×

கொரோனா காலத்தில் குழம்பும் கல்வித்துறை

நன்றி குங்குமம் தோழி

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்று அச்சத்தில் பதறிப்போய் இருக்கும் மக்களில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் சிறு குறு தொழில் செய்பவர்களும் அன்றாடம் வேலை செய்து பிழைப்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழப்பமான சூழலில் அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒரு திடமான முடிவாக இருக்க வேண்டும். எண்ணித் துணிய வேண்டும்; துணிந்து முடிவெடுத்த பிறகு மீண்டும் எண்ணிப் பார்ப்பது இழுக்கு ஆகும்.

தமிழ்நாடு கல்வித்துறையில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் குழப்பங்கள் சுமார் 1.31 கோடி மாணவர்களை மட்டும் அல்லாது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் என பல கோடி மக்களைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் கல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி. “அண்மையில் பத்தாம் வகுப்புத் தேர்வினை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. ஒரு நீண்டநாள் பிரச்சனைக்கு முடிவு வந்ததாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட நமக்குப் பூதாகரமானப் பிரச்சனைகள் இனித்தான் வரப்போகிறது. தெளிவில்லாத ஓர் அறிவிப்பை அவசரமாக அறிவித்துவிட்டுக் கீழ்க்கண்ட குழப்பங்களுக்குத் தீர்வு காணவேண்டிய நிலைக்குக் கல்வித்துறை ஆட்கொண்டிருக்கிறது. 80 விழுக்காடு மதிப்பெண்களுக்குக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளிலிருந்தும் 20 விழுக்காடு மதிப்பெண்கள் வருகைப் பதிவின் அடிப்படையிலும் எடுத்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

இத்தேர்வுகளில் தேர்ச்சிக்குரிய குறைந்த அளவு மதிப்பெண்கள் 35% எடுக்காத மாணவர்களின் நிலைமை என்னவாகும் என ஒரு கேள்வி எழும்பியது. பெரும்பான்மையான பள்ளிக்கூடங்களில் இந்த நிலைமைதான் என்பது இடைக்காலத்தில் தான் தெரியவந்தது. புதிய பாடத்திட்டம், பாடங்களின் கடினத்தன்மை, ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக் காலத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு, பருவத்தேர்வுகள்... என கல்வியாளர்களின் வாதம் மாணவர்களின் தோல்விக்கான காரணங்களுக்கு வலு சேர்த்தது. இதை அறிந்த அரசுத் தேர்வுத்துறை, பருவத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் எடுக்காவிட்டாலும் தேர்ச்சி பெற்றதாகவே கருதப்படுவர் என அறிவித்தது. ஆனால் தனித் தேர்வாளர்களாகத் தேர்வு எழுதுபவர்களும், சிறைச் சாலைகளில் தேர்வெழுதுபவர்களும் அண்டை மாநிலங்களில் தேர்வினை எழுதியிருப்பவர்கள் பருவத்தேர்வு எழுதியிருக்க வாய்ப்பில்லை.

அவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்க முடியும்? என்ற குழப்பத்துக்குக் கல்வித்துறை தீர்வு காணவேண்டும். கிரேடு முறையில் மதிப்பெண் அளிப்பதாக இருந்தாலும் அதற்கும் பருவத்தேர்வுகளின் மதிப்பெண்கள் அவர்களுக்கு இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு பொதுத் தேர்வு எழுதக் குறைந்த அளவு 75% வருகைப் பதிவு அவசியம். அதாவது தேர்வு எழுதத் தகுதி பெற்றோர் அனைவருமே வருகைப் பதிவை நிறைவு செய்தவராகவே கருதப்படுவர். அவ்வாறு வருகை குறைந்தவரும்கூட தகுந்த காரணங்களோடு சான்று தந்து விலக்கு அனுமதி பெறுவாரேயானால் அவரும் நிறைவு செய்தவரே ஆவர்.

இவர்கள் அனைவருக்குமே 20% மதிப்பெண் கொடுப்பதே நியாயமாகக் கருதப்படும். இவ்வாண்டு மட்டும் மதிப்பெண் வழங்குவதைத் தவிர்த்து உலகப் பேரிடர்க் காலத்தைச் சிறப்புக்காரணமாகக் குறிப்பிட்டுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு பெற்றவர் அனைவருக்குமே தேர்ச்சிச் சான்றிதழ் மட்டும் வழங்குவதே பொருத்தமாக இருக்கும். வேலை கொடுக்கும் நிறுவனங்கள் வழக்கம்போலப் போட்டித் தேர்வுகள் மூலமாகவும் கல்வி நிறுவனங்கள் தலைமையின் கீழ் ஒரு குழு அமைத்து சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு சேர்க்கை அளிக்கலாம். இணையவழிக் கல்வியை அரசு ஊக்கப்படுத்தாது என முதலில் அறிவித்தது. சில நாட்களில் இணையவழிக் கல்வி கொரோனாக் காலத்துக்கு ஏற்ற ஒரு தீர்வு என்றது. இணைய வழிக்கல்வி குறித்த முடிவுகளை மேற்கொள்ள ஒரு குழுவை அரசு தற்பொழுது அமைத்துள்ளது.

மழலையர் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை வகுப்பறை கற்றல், கற்பித்தல் முறைக்கு மாற்று ஏற்பாடாக இணையதளக் கல்வி முறை அறிமுகம் ஆவதை யாராலும் இனித் தடுக்க முடியாது. குருகுலக் கல்வி, திண்ணைக்கல்வி, ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வி, மாணவரை மையமாகக் கொண்ட கல்வி என கல்விமுறையில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களைப் போல இணையதளக் கல்வி முறையைக் கொண்டு வரக் காரணமாக அமைந்தது கொரோனா நோய்த் தாக்கம். இதற்கு மாறாக ஆன்லைன் கல்வி என்பது இன்றையச் சூழலில் ஒரு கூடுதல் வசதியாக எடுத்துக்கொள்ளலாமே தவிர இன்றையக் கல்வி முறைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக அமையாது என ஆணித்தரமாக ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றனர் கல்வியாளர்கள்.

“கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகமெங்கும் உயிர்களைக் கொத்துக் கொத்தாய்ப் பறிக்க இந்தச் சூழ்நிலையில் மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த, பள்ளிகளும் அரசும் கல்வித்துறையும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களும், புலம்பெயர்ந்து சாலை ஓரங்களில் வாழும் மக்களும் அதிகம். இவர்களிடம் ஆன்லைன் முறையில் கல்வி கற்பிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட குடும்பங் களிலிருந்தும் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றுகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களால் எவ்வாறு இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? கல்வியில் ஒரு சமநிலை இல்லாமல் போகும். கற்றல் கற்பித்தல் நிகழும் நேரங்களில் எல்லாம் மின் வசதி கிடைக்குமா? வாழ்வாதாரம் பாதித்து வயிற்றுக்கே சோறில்லாமல் தவிக்கும் இவர்கள் இணையதளக் கட்டணத்தை கட்ட இயலுமா? இப்படி பல சிக்கல்கள் ெகாண்ட ஆன்லைன் வகுப்புகளை ஒரு கூடுதல் வசதியாகப் பயன்படுத்தலாமே தவிர வகுப்பறைக்கு மாற்றாகக் கருதமுடியாது.

மேலும் நோய்த் தொற்றுக் காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கும்போது ஆன்லைன் வகுப்புகளுக்கானக் கட்டணத்தைக் கட்டுமாறு பள்ளிகள் பெற்றோர்களை வற்புறுத்தி வருகிறது. இந்தியாவில் 16 விழுக்காடு வீடுகளில் ஒரு மணி நேரம் முதல் 8 மணிநேரமும் 33 விழுக்காடு வீடுகளில் 9 முதல் 12 மணிநேரமும்தான் மின்சாரம் கிடைப்பதாக 2018ல் ஓர் ஆய்வு கூறுகிறது. கிராமப் புறங்களில் 4.4 விழுக்காடு, நகர்ப்புறங்களில் 42 விழுக்காடு வீடுகளிலும்தான் இணைய வசதி உள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 2018 தெரிவித்துள்ளது. இணையதளத் தொடர்பு கிடைப்பதில் நகர்ப்புறத்திலே கூட தொய்வு இருக்கும்போது கிராமங்களில் கேட்கவே வேண்டாம். நமது நாட்டில் 24 விழுக்காடு பேரிடம்தான் ஸ்மார்ட் போன்கள் உள்ளதாகவும் 11 விழுக்காடு வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நாட்டில் 82.6 கோடி மாணவர்களிடம் கணினி வசதியும் 70.6 கோடி மாணவர்களுக்கு இணையதள வசதியும் இல்லை என்ற யுனெஸ்கோ அறிக்கை மூலம் இணையதளக் கல்விக்கான சமத்துவமில்லை என்பதை நாம் அறியலாம்.

வகுப்பில் பலதரப்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். இவர்களில் பல்வேறு சமூகச் சூழ்நிலையிலிருந்து பள்ளிக்கு வருபவர்களும் அடங்கும். ஒவ்வொரு மாணவரின் திறனுக்கு ஏற்ப ஆசிரியர் கற்பிக்க வேண்டும். இது வகுப்பறையில் தான் சாத்தியமாகும். புரியாத பாடத்தினை மறுபடியும் ஆசிரியரிடமோ அல்லது சக மாணவனிடம் மீண்டும் கேட்டுப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு வகுப் பறையில் தான் நடக்கும். இவை ஆன்லைன் வகுப்பில் சாத்தியமில்லை. இவை ஒரு புறம் இருக்க, தொடர்பு கைப்பேசி, லேப்டாப் பார்ப்போருக்குக் கண்களும் நரம்பு மண்டலமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மன அழுத்த பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டுவரை செல்போன்களை பிள்ளைகள் கையில் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய நாம் குறைந்தது ரூபாய் பத்தாயிரம் செலவு செய்து வாங்கிக்கொடுக்கும் நிலைமைக்கு ஆன்லைன் கல்வி நம்மை தள்ளியுள்ளது தான் உண்மை. மேலும் ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் படித்தால் பெற்றோருக்கும் சேர்த்து மூன்று மொபைல் போன் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகள் செல்போனில் வேறு தவறான தளத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தவிர்க்க எல்லாப் பெற்றோரும் உடனிருக்க, கிராமப்புறங்களில் அல்லது பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் சாத்தியமா எனில் இல்லை என்பதே பதிலாக அமையும். எனவே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அவசரப்பட்டது போல ஆன்லைன் கல்வியிலும் அரசு அவசரப் படாமல் கொரோனாவை முழுமையாக ஒழித்து மாணவர்களுக்கு தரமான கல்வித் திட்டத்தை அமைக்க முன்வரவேண்டும். அடுத்து பாடப்பிரிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். இவ்வாண்டு 11 ஆம் வகுப்புச் சேர்க்கையில் வழக்கம்போல தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவில் 6 பாடங்களோடு புதியதாக 5 பாடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினையும் இவ்வாணை வழங்கியுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தவுமே இவ்வேற்பாடு என அரசு கூறுகிறது.

ஆனால் 12 ஆம் வகுப்பில் பிரிவு 3ல் நான்கு பாடங்களைப் படித்த மாணவர்கள் மருத்துவம் அல்லது அதைச் சார்ந்த பாடங்களைப் படிக்க விரும்பியும் கிடைக்கவில்லை எனில் பொறியியல் சார்ந்த பாடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை இவ்வாணை தட்டிப் பறிக்கிறது என்பதோடு உயிரித்தொழில் நுட்பம், உயிரி வேதியல், மைக்ரோ பயாலஜி போன்ற மருத்துவம் சார்ந்த பொறியியல் படிப்புக்களையும் தொடரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாடங்களைச் சுருக்குவதால் உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறைகிறது என்பது உண்மை. மத்தியக் கல்வி வாரியம் மொழிப்பாடம் தவிர்த்து நான்கு பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்கும்போது நம் மாணவர்கள் மட்டும் ஏன் மூன்று பாடங்களை மட்டும் படிக்கும் வாய்ப்பு தந்து உயர் கல்வி வாய்ப்புக்களைக் குறைக்க வேண்டும்? இது ஒரு சமூக அநீதியாக அமையாதா? மருத்துவம் போன்ற உயர்படிப்பை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே அளிக்கவேண்டும் என்பதற்கான மாற்று ஏற்பாடு இதுவா? என்பதற்கான கேள்விகளுக்கு ஆம் என்று பதில் அளிக்கும் வகையில் அமைந்த இவ்வாணை உடனே விலக்கிக் கொள்ளப்பட்டு ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்” என்றார் கல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Corona ,
× RELATED கல்வி வரமருளும் ஆலயங்கள்