×

8000 தமிழர்களுக்கு வேலை கொடுத்த தொழிலதிபர்!

நன்றி குங்குமம் தோழி

வருங்காலத்தில் சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லாத நகரத்துக்கு வெளியே காற்றோட்டம் மிக்க இயற்கையோடு இணைந்து கட்டப்படும் வீடுகளுக்கு மவுசு இருக்கும் என்ற வரிகளை முன்னிறுத்தி செயல்படும் தொழில் முனைவோராக விளங்குகிறார் ஜோஸ் மைக்கில் ராபின். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல் என்ற கிராமத்தை சேர்ந்தவர். சென்னை மட்டுமின்றி ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, குவைத், கத்தார், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இவர் தனது நிறுவனத்தின் மூலம் பலருக்கு வேலை கொடுத்து வருகிறார். இதுவரை 8 ஆயிரம் தமிழர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன் ஓமன் நாட்டுக்கு சென்ற இவர் தற்போது அங்கு 1200 பணியாளர்களை கொண்டு ‘ஓயாசிஸ் கிரேஸ்’ என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் கட்டிட மேஸ்திரி தொடங்கி இன்ஜினியர் என தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கி வருகிறார்.

இது தவிர ‘தி ரைஸ்’ எனப்படும் எழுமின் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம்  தமிழகத்தில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் மற்றும் உருவாக்கப்படும் பொருட்களை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு  சரியான விநியோக சங்கிலி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்து வருகிறார். ஆரம்பத்தில் தொழில்நுட்பத்தில் தான் இவரது ஆர்வம் இருந்தது. பின்பு ஓமன் நாட்டில் கட்டுமான தொழிலுக்கு அதிக கிராக்கி ஏற்படுவதை அறிந்து கட்டுமான தொழிலுக்கு மாறியுள்ளார். பிடெக் சிவில் படித்துள்ள இவர் சிறந்த கட்டுமான நிறுவனத்திற்கான 2017ம் ஆண்டு விருதை  தமிழக ஆளுநரிடம் இருந்து பெற்றுள்ளார். உலகளாவிய  தமிழ் தொழில் முனைவோர் தொழில் வல்லுனர்கள் வலையமைப்பான ரைஸ் அமைப்பின் இயக்குனராகவும் உள்ளார். 'வேலை தேடாதே வேலை கொடு’ என்பதே இவரது தாரக மந்திரம்.

‘ஜே.எம். ஆர் பிசினஸ் சொல்யூஷன்ஸ்’ என்னும் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் உள்ள  வணிகர்களை இணைக்கும் பணியை செய்து வருகிறேன். எனது இத்தனை கால் நூற்றாண்டு கால வணிகத்தில் 8 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை கொடுத்ததே எனது சாதனையாக கருதுகிறேன்’’ என்கிறார். ‘‘கொரோனா தொற்றுக்கு பிறகு  ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருந்தாலும் கட்டுமான தொழில் வளர்ச்சி பாதிக்காது. சிறிது லாபம் குறையுமே தவிர வீடுகள் வேண்டாம் என யாரும் ஒதுங்கி விடமாட்டார்கள். தற்போது தொழில்நுட்பத்துறையில் பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகி விட்டது. தமிழகத்தில் உள்ள தொழில் நுட்பம் படித்த மாணவர்களை ஒருங்கிணைத்து நாங்கள் உருவாக்கியுள்ள  ‘டெக் நீட்’ மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு நகரங்களிலும் புதிய தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்து பலருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே எனது நோக்கம்’’ என்றார் ஜோஸ் மைக்கில் ராபின்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Entrepreneur ,Tamils ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு