×

அகத்தை சீராக்கும் சீரகம்

நன்றி குங்குமம் டாக்டர்

விதைகளின் ராணியாகச் சொல்லலாம் சீரகத்தை. மசாலாப் பொருட்களில் இரட்டைச் சகோதரிகளாக இருப்பவை மிளகு-சீரகம். பெயரிலேயே பெருமையைத் தாங்கியிருக்கிறது சீரகம். அகம் எனப்படும் மனதையும், உடலையும் சீராக்குவதால் இதற்கு சீரகம் என்று பெயர். சீரகத்தில் நற்சீரகம், காட்டு சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு, கருஞ்சீரகம் என பலவகை உண்டு. இவற்றில் நற்சீரகத்திற்கு Cuminum cyminum என்ற தாவரப் பெயரும், Cumin என்ற ஆங்கிலப் பெயரும் உண்டு.

சீரகத்தில் நறுமணமும் காற்றில் ஆவியாகக் கூடியதும், மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய் தன்மை 2.5 - 4% வரை உள்ளது. இந்த எண்ணெயில் Cumic aldehyde என்னும் வேதிப்பொருள் 52% அளவுக்கு செறிந்துள்ளது. இந்த எண்ணெயில் இருந்து செயற்கையாக தைமால்(Thymol) என்னும் ஓம உப்பு செய்யப்படுகிறது. சீரகத்தின் எண்ணெய், சீழையும் கிருமிகளையும் அழிக்கவல்லது. மேலும் சீரகத்தில் அடல் எண்ணெய் 10% வரையிலும் பென்டோசான் 6.7% வரையிலும் அடங்கியுள்ளது.

சீரகத்தை மென்மையான துகள்களாக அரைக்கும்போது அதிலுள்ள எண்ணெய் பிசுபிசுப்பில், 50% பகுதி காற்றில் ஆவியாகக்கூடும் என்பதால் அரைத்த ஒரு மணி நேரத்துக்குள் சீரகத்தைப் பயன்படுத்துவதால் அதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும்.

100 கிராம் சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள்

ஆற்றல் - 304.49 கலோரிகள்
புரதம் - 13.91 கிராம்
கொழுப்பு - 16.64 கிராம்
நார்ச்சத்து - 30.35 கிராம்
கார்போஹைட்ரேட் - 22.62 கிராம்
இரும்புச்சத்து - 20.58 மிலி கிராம்
கால்சியம் - 878 மிலி கிராம்
வைட்டமின் இ - 0.14 மிலி கிராம்.

சீரகத்தின் மருத்துவ பலன்கள்

பித்த வாந்தி, சுவையின்மை, வயிற்று வலி, வாய் நோய்கள், கெட்டிப்பட்ட சளி, ரத்தபேதி, இரைப்பு, இருமல், கல்லடைப்பு, கண் எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும். செரிமான சக்தியை அதிகரிக்கும் சக்தியுள்ளது சீரகம்.. வயிற்றுவலி,  மார்புச் சளி, காச நோய் (என்புறுக்கி நோய்) ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.  காட்டு சீரகம் சரும நோய்களை விரட்டும். பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு  ஜலதோஷம், அஜீரணம், வயிற்று உப்புசம் ஆகியவற்றை விரட்டும். கருஞ்சீரகம் மண்டை கரப்பான், உட்சூடு, தலைநோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

வீக்கத்தைக் குறைத்தல், சிறுநீர்  பிரித்தல், வாயுவைத் தடுப்பது மற்றும் தசைப்பிடிப்புகளை அடக்குதல் ஆகியவை சீரகத்தின் பாரம்பரிய  பயன்பாடுகளாகும். இது அஜீரணம், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் வாயுக்கோளாறுகளுக்கு  அப்படியே உபயோகிக்கும் வாய்வழி மருந்தாகவும் பயன்படுகிறது. சமையலில் முக்கியமான மசாலாப் பொருளாகவும் இனிப்பு வகைகள், மதுபானங்கள், மற்றும் கான்டினன்டல் உணவுகளில் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிரீம்கள், வாசனைத் திரவியங்களில் கூட மணத்திற்காக சேர்க்கப்படுகிறது.

வெவ்வேறு பாரம்பரிய முறைகளில், பசி தூண்டுதல், வயிற்றுவலி, மூச்சுத்திணறல், கருக்கலைப்பு, தாய்ப்பால் பெருக்கி, ஆன்ட்டிசெப்டிக் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் மூலிகையாக சீரகத்தை மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். மேலும், கசப்பான டானிக் மற்றும் சுத்திகரிப்பு மற்றும் பல்வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு நோய்களுக்கும் பயனுள்ளதாகிறது.

ஆன்டி ஆஸ்டியோபோரோடிக் (Anti-Osteoporotic)

சீரகத்தில் பைட்டோஎஸ்ட்ரோஜன்கள் (Phytoestrogens) இருப்பதால் சிறுநீரில் கால்சியம் வெளியேற்றம், கால்சியம் உள்ளடக்கம் பெருக்குதல் மற்றும் எலும்புகளின் இயந்திர வலிமை ஆகியவற்றின் ஆஸ்டியோபோரோடிக் எதிர்ப்பு விளைவைக் காட்டுகிறது.

எதிர்ப்பு நுண்ணுயிர்(ANTI-MICROBIAL)

சீரக விதைகள் பல்நோய்களுக்கு காரணமான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் (Streptococcus mutans ) பாக்டீரியாக்கள் மற்றும் டான்சில்ஸ், மூச்சிழைப்புநோய், வாதகாய்ச்சல்களை உருவாக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பைரோஜென் (Streptococcus pyrogenes)  பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தடுப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன.

மேலும், சீரகம்  உணவு, மண், விலங்கு மற்றும் மனிதர்களிடையே உருவாகும் நோய்க்கிருமிகள், ஈஸ்ட் போன்ற பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

ஆன்டிஆக்ஸிடென்ட் (Antioxidant)

மோனோடர்பீன் ஆல்கஹால், அத்தியா
வசிய சுவைகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற பாலி-பினோல் மூலக்கூறுகள் இருப்பதால் சீரகம் அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மோனோடர்பீன் (Monoterpene Alcohols), அத்தியாவசிய சுவையூட்டிகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற பாலி-பினோல் மூலக்கூறுகள் இருப்பதால் சீரகம் அதிக ஆக்ஸிஜனேற்ற (Antioxidant) செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

ரத்த சோகை மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கான இரும்புச்சத்து

100 கிராம் சீரகத்தில் 66 மி.கி.க்கு மேல் இரும்புச்சத்து அதிகம் உள்ளது (இது ஒரு வயது வந்தவருக்கான இரும்புச்சத்து  தேவைக்கு 5 மடங்கு அதிகமாகும்.) இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகும்.  நுரையீரலில் இருந்து அனைத்து உடல் உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜனைக் கடத்தும் வேலையை ஹீமோகுளோபின் செய்கிறது, மேலும் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான முக்கிய என்சைம் அமைப்புகளின் ஒரு பகுதியாகும். எனவே, சீரகம் ரத்த சோகை உள்ளவர்களுக்கு தினசரி உணவில் ஒரு சத்தான சேர்க்கையாக இருக்கும். குறிப்பாக கருவுற்ற பெண்மணிகளுக்கு இன்றும் சீரகத்தண்ணீரை அடிக்கடி கொடுப்பது வழக்கத்தில் உள்ளது.

பெண்களின் தோழி சீரகம்

இதில் இரும்புச்சத்து நிறைந்து  இருப்பதால், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மாதவிடாய் அல்லது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் மிகவும் நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு மற்றவர்களை விட இரும்பு தேவை அதிகம். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கின்போது இரும்புச்சத்தை இழக்கும் பெண்களுக்கு முக்கியமானது. கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்களைப் போலவே வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் தற்போது இரும்புச்சத்துக்கான தேவைகள் அதிகரித்துள்ளது.

சீரகம் தைமால் இருப்பதால் பாலூட்டும் பெண்களில்,  பால் சுரப்பை எளிதாக்கவும் அதிகரிக்கவும் உதவுகிறது. இது சுரப்பிகளில் இருந்து சுரப்பை அதிகரிக்கும். தேனுடன் எடுத்துக் கொண்டால்  மிகவும் நன்மை பயக்கும். சீரகத்தில், 100 கிராமுக்கு 900 மி.கி.க்கு மேல் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் உள்ளது. அதாவது, நமது அன்றாட கால்சியத்தின் 90 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது.

சரும நலத்திற்கு…

சீரகத்தில் வைட்டமின் ‘இ’ ஏராளமாக உள்ளது. சீரகத்தில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெயில் கிருமிநாசினி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால், நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்கள் சருமத்தை பாதிக்காமல் தடுக்கிறது. சருமத்தில், சூடு மற்றும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் கொப்புளங்களிலிருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற சீரகம் நல்ல மருந்தாகும். வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு புறஊதாக்கதிர்களால், முகம், கை, கால்கள் அதிகம் கருத்துவிடும். இவர்கள் காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கருமை மறைந்து சருமம் பளபளப்பாகிவிடும்.

பிற நன்மைகள்

சிறுநீரகத்தாரையில் தொற்று, பூச்சிக்கடி, விஷக்கடிகளுக்கும் சீரகம் நல்ல மருந்து. நினைவாற்றல் குறைவு மற்றும் கவனம் இன்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு சீரகத் தண்ணீர் கொடுக்கலாம்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், வலிப்புநோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், வலிநிவாரணி உபயோகிப்பவர்கள் மற்றும் செரிமானக்
கோளாறு சிகிச்சையில் இருப்பவர்கள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், சீரகத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

சீரகத்தை எப்படி பத்திரப்படுத்தி வைக்கலாம்?

சீரக விதைகள், சீரகத்தூளை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் வெப்பம் இல்லாத இடத்தில் வைத்து உபயோகப்படுத்தலாம். 6 மாதத்திற்கு மேலான சீரகத்தூளையோ, 1 வருடத்திற்கும் மேலான சீரக விதையையோ பயன்படுத்துவதால் அதன் முழு பலனை பெற முடியாது.

சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம்?

சமையல் தவிர, சீரகப் பொடியை வாழைப்பழத்தோடு இரவு உறங்கப் போகும் முன் சாப்பிட்டால் நல்ல உறக்கம் வரும்.  தேனில் குழைத்தோ, சீரகத்தை வறுத்து கஷாயம் வைத்தோ குடிக்கலாம். அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் சீரகத்தை அப்படியே 1 ஸ்பூன் சாப்பிட்டு நீர் அருந்தலாம்.  குழந்தைகளுக்கு சீரகத்தின் கசப்பு பிடிக்காதென்பதால், சீரகத்தண்ணீரையோ, கஷாயத்தையோ குடிக்கமாட்டார்கள். அவர்களையும் சீரகத்தின் பலனை பெறவைக்க சீரா ரைஸ் செய்து கொடுக்கலாம்.

தொகுப்பு: மகாலட்சுமி

Tags :
× RELATED நாடு முழுவதும் கல்வித் துறையில்...