×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* மைதா, ரவை கலந்த தோசை சுடும்போது ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகப்பொடியை எண்ணெயில் பொரித்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் அதிக வாசனையாகவும், சுவையுடனும் இருக்கும்.

* பச்சை கொத்துமல்லித் தழையை துவையல் அரைக்கும்பொழுது மிளகாய்க்குப் பதில் மிளகை வறுத்து வைத்து அரைத்தால் மணம் மாறுதலாக
இருப்பதுடன் சுவையும் கூடுதலாகும்.

* போளி  செய்வதற்காக பிசைந்து வைத்த மைதா மாவை நன்கு உலர்ந்த ஆட்டுக்கல்லில் போட்டு ஐந்து நிமிடம் நன்கு அரைத்த பிறகு போளி செய்தால் விரியாமல் வரும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* எந்த வகைப் பொரியல் என்றாலும் சீரகப் பொடியைத் தூவினால் வாசனை அருமையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

* குலோப்ஜாமூன் உருண்டைகள் உருட்டும்போது கையில் நெய் தடவிக்கொண்டால் ஒட்டாது. மணமும் கூடும்.

* ரவா தோசை மாவில் நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்தால் தோசை மொறு மொறு என்று இருக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* நேந்திரம்பழம் அதிகமாக இருந்தால் அதன் தோலை நீக்கி விட்டு வெயிலில் காய வைத்துச் சேமியுங்கள். அதனை பல்வேறு பதார்த்தங்களுடன் சேர்த்துத் தயாரிக்கலாம்.

* கல்லில் சிறிது உப்பு தூவி விட்டு, மீனை அதில் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் அதில் இருக்கும் வழவழப்பு அகன்று விடும்.

* மீனை நறுக்கி வினிகர் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்த நீரில் கழுவினால் மீன் சுத்தமாகி விடும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

* கடலைப்பருப்புடன் வேக வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் செய்து போளி செய்ய அதன் ருசியே அலாதி.

* கீரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு இவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டும் என்றால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்பே வேக வைக்க வேண்டும்.

* தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணம் மிக  அதிகமாகஇருக்கும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* ஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்கு பதில் தேன் விட்டு 1 ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து சாப்பிட்டால் ருசி வித்தியாசமாக இருக்கும்.

* எலுமிச்சை சர்பத்தில் சர்க்கரையுடன் 1 சிட்டிகை உப்பு, இஞ்சிச்சாறு கலந்து குடித்தால் சூப்பராக இருக்கும்
- ந.செண்பகா, பாளையங்கோட்டை.

* தோசை மாவில் தேங்காய்ப்பாலையும் சேர்த்து தோசை வார்த்தால் தோசை பட்டுப்போல வரும். மணமும், சுவையும் அருமையாக இருக்கும்.

* கறிவேப்பிலை மீது ஒரு அலுமினியபாத்திரத்தை மூடி வைத்தால் கறிவேப்பிலை காயாமல், பசுமையாக இருக்கும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

* முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். வாசனை ஊரையே கூட்டும்.

* புதினா சட்னி மீந்து போய்விட்டதா? மோரில் போட்டுக் கரைத்து விடவும். காரமாக, பிரமாதமான சுவையுடன், வாசனையாகவும் இருக்கும்.

* உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புள்ளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் அற்புத சுவை.
- கவிதா சரவணன், திருச்சி.

குழந்தைகள் விரும்பும் காளான் மஞ்சூரியன்

சைனீஸ்  உணவுகளிலேயே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது மஞ்சூரியன் உணவு வகைகள்தான்.

தேவையான பொருட்கள்

பட்டன் காளான் - 500 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோள மாவு - 6 மேசைக்கரண்டி
மைதா - 3 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3
சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி.

செய்முறை

வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி துணியில் துடைத்து தனியே வைக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, மைதா, சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கரைத்து, காளானை அந்த கலவையில் போட்டு பிரட்டவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, அதில் காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியே வைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான காளான் மஞ்சூரியன் தயார்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!