×

உங்க உணவுலே ஊட்டம் இருக்கா?

ஆண்டுதோறும் சத்துக்குறைபாட்டால் மட்டும் ஐம்பது லட்சம் குழந்தைகள் வரை உலகம் முழுதும் இறக்கிறார்கள் என்கிறது யுனெஸ்கோ. இதில் கணிசமான குழந்தைகள் இந்தியாவில் பிறப்பவை. ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் நம் நாடு இருக்கிறது என்பது வேதனையான விஷயம். கடந்த 1992ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் உலகம் முழுதும் உள்ள குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை அயோடின் மற்றும் இரும்புச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உட்பட உலகம் முழுதும் சுமார் 159 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில்தான் உணவுச் செறிவூட்டம் (Food Fortification) என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட உணவில் கூடுதலாக ஏதேனும் ஒரு சத்தைச் சேர்த்துத் தரும்போது அந்த உணவுப்பொருள் மேலும் செறிவானதாக மாறுகிறது. இதுதான் ஃபுட் ஃபோர்ட்டிபிகேஷன். மிகச் சிறந்த உதாரணம் என்றால் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு. தொன்னூறுகளுக்கு முன்பு உலகம் முழுதும் அயோடின் உப்பு என்ற கருத்தாக்கம் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.

மேற்சொன்ன யுனெஸ்கோ மாநாட்டுக்குப் பிறகே இந்தக் கருத்தாக்கம் உலகம் முழுதும் பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. இன்று இந்தியாவில் அயோடின் சேர்க்கப்படாத உப்பு கிடைப்பதுவே அரிது என்ற நிலை உருவாகியிருக்கிறது. கடலில் இருந்து கிடைக்கும் இயற்கையான உப்பில் சோடியம் குளோரைடு மட்டுமே உள்ளது. இதனோடு அயோடின் என்ற சத்தைச் சேர்க்கும்போது அது மேலும் செறிவான உணவாக மாறுகிறது. அயோடின் சத்து மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் உறுதுணையானது.

அயோடின் சத்து சேர்ந்த உப்பை உண்ணும் குழந்தைகளின் செயல்திறனும் துறுதுறுப்பும் சாதாரண உப்பு கலந்த உணவை உண்ணும் குழந்தைகளின் செயல்திறனைவிட அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி, உப்பில் மட்டும் இல்லை இன்னும் பல்வேறு பொருட்களில் இந்த ஃபோட்டிஃபிகேஷன் இன்று நடைபெறுகிறது. குழந்தைகள் உண்ணும் உணவுப் பொருட்களான பால், பருப்பு வகைகளிலும் கொழுப்புப் பொருட்கள், எண்ணெய்களிலும் இந்த உணவுச் செறிவூட்டல் அதிகம் நடைபெறுகிறது.

ஒரு பொருளில் இல்லாத சத்தைச் சேர்ப்பது மட்டுமே ஃபுட் ஃபோட்டிஃபிகேஷன் அல்ல. கூடுதலாக உள்ள சத்துக்களைக் களைவதும், ஊட்டச்சத்து விகிதத்தை சமப்படுத்துவதும் இதன் அங்கங்களே. உதாரணமாக, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கான குளூட்டான் ஃப்ரீ உணவுகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான லோ சோடியம் உணவுப் பொருட்கள் ஆகியவையும் ஃபுட் ஃபோர்ட்டிஃபிகேஷன் செய்தே நமக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல், பால், சோயா பால் போன்ற பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் சமநிலைப்படுத்தப்பட்ட பின் சந்தைக்கு வருவதையும் சொல்லலாம்.  

உணவு விதிகள்


மைக்கேல் போலன்ஸ் அமெரிக்காவின் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளர். குறிப்பாக, உணவுத் துறையில் போலன்ஸ் எழுதிய நூல்களும் அது சார்ந்த அவரது பேச்சுக்களும் முக்கியமானவை. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் பற்றியும் உணவு நிறுவனங்களின் வணிக நோக்கங்கள் பற்றியும் தொடர்ந்து மக்களிடம் பேசி வருபவர். உலகம் முழுக்க இருக்கும் உணவியல் நிபுணர்கள், மருத்துவர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் போலன்ஸ் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கான பொன்விதிகள் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதில் நம் ஊருக்குப் பொருத்தமான சில விதிகள் :

* உங்கள் முன்னோர்கள் உணவு என்று உண்ணாத எதையும் நீங்களும் உண்ணாதீர்கள்.
* அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் பின்பற்றும் உணவுகளை உண்ணுங்கள். வித்தியாசமாக உண்கிறேன் என்று கண்டதையும் சாப்பிடாதீர்கள்.
* சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக, ஹைஃப்ரெக்டோஸ் சிரப் இருக்கும் உணவைத் தவிர்த்திடுங்கள். உப்பிடம் உஷாராக இருங்கள்.
* உணவுக்கான மூலப்பொருட்களில் முதல் மூன்று இடத்தில் சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்கள் இருந்தால் அதை தவிர்த்திடுங்கள்.
* ஐந்து மூலப்பொருட்களுக்கு மேல் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பேக்கிங் உணவுப் பொருட்களைத் தவிர்த்திடுங்கள்.
* உங்கள் குழந்தையால் உச்சரிக்கமுடியாத விநோதமான இன்க்ரிடியன்ட்ஸ் உள்ள பொருளை உண்ணாதீர்கள்.
* Lite, lowfat, nonfat போன்ற பதங்கள் இருந்தால் அந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
* இருக்கவே வாய்ப்பற்ற ஒன்றை இருப்பதாகச் சொல்லும் உணவைத் தவிர்த்திடுங்கள். (உதாரணம்: வைட்டமின் டி உள்ள எண்ணெய். வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கும். வேறு எந்த உணவிலும் கிடையாது)
* சூப்பர் மார்க்கெட்டின் மத்திய பகுதியில் உள்ள உணவுப் பொருட்களை வாங்காதீர்கள். (காய்கறிகள், கீரைகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் பெரும்பாலும் விளிம்புப் பகுதியிலேயே இருக்கும். செயற்கையான இன்க்ரிடியன்ஸ் நிறைந்த உணவுப் பொருட்கள்தான் சூப்பர் மார்க்கெட்டின் மையத்தில் இருக்கும்)
* மட்கும் வாய்ப்புள்ள உணவுப்பொருட்களை மட்டுமே உண்ணுங்கள்.
* இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்காதீர்கள்.
* ஒரு உணவுத் தொழிற்சாலையில் அனைத்துப் பணியாளர்களுமே சர்ஜிக்கல் தொப்பி அணிந்துதான் பணியாற்றுவார்கள் எனில் அந்த உணவை சந்தேகப்படுங்கள்.
* தாவரத்திலிருந்து நேரடியாக வந்த பொருள் என்றால் சாப்பிடுங்கள். அந்தத் தாவரத்தைக் கொண்டு ப்ராசஸ் செய்யப்பட்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் தவிர்த்திடுங்கள்.
* எல்லா மொழியிலும் ஒரே பெயரால் விளிக்கப்பட்டால் நிச்சயம் அது உண்ணத் தகுந்த உணவுப் பொருள் அல்ல. (உதாரணம்: சீட்டோஸ்,
பிக் மாக், ப்ரிங்கில்ஸ்)
* நான்கு காலில் நிற்கும் உயிர்களைவிட (ஆடு, மாடு, பன்றி) இரண்டு காலால் நிற்கும் உயிர்கள் (கோழி, காடை) உண்ணச் சிறந்தவை. இந்த இரண்டையும்விட ஒற்றைக்காலில் நிற்கும் உயிர்கள் (தாவரங்கள்) மேலும் சிறந்தவை. ஒற்றைக் காலை அதிகமாகவும் இரட்டை கால்களை ஓரளவும் நான்கு கால்களை குறைவாகவும் உணவில் பயன்படுத்துங்கள்.
* உங்கள் வண்ணத்தில் உள்ள காய்கறிகளைத் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.
* நன்கு உண்ணும் விலங்குகளையே நீங்கள் உண்ணத் தேர்ந்தெடுங்கள்.
* அனைத்துண்ணி போல் இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் எதையும் விலக்காமல் உண்ணுங்கள்.
* காட்டில் விளைந்த உணவுகளைத் தவிர்க்காமல் உண்ணுங்கள்.
* உங்கள் உணவில் தேவையான இனிப்பையும் உப்பையும் நீங்களே இடுங்கள்.
* உணவு எவ்வளவு வெள்ளையாக இருக்கிறதோ; பிரச்சனை அவ்வளவு துலக்கமாக இருக்கும். எனவே, வெள்ளை உணவுகள் உஷார். (உதாரணம்: பாலிஷ் அரிசி, சர்க்கரை, உப்பு)
* ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட ஆசைப்பட்டால் அதை நீங்களே தயாரித்து உண்ணுங்கள்.
* பாரம்பரிய உணவுகளில் ஆர்வம் காட்டுங்கள். அது எந்தப் பாரம்பரியமாக இருப்பினும் பரவாயில்லை.
* சிறிய தட்டுகளில் உணவை நிரப்பி உண்ணுங்கள்.
* காலை உணவை அரசனைப் போலவும் மதிய உணவை குடும்பஸ்தனைப் போலவும் இரவு உணவை யோகியைப் போலவும் சாப்பிடுங்கள். (அதாவது காலை அதிகமாகவும் மதியம் மிதமாகவும் இரவு குறைவாகவும் சாப்பிட வேண்டும்)

இளங்கோ கிருஷ்ணன்

Tags :
× RELATED துவணி அறக்கட்டளை சார்பில் 9,000 கால்நடைகள் பிராணிகளுக்கு உணவு