×

கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

‘‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’’ என்பார்கள். இது ஓரளவு சரிதான் என்றாலும், சில சமயங்களில் உள்ளத்திலிருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். குறிப்பாக, பிள்ளைகள் முகத்திலிருந்து அவர்கள் நினைப்பதை கண்டுபிடிக்க தனித்திறமை வேண்டும். சிறு வயதில் எப்பொழுதும் ‘துறுதுறு’வென்று மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். வீட்டில் நடப்பதோ, வெளி உலகில் நடப்பதோ அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லாமல் போகலாம். நடுத்தர வயது, குழந்தைப் பருவம் தாண்டி வாலிபப் பருவம் அடையும் சமயம் அவர்கள் அனைத்தையும் புரிந்துகொள்வார்கள். அப்பொழுதுதான் நாம் அனைவரையும் சரிசமமாகப் பார்க்க வேண்டிய தருணம். சிறிய ஏற்றத்தாழ்வுகள்கூட அவர்கள் மனதை பாதிக்கும். வீடும், வெளி உலகமும் நன்கு புரிய ஆரம்பிக்கும் நேரம். வசதி வாய்ந்த சிலருடன் பழகும்பொழுது, தங்கள் இல்லத்தில் கிடைக்காத சில மகிழ்ச்சித் தருணங்களை மற்றவர்களோடு பகிர மாட்டார்கள்.

மனதிற்குள் நினைக்க ஆரம்பிப்பார்கள். ‘ஐயோ, இவர்கள் எல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள், நம் வீட்டில் இப்படியில்லையே!’’ என்று மனதிற்குள் ஏங்குவார்கள். நண்பர்களுடன் பழகும்போது எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள். அதிலும் சிலர் ரொம்ப சந்தோஷமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். அதிகமாகப் பேசி சமயங்களில் தானே சில பிரச்னைகளில் மாட்டிக்கொள்வார்கள். வீட்டிலோ, சுற்றுப்புறத்திலோ நல்ல நட்பும், துணையும் கிடைக்கவில்லையென்றால், அவர்கள் கிடைக்கும் இடத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள நினைப்பதுண்டு. அதன்பலன்தான், சமயங்களில் தெரியாமல் தவறுகள் புரிய வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, ‘மேல்நிலைப்பள்ளி முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் நேரம், அவர்களுக்கு சுயகௌரவமும், தேவையான பாராட்டுகளும் நல்ல எதிர்காலத்திற்கு வித்திடும்.  

சுறுசுறுப்பும், துடிப்பும், வசதி வாய்ப்பும் வாய்ந்த ஒரு பையன். அவனுக்குத் தோழர் கூட்டத்திற்குத் தன்னை தலைவன் போன்றே கருதி அனைத்திலும் முடிவெடுப்பான். அவன் சொல்லிவிட்டால், மற்றவர்களுக்கு ஆட்சேபனையே கிடையாது. குழந்தைகள் தினமோ, ஆசிரியர் தினமோ, ஆண்டு
விழாவோ எதுவாக இருந்தாலும், தலைமை பொறுப்பேற்று அனைத்தையும் திறம்படச் செய்வான். நல்ல பெயரையும் தட்டிச் செல்வான். அவனுடைய நடத்தையைப் பார்த்தால், அவனுக்குப் பின்னாலும் ஒரு சோகக் கதை உண்டு என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். பள்ளி இறுதியாண்டு படிப்பு முடியும் தருணம். அவனுடைய முன்னேற்றம் சிறிது சிறிதாக தடைபட்டது. குறிப்பிட்ட ஆசிரியர்கள் மிகவும் கவலைப்பட்டனர். மற்றவர் எதிரில் அவனை கண்டிக்கவும் முடியாது. அதுபோன்ற செயல்கள் அவர்களை மனதளவில் பாதிக்கும். எனவேதான், இறுதித்தேர்வு வரை பொதுவாக, ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் கலந்து பேசுவது ஒரு முறையாகும்.

அவர்கள் உடன்நலன் குறித்து, ஆரோக்கியமான உணவை சாப்பிடச் சொல்வது, மனஅமைதியுடன் படிப்பில் கவனம் செலுத்துவது, உடல்நலனில் முன்னேற்றம் அடைவது போன்ற குறிப்புகளை ஆசிரியர்கள் பெற்றோருடன் கலந்து பேசி மாணவர்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். பன்னிெரண்டாம் வகுப்பு வந்துவிட்டால், அதுவரை வராத பெற்றோர்கள் கூட, அவசியம் அவ்வப்பொழுது பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்திற்கு வந்துவிடுவார்கள். அப்படியிருக்கையில், மேலே குறிப்பிட்ட பையன் ஒரு கூட்டத்திற்குக்கூட தன் வீட்டிலிருந்து யாரையும் அழைத்து வரவில்லை. கேட்கும்பொழுதெல்லாம் ஒரு காரணம் சொல்லிவிடுவான். கடைசியாக, இரண்டே மாதங்கள் தேர்வுக்கு இருந்தது. அவன் வகுப்பாசிரியர், அவன் காலில் விழாத குறையாக கெஞ்சி பெற்றோரை அழைத்துவரச் சொன்னார். அதுவும் பலனில்லாமல் போகவே, தலைமையாசிரியரிடம் அவனைப்பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டன. மேலும் இரண்டு நாட்கள் அவனுக்கு அவகாசம் தரப்பட்டது. குறைந்தபட்சம் மாதிரித் தேர்வுக்கு முன்னதாக பெற்றோரை அழைத்துவரச் சொன்னார்கள்.

அப்பொழுதுதான் எங்களுக்கு அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது. மறுநாள், பள்ளிக்குச் சீக்கிரம் வந்து காத்திருந்தான். நாங்கள் அவனிடத்தில் நட்புடன் பழகி வந்ததால் வெகுளித்தனமாக கீழே மண்டியிட்டு அமர்ந்து சொல்ல ஆரம்பித்தான். அவன் தந்தை வீட்டிற்குச் சரியாக வரமாட்டாராம், வேறு வீட்டிற்குச் செல்வாராம், எப்பொழுதாவது ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு வந்து செல்வாராம். அம்மா வேலை செய்து தன்னை படிக்க வைப்பதாகவும், தான் அவரை பள்ளிக்கு வரக்கட்டாயப்
படுத்தினால், வீட்டிற்கே வராமல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுவதாகவும் கூறினான். கேட்ட எங்களால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. இவ்வளவு சிறிய வயதில் இப்படி ஒரு மனப்போராட்டமா என்று நினைத்து அவனுக்குப் பலரும் ஆலோசனைகள் வழங்கி, நல்ல மதிப்பெண்கள் பெற உதவினோம். அவன் பெற்ற மதிப்பெண்கள், அவன் குடும்பத்தை மேலும் வலுப்படுத்தியது. நாங்கள் விடாப்பிடியாக இருந்திருந்தால் மாணவனின் நிலை என்னவாயிருக்கும்? நாளைய வளரும் பாரதத்தின் கண்மணிகளாயிற்றே இவர்கள்!

இளமை உள்ளம் கொண்டிருந்தாலும், அவன் இதயம் கனத்திருக்கிறது. அவ்வளவு சிறிய வயதில் எல்லோரும் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாக காணப்படும்பொழுது அவன் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும். அதனால்தான், விபரம் புரியாமல், மற்றவர் எதிரே யாரையும் புண்படுத்திப் பேசுதல் கூடாது என்பதை நிறையவே வாழ்க்கையில் கற்றோம். அந்தந்த வயதிற்கு அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்று புரிந்துகொண்டோமானால், நம்மால் அதை அவர்களுக்குத் தரமுடியும். குறைந்தபட்சம் நம் ஆறுதல் வார்த்தைகள் அவர்கள் இதயத்திற்கு மருந்தாக அமையலாம். பாடப்புத்தகங்கள் மூலம், அவர்களுக்கு அறிவை புகட்டினாலும், வாழ்க்கையில் நடைபெறும் அனுபவங்கள் நமக்கும் பாடத்தையே புகட்டுகின்றன, எத்தனைஎத்தனை நிகழ்வுகள்! சுமார் முப்பது வருடங்களுக்குமுன், கைபேசி வசதிகள் இல்லாத காலக்கட்டம். பெரும்பாலான வீடுகளில், அரசு தொலைபேசிகள்தான் இருந்தன. அதிலும் பிள்ளைகளின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை புரிவர்.

திடீரென பள்ளியில், குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால், தாயையோ, தந்தையையோ அலுவலகத்தில்தான் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. அதுபோல் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறோம். இப்பொழுது, எல்லாவற்றிற்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்து விட்டதால் இடைவெளி குறைந்து, கருத்துக்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடிகிறது. அத்தகைய காலக்கட்டத்தில், பிள்ளைகள் ‘பஸ்’ பிடித்து, ‘ரயில்’ மூலம் என்றெல்லாம் பள்ளிக்கு வருவதுண்டு. ‘லெவல் கிராஸ்’ தாண்டி வருவதற்குள் ஒவ்வொரு நாளும் காலை நேரம் அனைவருக்குமே ‘டென்ஷன்’தான். ஒரு சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை. ஒரு பையன் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, பள்ளிக்குச் செல்லும் வழியாகவே வந்திருக்கிறான். வழக்கம்போல் ‘லெவல் கிராஸ்’ வரும்பொழுது, சற்றும் எதிர்பாராத விதத்தில் மின்சார வண்டி எதிரே வந்துள்ளது. அன்று அவன் விதி முடிவதற்காகவே அவனை வீட்டிலிருந்து விரட்டியதுபோலும்! அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த பள்ளி ஊழியர் ஒருவர், வீசி எறியப்பட்ட மாணவன் முகத்தைப் பார்த்திருக்கிறார்.

விஷயம் காற்றாகப் பறக்க, அனைவரும் அந்தக் கொடுமையைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு ஆண்டுகளுக்குப்பின், கண் முன்னே அந்தக்காட்சி ஓடுகிறதென்றால், அந்த சமயம் பெற்றோருக்கும், மற்றோருக்கும் எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில், நிரந்தரம் என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நம்மிடம் இருக்கும் அன்பு, பாசம் இவற்றிற்கு எல்லையே இல்லை. அதுவும் அள்ள அள்ளக் குறையாததுதான். முடிந்தவரை பிறருக்கு வேண்டியதைத் தந்து மகிழ்விக்கலாமே! இதில் சிரமம் எதுவும் கிடையாதே! நிறைய சோகக் கதைகள் இதுபோன்று தினம் தினம் கேள்விப்பட்டாலும், அவ்வப்பொழுது சிரித்து மகிழவும், இனிமையாக பிள்ளைகளுடன் பேசி மகிழவும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுதும் சில புரளிப்பேச்சுக்கள் நடந்ததுண்டு. ஒருமுறை பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு புரளிச் செய்தி வந்தது. காலை கடவுள் வாழ்த்துக்கு முன்பாகவே பள்ளியில் பரபரப்பு. நாங்கள் ஒவ்வொருவராக கையெழுத்திட்டு விட்டு, எங்கள் அறைகளுக்குச் செல்ல முற்பட்டோம்.

அங்கேயே நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ், ‘‘யாரும் வகுப்பிற்குச் செல்ல வேண்டாம், அவரவர் பிள்ளைகளை வரிசையாக அழைத்து வந்து மைதானத்தில் அமர்ந்து விடுங்கள்’’ என்று பணித்தார். சிறிது நேரத்தில் பள்ளி முழுவதும் மைதானத்தில் குழுமிவிட்டது. மூடிய வகுப்பறைக்குள் முப்பது, நாற்பது பிள்ளைகள் பேசுவதே எதிரொலிக்கும். ஆயிரக்கணக்கான பிள்ளைகள், திறந்த வெளி மைதானத்தில் ஒன்றாகக் குழுமி விட்டால் எப்படியிருக்கும்? அதுவும் வகுப்பு நடக்காமல், மரத்தடியில் ஜாலியாக சப்தமிட்டு உரக்கப்பேசி சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தார்கள் அவர்கள். போலீஸ்காரர்கள் மோப்ப நாயுடன், ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று சோதனையிட்டுக்கொண்டிருந்தனர். ‘‘அப்பாடா, ‘இன்னிக்கு டெஸ்ட் கட்!’ -‘சாயங்காலம் வரை இப்படியே இருந்தால் ஜாலிடா’, ‘நான் இன்னி’க்கு மொழி மனப்பாடப் பகுதி படிக்காமயே வந்தேன், தப்பிச்சேன்டா, கடவுள் காப்பாத்திட்டார்!’’ போன்ற பலவிதமான வசனங்கள் காதில் விழுந்தாலும் புரியாததுபோல இருந்து கொண்டேன்.

அப்பொழுது பார்த்து, நிறைய பேருக்கு ‘ரெஸ்ட் ரூம்’ போக வேண்டியிருந்தது. ஒரு நடை நடந்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்துவர ஆசை. இதெல்லாம் குழந்தைப்பருவ மன ஓட்டங்கள் என்பது புரிந்திருந்ததால், நாங்கள் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பள்ளி முழுவதும் சோதனை நடத்தியபின், அவர்கள் அனைவரும் வகுப்பிற்குச் செல்லலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். பின் ஒவ்வொரு வகுப்பு வாரியாக மாணவர்களை உள்ளே அனுப்பி வைத்தோம். ஆனந்தத்தின் உச்சத்தில் இருந்த அவர்களுக்கு, ஏதோ துயர சம்பவம் இப்பொழுதுதான் நடந்து விட்டதாக நினைத்து நீண்ட பெருமூச்சுடன் நடக்க ஆரம்பித்தார்கள்.  பள்ளி எதிர்பார்க்காமல் மூடப்பட்டாலோ, திடீரென விடுமுறை அறிவித்தாலோ அதன் சந்தோஷம் அவர்களுக்கு இரட்டிப்பாகும். எவ்வளவு வேலைகள் நமக்கு இருந்தாலும், வீட்டில் எவ்வளவோ விதமான பிரச்னைகள் இருந்தாலும், பிள்ளைகள் முகத்தைப் பார்க்கும்பொழுது, நம் கவலைகள் பறந்துபோகும். ஒரு மாதம் கோடை விடுமுறை வரும்பொழுது, அவர்களை ரொம்பவும் ‘மிஸ்’ பண்ணுவோம். அப்பொழுதுதான் நம் வாழ்க்கை எவ்வளவு சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டிருப்பது என்பதை அறிய முடியும்.

ஆசிரியர் ‘லீவு’ எடுத்தால் சந்தோஷப்படும் பிள்ளைகள் உண்டு. அதேசமயம், ஆசிரியருக்கு ‘சுகமில்லை’யென்றால், வருத்தப்பட்டு ஓடிவந்து பார்க்கும் மாணவர்களும் உண்டு. பள்ளி முடிந்தவுடன் அனைத்து மாணவர்களும் வீடு சென்றபின், கட்டடம் முழுவதையும் சுத்திப் பார்த்துவிட்டுத்தான் தலைமை ஆசிரியர் வீடு செல்வது வழக்கம். ஒரு தடவை ‘மெடிக்கல் லீவில்’ நான் இருந்த சமயம். மாலை திடீரென பத்து மாணவர்கள் வீட்டில் வந்து நிற்கிறார்கள். ஒரே இன்ப அதிர்ச்சி எனக்கு. எப்படிப் பள்ளியிலிருந்து, யாரைக் கேட்டுக்கொண்டு வந்தீர்கள், என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். அவர்கள் வகுப்பாசிரியர் தெரு தாண்டும் வரை வீட்டிற்கு நடந்திருக்கிறார்கள். கார் குறிப்பிட்ட ‘ஏரியா’வைத் தாண்டியவுடன், ‘ஜாலியாக பேசிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.’ இது தப்பில்லையா?’ என்று நான் கேட்க, ‘நாங்கள் எங்கள் பெற்றோர் அனுமதி பெற்றுத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்’ என்றார்கள். ஆம், சிறிது நேரத்தில் அவர்களின் பெற்றோர்களே எங்கள் வீட்டிற்கு வந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றார்கள்.

ஒரு மாதமாக என்னைப் பார்க்காமல் ஏங்குவதாகவும், ‘‘புதிய ‘மிஸ்’ சிரிச்சு பேச மாட்டேங்கறாங்க!’’ என்ற குறையையும்  வைத்தார்கள். அவர்கள் புதிது, உங்களைப்பற்றி தெரியாது? தெரிந்தால் அவர்களும் ‘ஃபிரண்ட்’ ஆவார்கள் என்று சொல்லியனுப்பினேன். எத்தனை தொல்லை கொடுத்தாலும், அன்பான தொண்டுக்கே உரித்தான வேலை! வீட்டில் ஒன்றிரண்டு பிள்ளைகளின் பாசமே நம்மை திக்குமுக்காடச் செய்கிறது என்றால், ஆயிரக்கணக்கான பிள்ளைப்பாசம் கிடைக்குமிடமல்லவா, நம் பள்ளிகள்! உடல்நிலை பூர்ண குணமடைந்ததாக நான் பாவித்தேன். குறிப்பிட்ட விடுப்பு முடிவதற்குள்ளாகவே மீண்டும் வேலையில் சேர்ந்தேன். அங்குதான் எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைப்பதை உணர்ந்தேன்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Tags :
× RELATED கற்பித்தல் என்னும் கலை