×

கைகொடுக்குமா ஹெர்ட் இம்யூனிட்டி

நன்றி குங்குமம் தோழி

முனைவர் தி.ஞா.நித்யா இணைப் பேராசிரியர், உயிரித் தொழில்நுட்பவியல் துறை

ஜூன்-30 வரை பொது முடக்கம் என்ற அறிவிப்பின்படி சற்றே அச்சத்துடன் செய்திகளை உற்று நோக்கினால், “அட இதுல எங்க முடக்கம் இருக்கு??” என்று நினைக்குமளவிற்கு தளர்வுகளை வாரி இறைத்துள்ளது அரசு. சரி இயல்பு வாழ்க்கை திரும்புகிறது நல்லது என்ற எண்ணத்துடன், கொரோனா கொரோனான்னு சொன்னாங்களே... இனி என்ன செய்வது என்றெல்லாம் மனம் அலைபாய தொடங்கியது உண்மைதான்... இந்தியாவில் வேகமாய் பரவிவரும்  இந்த கொரோனாவை எப்படி எதிர் கொள்ள போகிறோம்?  ஒரு வேளை ஹெர்ட் இம்யூனிட்டி (Herd Immunity) தான் தீர்வா என்று பல கேள்விகள் நம் கண்முன். இதனிடையே ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம்..

பொதுவாக உடலில் எந்த ஒரு நோய் ஏற்படுத்தும் கிருமிக்கும் (antigen) இயற்கையாகவே ஒரு “செட்” நோய் எதிர்க்கும் சக்தியை உருவாக்கி கொள்ளும் திறன் (antibody) உண்டு. முதல் முறை நம்மை தாக்கும் அந்த கிருமிக்கு எதிராக உடல் எதிர்த்து, போராடி வென்று, பின் சேமித்து வைத்துக்
கொள்ளும் அந்த  எதிர்ப்பு சக்தி (acquired immunity) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது அடிபட்டு தெரிந்து கொண்ட அனுபவ கதை போலதான்.
ஏற்கனவே முன்பொரு நாள் உடலை தாக்கிய கிருமியால் ஏற்பட்ட பாதிப்பால் நோய்வாய்பட்டாலும் அந்த கிருமியை எதிர்த்து போராடி உடல் சில எதிர்ப்பு சக்தி செல்களை சேகரித்து வைத்துக் கொள்ளும்.  மீண்டும் ஒரு முறை அதே கிருமி தாக்கினால் துரிதமாய் செயல்பட்டு அந்தக் கிருமியை எதிர்ப்பு செல்கள் செயலிழக்கச் செய்து விடும். இதே செயலை செயற்கையாக உருவாக்கப்பட்ட vaccinesகளும் செய்யும்.

மந்தைநோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதும் அவ்வாறே. உதாரணத்திற்கு ஒரு தொற்று நோயை ஒரு கூட்டத்தில் பரவ விடுவோமெனில் அவை ஒவ்வொரு உடலுக்கேற்ப தன் தீ்ர விளையாட்டாய் மேற்கொண்டு வீழ்ந்தாரை வீழ்த்தும் வென்றோரிடம் வீழும். கொரோனாவிலும் இதே நிலைதான். நம் இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு வேளை நோய் கட்டுப்பாடின்றி பரவ தொடங்கி விட்டால், மக்களிடையே தொற்று கணக்கெடுப்பையும் தாண்டி மிக அதிவேகமாக பரவ தொடங்கி விட்டால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மூலமே தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்த நோய்க்கு ஆட்பட்டு எதிர்ப்பு சக்தி ஏற்படுத்திக் கொண்டால் இது மேலும்  ஒருவரில் இருந்து மற்றவருக்கு பரவுவது வெகுவாகக் குறையும்.

ஆனால் இது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. சில நேரங்களில் கொரோனா வைரஸ் தன் இயல்பை மாற்றிக் கொண்டு, இருப்பதை விடவும் வீரிய நிலை அடைந்தால் இதன் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கவும் வாய்ப்புள்ளது. அதுவும் இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் எல்லோருக்கும் பரவட்டும் என்று அவ்வளவு எளிதில் விட்டுவிடவும் முடியாதுதான். ஆனால் 80 நாள் ஊரடங்கில் நாடி பிடித்துப் பார்த்ததில் மற்ற நாட்டு மக்களை ஒப்பிடுகையில் இந்திய மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சற்று அதிகம்தானோ என்று கூடத் தோன்றுகிறது. கொரோனா வந்த பலருக்கு மிகப் பெரிய அறிகுறிகள் என்று ஏதும் இல்லை. இதுவரை மிக குறைந்த உயிரிழப்பே ஏற்பட்டுள்ளது. ஆக மிக கொஞ்சமாக இந்த  herd immunityயை நம்பி பயணிக்கலாம் என்றே தோன்றுகிறது.

கொரோனாவை தாண்டி பயம்தான் இப்போது நம் முதல் எதிரியாக வலம் வருகிறது. அது இது என்று இஷ்டத்துக்கு ஆதாரமில்லாமல் அடித்து விட்டு மக்களை பயத்தில் வைத்திருப்பதால் உடலில் நடக்கும் குழப்ப யுத்தத்தில் “கார்டிசால்”- cortisol  எனப்படும் stress hormone அதிகம் சுரந்து இன்னும் இன்னும் எதிர்ப்பு சக்தியை குறைக்கத்தான் செய்யும்.. “All is well” தத்துவம்தான் தற்போதைக்கு நம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை காக்க வல்ல இனிய சொல். சும்மா பயங்காட்டா தீங்கப்பா... எல்லாம் சரியா போகும்னு சொல்லக்கூடிய சில பாசிட்டிவ் ஆறுதல் வார்த்தைகளில் மருந்தையும் தாண்டிய மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. பயத்தை பரப்ப வேண்டாம்.

பலத்தை பரப்புவோம். இதுவும் கடந்து போகும், கொரோனாவும்தான். பொறுத்திருப்போம் பாசிடிவ் எண்ணங்களுடன்.. இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்... கொரோனா வருகிறதோ இல்லையோ இன்னும் சில நாட்களுக்கு சுய சுத்தத்தை பேண வேண்டும். சுவைக்காக மட்டுமே தின்று கொண்டிருந்த துரித உணவுகளை தவிர்த்து நல்ல எதிர்ப்பு திறன் தரக்கூடிய சத்தான உணவுகளை உண்ண வேண்டும். நம் ஆரோக்கியத்தை நாம்தான் கருத்தில் கொள்ள வேண்டும். நல்ல எதிர்ப்பு சக்தியுடன் கொரோனாவிற்கு எதிராகப் போராட வேண்டியது நம் உடல்தான்.

Tags :
× RELATED ஹெர்ட் இம்யூனிட்டி.. கொரோனா வைரஸ்...