உணவே மருந்து மருந்தே உணவு!

நன்றி குங்குமம் தோழி

கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில் எந்த மருத்துவத்தை நாடுவது, எவ்வித பக்க விளைவுகளும் இன்றி எப்படி நலமாக மீள்வது என்று ஏகப்பட்ட குழப்பம் மக்கள் மனதை வெகுவாக ஆக்கிரமித்துள்ளன. எத்தனை நவீன சிகிச்சைக்கு உட்படுத்தியும், பல லட்ச ரூபாய் செலவழித்த பிறகும் சில தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளிகளின் உயிர் பிரிவதை அச்சத்துடன் கேள்விப்பட்டு கொண்டுதானிருக்கிறோம்.

இது போன்ற இக்கட்டான நேரத்தில் மிக மிக குறைந்த செலவில் இயற்கை முறையில் உயிரிழப்பே இல்லா மருத்துவ முறையை செயலாற்றி சித்த மருத்துவம் சத்தமே இல்லாமல் சாதனை செய்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் மிக குறுகிய காலத்தில் கொரோனாவில் இருந்து நோயாளிகள் மீள்கிறார்கள். இது நிச்சயம் பாராட்டத்தக்க கவனிக்கத்தக்க விஷயமே...

பாரம்பரிய தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் பல நூறாண்டுகளுக்கு முன்பாகவே அரிய மூலிகையின் தேடலில் சித்தர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறையாகும். அதுவே தேவ, மானுட, அசுர வகை மருத்துவம் என்று வகைப்படுத்தப்பட்டு, பின்னர் வாதம், பித்தம், கபம் என்று உடல் கூறுகளுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் என்றாலே நிதானமாகத்தான் செயல்படும், நாட்பட்ட சிகிச்சையில் தான் குணம் அடைய கூடும் என்று நம்பப்பட்ட சில தவறான கருத்துகளை களைந்தெரியும் வண்ணமாக தற்போது நடக்கும் கொரோனா சிகிச்சை முறையில் குறைந்தபட்சம் ஐந்தே நாட்களில் கொரோனா தொற்று குணமடைகிறது என்பது  நம்பிக்கை அளிக்கக்கூடிய அதே நேரத்தில் செலவே இல்லாமல் உயிர்காக்கும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. சித்தாவுடன் சேர்ந்த சில யோகா மற்றும் மூச்சு பயிற்சிகளும் மிகச் சிறந்த பலன்களை அளிப்பதாக கூறப்படுகிறது.

“சித்தா” ஒன்றும் புரியாத மருத்துவ முறையெல்லாம் இல்லை. நம் வீட்டு சமையல் அறையில் கிடைக்கும் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், சீரகம், சுக்கு, மல்லி, திப்பிலி, எலுமிச்சை, நெல்லிக்காய் இவை போதும் ஒரு சின்ன சித்த மருந்தகமே நம்மிடம் உள்ளது என்று சொல்லி விடலாம். இதன் உட்பொருட்களை கொண்டே பல சித்தா சூரணங்களும், கசாய பொடிகளும் செம்மையாக தயாரிக்கப்படுகின்றது.

இயற்கையாக கிடைக்கும் இது போன்ற மூலிகை பொருட்களின் தாவர வேதிபொருட்களை (Phytoconstituents) ஆராய்ந்து பார்த்ததில் அதில் பொதிந்துள்ள ஆகச்சிறந்த மருத்துவ நன்மைகள் ஆதார பூர்வமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சித்த மருத்துவமுறையில் பயன்படுத்தபடும் எல்லா மூலிகைகளிலும் ஆல்களாய்ட்(Alkaloid), ஃப்ளேவனாயிட்(Flavanoid), சாபோனின்ஸ்(Saponins), டேனின்ஸ்(Tannins) எனப்படும் நல் வேதிபொருட்கள் பல நிறைந்து காணப்படுகிறது. ஆன்டிஆக்சிடன்ட் ஏஜண்ட்ஸ் (Antioxidant agents) எனப்படும் இவையனைத்துக்குமே பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பேராற்றல் கொண்டவை. கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்தும் இந்த ஆன்டிஆக்சிடன்ட்ஸ் காப்பாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னோக்கி பார்த்தால் சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களுக்கு மருந்தாக நிலவேம்பு குடிநீர் பெரிதும் உதவியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு காரணம் அதன் மூலப் பொருட்களில் அடங்கியுள்ள ஆண்டிவைரல் திறனே. கொரோனா சிகிச்சையிலும் கபசுர குடிநீர், ஆடாதோடா மணப்பாகு மற்றும் நிலவேம்பு கசாயம் மிக நல்ல முன்னேற்றம் தருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  

சித்த மருத்துவத்தின் சிகிச்சை வழிமுறைகள் மற்றும் தமிழகம் முழுவதும் எங்கெங்கு சித்தா சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் தற்போது இணையதளங்களிலேயே எளிதாக கிடைக்கின்றது. இயற்கை உணவு, சூரிய குளியல் என கொரோனா சிகிச்சையில் தூள் கிளப்பி கொண்டிருக்கும் சித்தா குறித்து மக்களிடையே இன்னும் நிறைய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உணவே மருந்து மருந்தே உணவு என கூறும் சித்தாவை விடுத்து

லட்சக்கணக்கில் செலவழித்து தனியார் மருத்துவமனையை நாடும் நாம் நிச்சயம் கனியிருப்ப காய் கவர்ந்த தவறை செய்வதாகவே தோன்றுகிறது.

கொரோனா வந்த பிறகு மேற்கொள்ளும் சிகிச்சையை தாண்டி வருமுன் காக்கும் ஆயுத மாகவும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நமக்கு நாமே சித்த மருத்துவம் செய்து கொள்ளலாம்.

* தொண்டை வலியோ மார்புச்சளியோ இருந்தால் இஞ்சி சாரும் தேனும் அருமருந்தாகும்.

* மிதமான சூடான நீரில் மஞ்சள் பொடி கலந்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையிலேயே சில வைரஸ் கூடாரங்களை அழித்து

விடலாம்.

* தினமும் உணவில் மிளகு, மஞ்சள் இவைகளை சேர்த்துக் கொள்வதும் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.

* எப்போதும் அருந்தும் காபி, டீ போன்ற பானங்களுக்கு மாற்றாக சுக்குமல்லி காபி அருந்துவதும் மிகவும் நல்லது.

* இரவில் தூங்க செல்லும் முன் பாலுடன் மஞ்சள் மற்றும் பூண்டு கலந்து குடிப்பது மிக நல்ல ஆண்டிவைரல் உணவாகும்.

* தினமும் ஒரு நெல்லிக்காய், கொஞ்சம் துளசி இலைகளை உண்டால் குளிர்காலத்தில் ஏற்படும் சளி போன்ற உபாதைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: முனைவர். தி.ஞா.நித்யா இணைப் பேராசிரியர்

- உயிரித் தொழில் நுட்பவியல் துறை

Related Stories: