எங்களுடையது பத்து வருடக் காதல்!

நன்றி குங்குமம் தோழி

நடிகர் தேவ் மோகன்

இளமையும் இனிமையுமாக காதலை கொண்டாடும் படங்களை கொடுப்பதில் மலையாள சினிமாவுக்கு தனி இடம் உண்டு. ‘பிரேமம்’ நம்ம ஊரிலும் ஒரு கலக்கு கலக்கியது போல, OTTயில் வெளியான ‘சுஃபியும் சுஜாதாவும்’  சில்லிடுகிறது. படத்தின் ஹீரோ தேவ் மோகனுக்கு மல்லுவுட்டிலும் மட்டு மல்ல கோலிவுட்டிலும்  ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இளம்பெண்களின் ஹாட் க்ரெஷ் கண்ணனான தேவ் மோகனுடன்

பேசினோம்....

தன் மயக்கும் கண்களை இமைத்தபடி பேச ஆரம்பித்தார் தேவ். ‘‘இந்த படம் மூலம் எனக்கு இப்படி ஒரு வரவேற்பு இருக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. படத்தை பார்த்திட்டு ஃபிரண்ட்ஸ் மற்றும் சொந்தக்காரங்க எல்லாரும் பாராட்டினாங்க. மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் இந்த படத்தை பற்றிய பேச்சு தான் இருந்தது.

இப்படி ஒரு வரவேற்பு புதுமுகமான எனக்கு அதுவும் முதல் படத்தில் கிடைக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. முதலில் என்னிடம் ஸ்கிரிப்ட் சொன்ன போது, நல்ல வரவேற்பு இருக்கும்ன்னு தான் நினைச்சேன். ஆனால் நான் நினைச்சதை விட இது பெரிய அளவில் இருக்குன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. சுஃபி கதாபாத்திரத்தில் யார் நடிச்சு இருந்தாலும், இதே வரவேற்பு கிடைச்சு இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கொடுத்ததற்கு நான் இயக்குனர் நாரானி புழ ஷனவாஸுக்கு தான் நன்றி சொல்லணும்’’ என்று பட்டாம்பூச்சியாக பறக்கிறார் தேவ்.  

‘‘சொந்த ஊர் கேரளா. திருச்சூர்ல தான் படிச்சேன். அம்மா, அப்பா, தங்கை அப்புறம் நான். இது தான் என்னுடைய குடும்பம். பொறியியலில் மெக்கானிக்கல் முடிச்சிட்டு, பெங்களூரில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சில காலம் வேலை பார்த்தேன். ஆனால் என்னுள் இருந்த சினிமா மோகம் மட்டும் குறையவே இல்லை. காரணம் சின்ன வயசில் நிறைய படம் பார்ப்பேன்.

எல்லா மொழி படங்களையும் விரும்பி பார்ப்பேன். இப்போதும் கூட படம் பார்ப்பதை நான் விடவில்லை. அதே ேபால் நேரம் கிடைச்சா உடனே ஏதாவது ஒரு இடத்துக்கு கிளம்பிடுவேன். பயணம் செய்வது என்னுடைய பொழுதுபோக்கு. சினிமாவில் நடிச்சே ஆகவேண்டும் என்று எல்லாம் நான் நினைக்கல. அதே சமயம் ஏன் அதற்கான முயற்சி எடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. பள்ளி, கல்லூரி காலங்களில் கூட நான் மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இல்லை.

அதனால் நடிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்ன்னு கொச்சியில் மூன்று நாள் நடைபெற்ற நடிப்பு பயிற்சியில் சேர்ந்தேன். அதன் பிறகு மீண்டும் பெங்களூருக்கு பறந்தேன். அந்த சமயத்தில் நண்பர் மூலம் கொச்சியில் ஆடிஷன் நடக்க இருப்பதாக தெரிய வந்தது. முதலில் என்னுடைய புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். அடுத்த நாளே அவர்கள் நான் தேர்வாகிவிட்டதாக  தெரிவித்தார்கள், கொச்சியில் நடைபெறும் ஆடிஷனிலும் கலந்துக்க சொன்னாங்க. மூன்று கட்ட ஆடிஷன் நடைபெற்றது. மூன்றிலும் தேர்வாகி இயக்குனரை சந்திச்ச போது தான் எனக்கான கதாபாத்திரம் சுஃபின்னு சொல்லி என்னை அதில் நடிக்க வைத்தார். கதாபாத்திரத்திற்காக தாடி மற்றும் நீளமான முடியினை வளர்த்தேன்.

ஆனால் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் என்னை அந்த காதாபாத்திரமாகவே மாற்றினாங்க. எப்படி நடக்கணும், பேசணும் மற்றும் நடனம் எல்லாம்

கத்துக் கொடுத்தாங்க. கட்டைவிரலில் பேலன்ஸ் செய்து நடனமாடனும். ெராம்பவே சிரமப்பட்டேன். ஆனாலும் ஒரு சவாலாக தான் எல்லா பயிற்சியும் எடுத்து படத்தில் நடித்தேன்’’ என்றவர் தன் முதல் பட அனுபவத்தை பகிர்ந்தார்.

‘‘ஷூட்டிங் போது தான் அதிதியை பார்த்தேன். திறமையான நடிகை. டைரக்டர் ஆக் ஷன்னு சொன்னதும், அவரின் முகத்தில் அவ்வளவு பாவங்களை பார்க்கலாம். எனக்கு ஒரு நல்ல துணையா இருந்தாங்க. இது எனக்கு முதல் படம். ஆனா மத்தவங்க எல்லாரும் அனுபவம் உள்ளவங்க. அவர்கள் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். முதல் அனுபவமே எனக்கு சிறப்பாக அமைந்ததுன்னு நினைக்கும் போது ரொம்பவே பெருமையா இருக்கு’’ என்றவர் பாட்டு பயிற்சி எல்லாம் எடுத்ததில்லையாம்.

‘‘நான் பாடகர் எல்லாம் இல்லை. இந்த படம் என்னை ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் ஒரு பாடகனாகவும் அடையாளம் காட்டியுள்ளது. படத்தின் இசை அமைப்பாளர் சுதீப் என்னுடைய நெருங்கிய நண்பர். எனக்கு அல்லா பாடல்கள் பிடிக்கும்ன்னு அவருக்கு தெரியும். ஒரு நாள் ஸ்டுடியோ வரச்சொன்னார். நான் சும்மா தான் போனேன். ஆனால் அவரோ என்னை இஸ்லாமியர்களின் பிரேயர் பாடலை பாடச் சொன்னார்.

முதலில் தயங்கினேன். பிறகு வாய்ப்பு வரும் போது முயற்சி செய்யலாம்ன்னு செய்தேன். அதற்கு மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவில்லை. பாடலை பாடி முடிச்ச போது எதையோ சாதித்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை சக்தி அந்த பாடலுக்கு இருக்கு’’ என்றவரிடம் OTTயில் படம் ரிலீசானது பற்றி கேட்ட போது...

‘‘உண்மையிலே சொல்லணும் என்றால் எனக்கு பெரிய திரையில் தான் என் படத்தை பார்க்கணும்ன்னு ஆசை. ஆனால் இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் திரையில் வெளியிட முடியாது. அப்படியே வெளியிட்டு இருந்தாலும், இந்த நேரத்தில் இத்தனை வரவேற்பு கிடைத்து இருக்குமான்னு சந்தேகம் தான். ஆனால் OTTயில் நான் எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைச்சிருக்கு. உலகம் முழுதும் உள்ள மக்களிடம் எனக்கான ஒரு அடையாளம் ஏற்படுத்தி இருக்கு. அடுத்ததாக இரண்டு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தமிழில் வாய்ப்பு கிடைச்சாலும் நான் நடிக்க தயார். மக்கள் மனதில்  இடம் பிடிக்கிறது என்பது ஒரு சவால்.

அதுக்கான நேரம் இங்கு கிடைச்சு இருக்குனு நம்புறேன்’’ என்றவரிடம் காதல்... திருமணம் பற்றி கேட்டபோது...‘‘கண்டிப்பாக என்னுடையது காதல் திருமணம் தான். எங்களுடையது பத்து வருட காதல்ன்னு சொல்லலாம். எனக்கானவள் எனக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறாள். கூடிய விரைவில் அவர் யார் என்று அறிமுகம் செய்வேன்’’ என்றார் அதே மயக்கும் புன்னகை மாறாமல்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

படங்கள்: ஜி.சிவக்குமார்   

Related Stories: