×

வானமே எல்லை!

நன்றி குங்குமம் தோழி

‘மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி தேசிய விநாயகம் பிறந்த மண்ணில் தான் பெண்ணை சுமையாக கருதி கள்ளிப்பால் கொடுக்கும் அவலம் அரங்கேறுகிறது. ஆனால் பெண் சுமையல்ல என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் டெல்லி அருகேயுள்ள குருகிராமை சேர்ந்த இளம் பெண்ணான ரிது ரதே தனேஜா. வானம் தான் எல்லை. இனி ஏது தொல்லை என்பதையே சிறுவயது  தாரகமந்திரமாக கொண்டவர் தனேஜா. இப்போது தொழிலால் விமான ஓட்டியாக, இரண்டு வயது பெண் குழந்தையின் தாயாக, அமோக ஆதரவு பெற்ற  யூடியூப் சாதனையாளராக பரிணமிக்கிறார். அவரது வெற்றிக்கதைக்கு பின் பல சோகங்கள் இருந்தாலும் இப்போது சாதனையாளராக மின்னுகிறார் தனேஜா. ‘‘பெண் குழந்தைகள் என்றாலே சுமையாக கருதும் இந்த நாட்டில் நமது குறிக்கோளை எட்ட பலதரப்பட்ட துன்பங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். நான் பள்ளியில்  படித்துக் கொண்டிருந்த போது என்னுடன் படித்த பள்ளித்தோழன் நீ ஏன் பைலட் ஆகக்கூடாது என என் ஆசையை தூண்டிவிட்டான். அதுவே எனது லட்சியமாக மாறிப்போனது.

என் தந்தையிடம் மன்றாடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பள்ளி படிப்பு முடிந்ததும் அமெரிக்காவுக்கு பறந்தேன். அங்கு பைலட் பயிற்சி முடித்து ஒன்றரை ஆண்டுக்கு பின் பைலட்டாக திரும்பினேன். அமெரிக்கா செல்லும் முன்பே ‘இவள் அமெரிக்காவுக்கு போனா எவனையாவது இழுத்துட்டு வந்திடுவா’ என என் தந்தையிடம் கோள்மூட்டி விட்டனர். மேலும் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பதற்கு பதில் அந்த தொகையை சேர்த்துவைத்தால் அவளை திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்றனர். ஆனால் என் தந்தை அவர்களது பேச்சை கேட்காமல் என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தனர். பயிற்சி முடித்து இந்தியா திரும்பியதும் பைலட் வேலைக்காக விண்ணப்பித்தேன். இந்நிலையில் எனது தாய்க்கு உடல் நலம் குன்றி மரணம் அடைந்ததால் எனது குடும்பம் கடனில் தள்ளாடியது. பைலட் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு வேறு வேலை தேடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்.

தொடர்ந்து பல தேர்வுகளை எழுதி இறுதியில் விமானத்தின் இணை பைலட்டாக பணியில் சேர்ந்தேன். அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். தொடர்ந்து 4 ஆண்டுகள் கடும் முயற்சிக்கு பிறகு 60 விமானங்களை இயக்கி சாதனை செய்த பிறகே பைலட் பதவி என்ற கிரீடம் என்னை அலங்கரித்தது. இப்போது எனக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிறந்த அம்மாவாக அவளை நான் பராமரித்து வருகிறேன். தற்போது நானும் என் கணவரும் இணைந்து ‘பீஸ்ட் ஆர்மி’ என்ற ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறோம்’’ என்றவரின் சேனலுக்கு 30 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : sky ,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...