ஆன்லைன் வகுப்புகளில் அசத்தும் ஜோதி

நன்றி குங்குமம் தோழி

கொரோனா நோய் தொற்றால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இயல்பாக இருப்பவர்களே மன அழுத்தத்தில் சிக்கும்போது மாற்றுத் திறனாளிகளின் நிலை? கடுமையான இந்த லாக்டவுன் மாற்றுத் திறனாளிகள் பலரின் இயல்பு வாழ்வை பாதித்திருக்கிறது. சிறப்புக் குழந்தைகளிடத்தில் ஒரு வித அச்ச உணர்வு தோன்ற,  கோபம்... சலிப்பு... விரக்தி... ஏக்கம்... என எல்லாமும் இணைந்து இயலாமையின் விளிம்பில் தேங்கிக் கிடக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோதி. ஆனால் ஜோதி சூழலை தனக்கேற்ற விதத்தில் மாற்றி ஆன்லைன் வகுப்பில் அசத்தி வருகிறார். சோஷியல் மீடியாவில் வலம் வருபவர்களுக்கு பாடகி ஜோதியை தெரியாமல் இருக்க முடியாது. பாட்டு, வயலின், கீ போர்ட், லைட் மியூசிக், வெஸ்டர்ன் மியூசிக், சன் சிங்கர்ஸ் ரியாலிட்டி ஷோ என ஜோதி ஆல்வேஸ் பிஸி. பிறப்பிலே இவருக்கு பார்வை இல்லை. கூடவே இன்டலெக்சுவள் டிசெபிளிட்டி (intellectual disability) எனப்படும் ID பிரச்சனை வேறு. இருப்பினும் பாடகியாய் பல சாதனைகளை செய்து வருகிறார்.

இசையை முறையாகக் கற்று, இசை கலைமணியில் 3 வருட டிப்ளமோ முடித்தவர்.  தொடர்ந்து  இசை ஆசிரியருக்கு படித்திருக்கிறார். அடையாறு இசைக் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு வயலின் மாணவியும் கூட. மாலை நேரங்களில் ஹிந்துஸ்தானி வோக்கல், வெஸ்டர்ன் வோக்கல், கர்னாடிக் வயலின், வெஸ்டர்ன் வயலின், கீ போர்ட் என தூங்கும் நேரம் தவிர்த்து எல்லா நேரங்களையும் இசைக்காகவே செலவழிக்கிறார். தொடர்ந்து இசையில் எம்.ஏ.படிக்கும் ஆர்வமும் இருக்கிறது. இசை குறித்த சந்தேகமா? கேளுங்கள் ஜோதியிடம் எனும் அளவுக்கு சந்தேகங்களை அழகாகத் தீர்த்து வைக்கிறார். இத்தனை குறைகளையும் கடந்து இசையில் அவர் செயல்படும்விதம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இந்த திடீர் லாக்டவுன் ஜோதியையும் விட்டு வைக்கவில்லை. தொடக்கத்தில் வந்த நீண்ட லாக்டவுன் ஜோதியின் இசை வாழ்வை முற்றிலும் முடக்கிப் போட்டது. கல்லூரி செல்வதும் தடைபட்டது. நிகழ்ச்சிகளுக்காக குவைத், மலேசியா, லண்டன் என செல்ல இருந்த இசைப் பயணங்களும் ஊரடங்கில் நின்று போனது. மக்கள் கூடுவதற்கு தடை ஏற்பட அடுத்த சில மாதங்களுக்கு நிகழ்ச்சிகளே இல்லை என்றானது.

வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் மனம் தளரவில்லை ஜோதி. தன் அம்மா கலைச் செல்வி உதவியோடு சூழுலை சுலபமாய் எதிர்கொண்டார். ஆன்லைன் வகுப்புகளை எடுக்கப் போவதாய் ஆடியோவுடன் கூடிய சுய விளம்பரம் ஒன்றை தன் முகப்பு பக்கத்தில் வெளியிட்டார். ஏற்கனவே ஜோதி குறித்த வீடியோக்கள் ‘யு டியூப்’பில் பிரபலம் என்பதால் அவரின் இசைப்பயணத்திற்கு இசைந்து சிலர் அவரோடு கைகோர்த்தனர். ஜோதியை நம்பி வந்தவர்களுக்கு முதலில் டிரையல் வகுப்புகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து zoom app வழியே அமெரிக்கா, லண்டன், அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வயது வித்தியாசமின்றி வகுப்பில் இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் இணைந்திருக்கும் மாணவர்களிடத்தில், பார்வையால் உலகைப் பார்க்க முடியாத ஜோதி கேட்கும் முதல் கேள்வி, “உங்கள் நாட்டில் இப்போது நேரம் என்ன? உங்கள் நாடு எப்படி இருக்கும்?” என்பதே.

எந்தக் குழந்தை சபிக்கப்பட்ட நிலையில் பிறந்ததோ அந்தக் குழந்தையின் குரலை உலகெங்கும் ஒலிக்க செய்த மகிழ்ச்சியில் ஜோதியின் அம்மா கலைச் செல்வி நம்மிடம் பேசியபோது... மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் அவள் காலில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் போராடுகிறேன். இசையை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது அவளால் கண்டிப்பாக முடியும்தான் என சுருக்கமாய் சொல்லி விடைகொடுத்தார்.  “என்றும் நீ இருந்திட ஏது குறை எனக்கு… ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா…” என்ற ஜோதியின் குரல் நம்மை பின் தொடர்ந்தது…சக்ஸசோ சாதனையோ சுலபத்தில் கிடைப்பதில்லைதான். பிரச்சனைகளை பார்க்காமல் வாய்ப்பை பார்ப்பவர்களே எப்போதும் மிளிர்கிறார்கள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Related Stories: