×

புகைப்படம் பேசும் உண்மைகள்

நன்றி குங்குமம் தோழி

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீட்டிலேயே இருந்தாலும் எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்க முடியும். பலர் தங்களுக்கு தெரிந்த கலைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் தன் புகைப்படக் கலை மூலம் வீட்டைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் போட்டோ எடுத்து அதற்கு உயிர் கொடுத்துள்ளார் ஜெய்சிங் நாகாஸ்வரன். “மதுரை வாடிப்பட்டியில் பல தனியார் பள்ளிகளுக்கு நடுவே காந்திஜி ஆரம்பப் பள்ளி எங்கு  இருக்கிறதென்று கேட்டால், யாருக்கும் தெரியாது. ஆனால், ‘பொன்னுத்தாய் பள்ளி’ என்று கேட்டால் சின்ன குழந்தை கூட பதில் சொல்லும். இப்படி பேசற அளவிற்கு வரலாறு படைத்திருக்கிறார், 64 ஆண்டுகளுக்கு முன் பொன்னுத்தாய் என்ற ஒரு தனி மனுஷி.

தமிழகக் கல்விச் சூழலில், குறிப்பாகத் தலித் கல்விப்புரட்சி வரலாற்றில் பொன்னுத்தாய் போராடிய காலங்கள் எவராலும் மறைக்க முடியாது. அப்படி ஒரு கம்பீரமான பெண். 10 சென்ட் இடத்தில் இரண்டு வகுப்பறைகள் இருக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும்தான் பொன்னுத்தாயின் புரட்சிக்கான சாட்சி” என்று தன் பாட்டியின் பெருமிதத்தோடு பேச ஆரம்பித்தார் புகைப்பட கலைஞர் ஜெய்சிங். “புகைப்பட துறைக்கு வரப் பெரிய கனவெல்லாம் கிடையாது. எதிர்பாராத விதமாக இந்த துறையில் வந்தேன். மாஸ் கம்யூனிகேஷன் படிக்கும் போது தான் போட்டோ எடுக்க கத்துக்கிட்டேன். எனக்கான பாதையை முடிவு செய்து அதற்காகத் தீவிரமாக உழைச்சேன். போட்டோ எடுக்க வெளி  ஊர்களுக்குப் பயணப்பட்டேன். புது மக்கள், புது இடம்னு  நிறையப் படிப்பினைகள், பாடங்கள். இப்படியே 15 ஆண்டுகள் ஓடியது. புகைப்பட கலைஞனாக மட்டுமின்றி, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினேன்.   

பொதுவாக நான் அதிகம் பேச மாட்டேன். சின்ன வயதிலிருந்தே, குடும்ப சூழ்நிலையைப் பார்த்துப் பார்த்து, மன அழுத்தத்திற்கு ஆளானவன். தனிமையையே உணர்ந்து வந்த எனக்கு போட்டோகிராபி துறை ஆறுதலானது. மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும் மாறியது. சம்பளத்திற்கான வேலையாகவும் மட்டுமின்றி மன நிம்மதிக்கான வேலையானது. பாலிவுட் திரைப்படமான ‘பிளாக்’கில் ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் சாருக்கு உதவியாளராக பணியாற்றினேன். ‘கஜினி’ இந்தி ரீமேக்கிலும் வேலை பார்த்தேன். மும்பை பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது” என்று கூறும் ஜெய்சிங், தனது மாறுபட்ட கோணத்தில் புகைப்படங்களை அணுகிய விதங்களை பகிர்ந்தார். “இந்த ஊரடங்கில் தான் இத்தனை நாட்கள் என் வீட்டிலிருந்திருக்கிறேன். இல்லையென்றால் ஊருக்கு வந்தால் இரண்டு, மூன்று நாட்களில் திரும்பி விடுவேன்.

அந்த நேரத்தில் தான்  நம்மை சுற்றியுள்ள நபர்களையும், நம் வீட்டையும் வெவ்வேறு கோணங்களில் போட்டோ எடுக்கலாம் என்ற யோசனை வந்தது. ஒரு கிராமத்து வீட்டில் என்ன பொருட்கள் இருக்கும், வீட்டில் உள்ளோர் என்ன மாதிரியான வேலைகள் செய்வார்கள்… என்று அவர்களின் அன்றாட வேலைகள், வாழ்க்கை முறை குறித்த புகைப்படங்களை என் போனிலே எடுக்கத் தொடங்கினேன். புகைப்படங்களில் அவர்களின்  முகம், செயல் உண்மையாக ஒன்றியது.  ஒரு புகைப்பட கலைஞர் தன் திறமையைக் காட்ட வெளியூர்களுக்குச் சென்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதில்லை. நாம் இருக்கும் இடத்தை எப்படிப் பயன்படுத்தி அதில் புதிய கோணங்களைக் கண்டுபிடிக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அதை கற்றுக் கொடுத்தது இந்த கொரோனா தனிமை.  அவ்வாறு எடுத்த புகைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய எதிர்காலம், குழந்தைப் பருவத்தில் நான்கண்ட இடங்கள், என் பாட்டியின் வரலாறு போன்றவற்றைப் புகைப்படங்களாக எடுக்கணும். நம்மை சுற்றி உள்ளவர்களைப் புகைப்படம் எடுத்தால் பல உண்மைகளை பார்க்கலாம். அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளலாம். அவை அனைத்தும் உண்மை பேசும் புகைப்படங்களாக இருக்கும். என் பாட்டியைப் போல் நாளைய வரலாற்றில் என் புகைப்படமும் இடம் பெற உழைக்கிறேன்” என்றார் ஜெய்சிங்.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!