×

சப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்

நன்றி குங்குமம் தோழி

முழு கல்வி பெற்ற மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரள கிரீடத்தில்  மற்றொரு மணிமகுடம் சேர்ந்துள்ளது. ஏற்கனவே பார்வைஇழந்த மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பட்டேல் கேரளாவில் சப்கலெக்டராக பொறுப்பேற்று முன்னுதாரணமாக திகழ்கிறார். தற்போது பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் சப்கலெக்டராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் ஸ்ரீதன்யா சுரேஷ். இவரது பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்கள். வயநாட்டின் பொழுதனா பஞ்சாயத்தைச் சேர்ந்த  ஸ்ரீதன்யா, குறிச்சியா என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்.  கடந்த 2018-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேசிய அளவில் 410-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.  ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்து திருவனந்த புரம் வந்த ஸ்ரீதன்யா அவரது வழிகாட்டியான கோழிக்கோடு கலெக்டர் சாம்பசிவாராவ் முன்னிலையில் பொறுப்புஏற்றுக் கொண்டார்.

‘‘அந்த தருணத்தை மறக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் சாம்பவசிவராவ் அவர்கள் தான், நான் சிவில் சர்வீஸ் தேர்வெழுதத் தூண்டு கோலாகவும், ஊக்கமாகவும் இருந்தார்’’ என மனம் நெகிழ்ந்தார். கடந்த 2016-ம் ஆண்டு வயநாட்டில் துணை ஆட்சியராக சாம்பசிவராவ் பணியாற்றிய நேரத்தில் பழங்குடியினத் துறையில் திட்ட உதவியாளராக ஸ்ரீதன்யா பணியாற்றி வந்தார். அப்போது அவர் அளித்த ஊக்கம் தான் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தற்போது துணை ஆட்சியராக ஸ்ரீதன்யா பொறுப்பேற்க வைத்துள்ளது. வயநாட்டில் உள்ள தரியோடு கிராம அரசுப் பள்ளியில் படித்தவர். தரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த ஸ்ரீதன்யா, கோழிக்கோடு புனித ஜோஸப் கல்லூரியில் விலங்கியல் இளங்கலைப் பட்டமும், கோழிக்கோடு  பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பயின்றார்.

கோழிக்கோடு மாவட்ட உதவி ஆட்சியராகப் பதவி ஏற்ற ஸ்ரீதன்யா  கூறுகையில், “நான் முதுகலைப் படிப்பு முடித்தபின் வயநாட்டில் பழங்குடியினத் துறையில் சில மாதங்கள் திட்ட உதவியாளராகப் பணிபுரிந்தபோது அங்கு  துணை ஆட்சியராக இருந்த சாம்பசிவராவ் எனக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத அதிகமான ஊக்கம் அளித்தார். அவருக்கு மக்கள் அளித்த மரியாதைதான் நானும் அந்த தேர்வு எழுதி அவரைப் போல் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது’’என ஆனந்தக் கண்ணீரை துடைத்தபடி தெரிவித்தார் ஸ்ரீதன்யா.

தொகுப்பு: பா.கோமதி

Tags : Sub-collector ,Kerala ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...