வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் கொரோனா கட்டுக்குள் வராத பகுதியாக வடசென்னை அறியப்படுகிறது. கடும் உழைப்பைச் செலுத்தும் எளிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதோடு, அவர்களது குடியிருப்புகள் மிக நெருக்கமாய் அமைந்திருப்பதும் ஒரு காரணம். பெரும்பாலான குடியிருப்புகள் போதிய வெளிச்சம், காற்றோட்டமின்றி இருப்பது, ஒரே கட்டிடத்தில் பல குடித்தனங்களும் வசிப்பது என காரணங்களை அடுக்கலாம். அதிகமான இட நெருக்கடி, தண்ணீர் பற்றாக்குறை, அடிக்கடி விடைபெறும் மின் வெட்டு இவற்றால் அவதிப்படும் எளிய மக்கள், பெரும்பாலான நேரமும் வசிப்பது வீட்டை தவிர்த்து பொதுவெளிகளிலும் குறுகிய தெருக்களிலும்தான்.

இந்த மக்களிடம் கொரோனாவை கட்டுப்படுத்த, சமூக இடைவெளியை பின்பற்ற வைப்பது அரசுக்கு சவாலான விசயமாக மாற, களத்தில் இறங்கிய பெருநகர சென்னை மாநகராட்சியுடன், கைகோர்த்தனர் திருநங்கைகள் அமைப்பான ‘தோழி’ மற்றும் ‘சகோதரன்’. கடந்த 45 நாட்கள் கடந்து இவர்கள் வடசென்னை மக்களிடத்தில் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்கள். சபிதா, திட்ட மேலாளர், சகோதரன் அமைப்பு நாங்கள் மொத்தம் 26 திருநங்கைகள், நோய் தொற்றைப் பற்றி யோசிக்காமல், எங்கள் உயிரை பணயம் வைத்துதான் வேலை செய்கிறோம். இதுநாள் வரை எங்கள் மாற்றுத் திறனாளி மக்களுக்கு இடையேதான் களப்பணி செய்து வந்தோம். முதன் முறையாக இப்போதுதான் பொது மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்கிறோம்.

ராயபுரம், தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் போன்ற இடங்களில் மக்களோடு களத்தில் இருக்கிறோம். ஏரியாக்களை டிவிசன்களாக எங்களுக்குள் பிரித்து வேலை செய்கிறோம். ஆரம்பத்தில் மக்கள் எங்களை ஏற்கவில்லை. நிறையவே உதாசீனம் செய்தார்கள். நாங்கள் ஏரியாவுக்குள் நுழைந்தாலே பிரச்சனைகள் வந்தது. எதற்கு வருகிறீர்கள்? யார் உங்களை அனுமதித்தது என விரட்டாத குறைதான். ஆனால் அதே மக்கள்தான் இன்று எங்களுக்கு டீ, காஃபி போட்டு தரும் அளவுக்கு அவர்கள் மனதில் நாங்கள் இடம் பிடித்திருக்கிறோம். ஒரு நாள் நாங்கள் வரவில்லை என்றாலும், நேற்று ஏன் வரவில்லை எனக் கேட்கும் அளவுக்கு அவர்களிடத்தில் மாற்றம் வந்திருக்கு. எங்களை ரொம்பவே நேசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

சோப்பு போட்டு கை கழுவுதல், மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம், வீடுகளுக்கு தினம் சென்று நலன் விசாரிப்பது, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது. அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது, அவர்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றித் தருவது. உடன் வீட்டில் இருப்பவர்களையும் தனிமைப்படுத்தி கவனிப்பது என செயல்படுகிறோம். இப்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நாடகங்களையும் போட்டுக் காட்டுகிறோம். இதில் நோய் குறித்த அறிகுறி, சமூகப் பரவல், தனி மனித இடைவெளி, தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். கொரோனா வந்துவிட்டது என்றாலே இறந்துவிடுவார்கள் என்ற அச்சம் மக்கள் மனதில் நிறைய இருந்தது.

இதற்காக நோய் தொற்றில் பாதிப்படைந்து மீண்டவர்களின் அனுபவத்தை பேச வைத்து மக்கள் பயத்தையும் போக்குகிறோம். இதனால் நோய் குறித்த புரிதல் வருவதுடன் பயம் விலகுகிறது. இளைஞர்கள், சிறுவர்கள் வெளியில் சென்று திரும்பும்போது, முக கவசமின்றி, கை கழுவாமல் உள்ளே வருவதால் முதியவர்களுக்கும் நோய் தொற்றுகிறது. பெரியவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு சிறியவர்களுக்கு உள்ளது என்பதையும் விழிப்புணர்வு நாடகம் வழியே தெரிவிக்கிறோம். சுதா, திட்ட இயக்குநர், தோழி அமைப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து வீடு வீடாக சென்று மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு செய்வதோடு, ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோயாளிகள், கேன்சர் நோயாளிகளுக்கு இதில் சிறப்பு கவனம் எடுக்கிறோம். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை பாதுகாப்பாக கண்காணிப்பது, அனைவரையும் மாஸ்க் அணிய வைப்பது, கபசுர குடிநீர் கொடுப்பது, விட்டமின் மாத்திரைகளை வழங்குவது, மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்வது, வரத் தயங்குபவர்கள் வீட்டிற்கே மருத்துவர்களை அழைத்துச் சென்று டெஸ்ட் எடுக்க வைக்கும் வேலைகளும் செய்கிறோம்.

தற்போது இந்தப் பகுதிகளில் நோய் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. 15 நிமிட விழிப்புணர்வு வீதி நாடகங்களை மார்க்கெட், மளிகைக் கடை என மக்கள் திரளும் இடமாகப் பார்த்துப் போடுகிறோம். பால்கனி உள்ள வீடுகளுக்கு மத்தியில் சின்ன சின்ன விழிப்புணர்வு கதை நிகழ்வு களையும் செய்து காட்டுகிறோம். ஸ்ரீ ஜித் சுந்தரம், தியேட்டர் இயக்குநர்நோய் தொற்று அதிகமாக  இருப்பதால் சிறப்பு கவனத் திற்கு வந்த பகுதி இது. திருநங்கைகள் பத்து மடங்கு வேலை செய்ய சொன்னால 100 மடங்கு செய்கிறவர்கள். இதில் நான் தோழி அமைப்போடு இணைந்து, திருநங்கை சகோதரிகள் மூலம் விழிப்புணர்வு வீதி நாடகங்களை  இயக்குகிறேன். இயற்கை தந்திருக்கும் இந்த மிகப் பெரும் நெருக்கடியை மக்களுக்கு புரியவைக்க அதிலிருந்து மீண்டவர்களின் பாஸிட்டிவ் அனுபவங்களை நேரில் சந்தித்து கேட்டு, அதை வைத்தே ஐ ஓப்பனராய் மக்கள் தயக்கங்களை உடைக்கும் விழிப்புணர்வு நாடகங்களை போடுகிறோம். இதில் கொரோனா வந்து மருத்துவமனை சென்றாலே இறந்து விடுவோம் என்கிற பயம் மக்களிடத்தில் விடை பெற்றது.

மாஸ்க் போடாமலே வீதி நாடகங்களைப் பார்ப்பவர்கள் சட்டென மாஸ்க்கை எடுத்துப் போடுகிறார்கள். சமூக இடைவெளியை உடனே கடைபிடிக்கிறார்கள். சிலர் திருநங்கைகளைப் பார்த்ததும் மாஸ்க் எடுத்துப் போடுவார்கள். எங்களைப் பார்த்ததும் போடாதே, உனக்காக போடு எனவும் அவர்களிடத்தில் பேசுகிறார்கள். இது கொரோனாவுக்கு எதிராக திருநங்கைகளின் மிக முக்கியமான முன்னெடுப்பு. நோய் தொற்று குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் குழப்பங்களை தைரியமாகவே இவர்கள் உடைக்கிறார்கள். இவர்களின் ஆளுமை இதில் நூறு சதவிகிதமும் வெளிப்படுகிறது. அதில் வெற்றியும் காண்கிறார்கள். இவர்களை மக்கள் புரிந்து கொண்டதே ஆகப் பெரிய சவால்.

ஒரு மெண்டல் சப்போர்ட்டராக சாப்டீங்களா, தூங்குனீங்களா, நல்லா இருக்கீங்களா, உங்களுக்கு எதாவது பிரச்சனையா, மருந்து எடுத்தீங்களா என எப்போதும் அவர்களிடத்தில் தொடர்பில் இருக்கும்போது யாரோ ஒருவர் நம்மோடு இருக்கிறார்கள் என்கிற தைரியம் மக்களுக்கு பலத்தை தருகிறது. அன்பைக் காட்டச் சொல்கிறது. நோய் தொற்றில் தங்கள் உயிரைப் பற்றி யோசிக்காமல் களப் பணியாற்றும் இந்த திருநங்கை சமூகத்திற்கு அரசு அலுவலகங்களில் நிரந்தர வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி முடித்தார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: