக்கு தெரியாமலே நமது கண் முன்னால் உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு சிறு தொழிலில் தைரியமாக பெண்கள் தடம் பதிக்க முன் வர வேண்டும். பெண் சக்தி இதுதான் என நிரூபிக்க பெண்கள் புது வேகத்துடன் தொழிலில் தடம் பதிக்க வேண்டும்’’ என பட்டாசாக படபடக்கிறார் காஞ்சனா. அவர் சொல்லும் விதமும், ஊக்கமளிக்கும் ஆதரவும் பெண்களிடம் இயல்பாகவே உள்ள தயக்கத்தையும், கூச்சத்தையும் காத தூரம் விரட்டும் என்பது நிச்சயம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்