×

வொர்க் ஃப்ரம் ஹோம்!

நன்றி குங்குமம் தோழி

பிரச்சனைகளும் தீர்வுகளும்!

கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் ஒருவர் போனில் அழைத்து, ‘வீட்டில் உட்கார்ந்து வேலை செய்வதால் தொடர் இடுப்பு வலி ஏற்பட்டுள்ளதாகவும், தன்னால் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்யமுடியவில்லை என்ன செய்வது?’ என்று ஆலோசனை கேட்டிருந்தார். அவர் வயது, வேலை நேரம், உட்கார்ந்து வேலை செய்யும் இடம், உட்காரும் நிலை உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்து அவருக்கான எளிய உடற்பயிற்சிகள் மற்றும் அன்றாட வாழ்வில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி சொல்லிவிட்டு வைத்தேன்.

நம் நாட்டில் ஊரடங்கு அறிவித்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களை எட்டப்போகிறது. பலரும் தம் வீட்டில் இருந்தபடி அலுவலகப் பணிகளை செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐ.டி ஊழியர்கள். இதன்படி அனைவரும் தினந்தோறும் 8 மணி நேரம் கணினி அல்லது மடிக்கணினியின் முன் அமர்ந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் வீட்டில் இருந்தபடி வேலை பார்ப்பது ஒரு வகையில் எளிதாகத் தோன்றினாலும், அதனை சரியான முறையில் செய்யாமல் இருப்பதால், அது உடல் அளவில் வலிகளுக்கு வழி வகுப்பதோடு, வேறு சில உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்திவிடும். அதனால் அவரைப் போன்று உடல் ரீதியானப் பிரச்சினைகளுக்குள் சிக்காமல் எப்படி ஒருவர் வீட்டிலிருந்து எளிதாகப் பணிபுரியலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சனைகள் பலவிதம்!

* அலுவலக இடத்தைப் போன்று நம் உயரத்திற்கு தகுந்தவாறு நாற்காலியும், மேசையும் இல்லாமல் இருப்பதே முதல் காரணம்.

* உதாரணமாக, மேசையின் உயரம் குறைவாக இருந்து, நாற்காலியின் உயரம் அதிகமாக இருந்தால் முதுகையும், கழுத்தையும் முன் வளைத்து மடிக்கணினி திரையைப் பார்க்க நேரிடும். இதனால் கட்டாயம் கழுத்து வலி வரக்கூடும்.

* அதே போல் நாம் அமர்ந்திருக்கும் நிலையானது (position), மடிக்கணினி வைத்திருக்கும் நிலைக்கு பொருத்தமாக இல்லாமல் இருப்பது. உதாரணமாக, படுத்துக் கொண்டு திரையைப் பார்ப்பது. மடியில் தலையணை வைத்து அதன் மேல் மடிக்கணினி வைத்துப் பயன்படுத்துவது போன்றவை தசை வலிகளுக்கு வித்திடும்.

* இவ்வாறு நம் உடல் தோரணை (body posture) சீராக இல்லையெனில் கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு வலி வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

* நாம் நிமிர்ந்து நேராக உட்காராமல், தொடர்ந்து குறுகி கூனலாக அமர்வதால் நம் நுரையீரல் விரியும் அளவானது குறையும். அதனால், cardiac endurance என சொல்லப்படும் ‘தாங்கும் ஆற்றல்’ குறைய நேரிடும் என்பதால், மாடி படி ஏறினாலும், சிறிது நேரம் நடந்தாலும் கூட அதிகமாக மூச்சு வாங்கக்கூடும். அதிலும் இந்தக் கொரோனா தொற்றுநோயில் பாதிக்கப்படுபவர்களுக்கு ‘மூச்சுத் திணறல்’ உண்டாக அதிக வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளுக்கு கூடுதல் ஆபத்துக் காரணியாக இந்தக் குறைவான ‘தாங்கும் ஆற்றல்’ இருக்கின்றது.

* தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதனால் மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளில் சமச்சீரின்மை தோன்றி, ஒரு பக்கத்தில் உள்ள தசைகள் பலவீனமாகவும், இன்னொரு பக்கத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகவும் மாறிவிடும். இதனாலும் கழுத்து, முதுகு, கால் மூட்டு என மூட்டுகளில் வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

* விருப்பம் போல் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதை இப்போது குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் ரீதியான வேலைகளை குறைந்த அளவுக்கு மட்டுமே இப்போது நாம் செய்தால் உடல் பருமன் ஏற்படவும், மந்தமாகவே இருப்பதற்கும் வாய்ப்புண்டு.

என்ன செய்யலாம்?

* முறையாக அலுவலக இடத்தைப் போன்றதொரு ‘அமைப்பு முறை’ இல்லாமல் இருப்பது உடல் ரீதியான கேடுகளை விளைவிக்கும். அதனால் அதைப் போன்றதொரு அமைப்பு முறையை வீட்டில் உருவாக்கி, அதில் உட்கார்ந்து பணிபுரியலாம்.

* சரியான உடல் தோரணையுடன் அமர்ந்து பணிபுரியும் போது நம் மூளை கவனம் சிதறாமல் சீராய் இயங்கும். அதனால், சரியான உடல் தோரணையான கால்களை 90 டிகிரியில் தரையில் வைக்கவேண்டும். முதுகுத் தண்டுவடம் நேராகவும் (பின்புறம் சாய்ந்தபடி), முழங்கை 90லிருந்து 100 டிகிரி வரையிலும் மடங்கி இருக்கலாம். குறைந்தது 50 செ.மீட்டர் இடைவெளி கண்ணுக்கும் கணினிக்கும் அவசியம் இருக்கவேண்டும். தோல்பட்டையை இறுக்கமாக மேலே தூக்கிவைக்காமல் தளர்வாக வைத்திருத்தல் முக்கியம்.

* தினந்தோறும் காலையில் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். அதனால் நாள் முழுவதும் உடல் மற்றும் மன அளவில் சுறுசுறுப்பாக இயங்கலாம். அத்தோடு, பயிற்சிகள் செய்வதால் தசைகள் வலிமைப் பெறும். அதனால், மூட்டு வலி, தசைப் பிடிப்பு ஆகியவை ஏற்படாது.

*வேலையின் நடுநடுவே எழுந்து சிறிது தூரம் வெறுமனே நடந்துவிட்டு வரலாம். அல்லது சிறுசிறு வீட்டு வேலைகளில் ஈடுபடலாம். உதாரணமாக, வீடு பெருக்குவது, துணிகள் மடித்து வைப்பது போன்று சிறிது நேரம் உலவித் திரியும் வேலைகளைச் செய்வதனால் உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும்
ரத்த ஓட்டம் சீராய் போகும். இதனால் மீண்டும் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கலாம். உடல் வலிகளையும் எளிதாகத் தடுக்கலாம்.

* முதுகு வலி வருவதால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், தினசரி உடற்பயிற்சி செய்து எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயன்முறை மருத்துவத்தில் சரி செய்யலாம்.

* டிவி, யூடியூப் பார்த்து உடற்பயிற்சி செய்வது தவறு. அப்படி செய்வதால் சுளுக்கு, தசைப்பிடிப்பு, மூட்டு வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகளை தேர்வு செய்தல் அவசியம்.இவ்வாறு இந்த பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் இச்சூழலை நல்லபடியாக, எந்த ஓர் உடல்நலக் கோளாறுகளும் இல்லாமல் கடக்கலாம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர்

இயன்முறை மருத்துவர்

Tags : home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...