×

தாய்மையுற்ற நிலையில் சிறையில் வாடும் சஃபூரா சர்கார்

நன்றி குங்குமம் தோழி

குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்த டெல்லி மாணவி சஃபூரா சர்கார் மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி சஃபூரா சர்காரின் வயது 27.  டெல்லியின் தென் கிழக்கு பகுதியில் வசித்து வந்த சஃபூரா வீட்டிற்கு போலீஸார் செல்லும்போது மதியம் மணி 2.30. அப்போது சஃபூரா வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். போலீஸார் தங்களை டெல்லி காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராய் சஃபூரா போராடியது குறித்து சில கேள்விகளை அவரிடத்தில் கேட்க வேண்டும் எனத் தெரிவித்து, மத்திய டெல்லியில் உள்ள அவர்களின் அலுவலகத்துக்கு சஃபூராவை அழைத்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் பல கேள்விகள் கேட்டுள்ளனர். அதன்பிறகு இரவு 11.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது நடந்தது ஏப்ரல் 10. போலீஸார் அழைத்து செல்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் சஃபூரா தாய்மை அடைந்து இருப்பது அவருக்கே தெரியவந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களை வைரஸ் நோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிக கைதிகள் உள்ள டெல்லியின் மிகப் பெரிய திகார் ஜெயிலில் சஃபூரா அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் CAA, NRC, NPR சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தியா முழுமைக்கும் போராட்டத்தைக் கொண்டு செல்ல காரணமானவர்கள் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள். யாரெல்லாம் போராட்டத்தை முன்னெடுத்தார்களோ அவர்களை காவல்துறை திட்டமிட்டு கைது செய்தது.  இந்நிலையில்தான், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி வன்முறையில் சஃபூராவுக்குத் தொடர்பிருப்பதாய் டெல்லி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு ஐந்து நிமிடங்கள் கணவர் மற்றும் வழக்கறிஞருக்கு அழைப்பு  விடுக்க  அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று காரணமாய் சந்திக்கவும், கடிதம் எழுதவும், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சஃபூரா மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியமற்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சஃபூராவின் மீதான குற்றச்சாட்டை அவரின் சகோதரி சமீயா மறுக்கிறார். அவர் குற்றவாளி இல்லை. அவரொரு மாணவி. மேலும் அவர் தைரியமான, நேர்மையான பெண். தனக்கென சில கொள்கைகளைக் கொண்டவர். ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினராய் ஜனநாயக முறையில் அமைதியாக மட்டுமே தனது போராட்டத்தை முன்னெடுத்தவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் டெல்லி போலீஸ், தாங்கள் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் தங்கள் கடமையை செய்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் அனைத்து கைதுகளும், தடவியல் மற்றும் அறிவியல் ஆதாரங்களை ஆராய்ந்தபின்னே மேற்கொள்ளப்பட்டதாகவும்
தெரிவிக்கின்றனர். கலவரத்துடன் போராட்டத்தை இணைக்க போலீஸார் தவறான கூற்றுக்களை பயன்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து பேசுபவர்களுக்கு எதிராய் செயல்படுவதற்கான சாதகமான சூழலாக, இந்த ஊரடங்கை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன.

ஆனால் ஜாமியா மிலியாவில் மாணவர்களைத் தாக்கிய எந்த காவல்துறையினர் மீதும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. ஊரடங்கு தொடங்கியபோது, சஃபூராவுடன் பல முஸ்லிம் மாணவர்களும் ஆர்வலர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசை விமர்சிப்பவர்களை துன்புறுத்துவதற்கும் சிறை வைப்பதற்குமான கருவியாக இந்த UAPA சட்டத்தை அரசு பயன்படுத்துவதாகவும், பிணை வழங்குவது, விரைவாக விசாரணை நடத்துவது, மனித உரிமைகளைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட எல்லா விதிமுறைக்கு அப்பாற்பட்ட கறுப்புச் சட்டம் இது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ‘சன்விதான் சுரக்‌ஷா அந்தோலன்’ எனும் கூட்டமைப்பின் மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவில், நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்தக் கைது நடவடிக்கைகளில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Safura Sarkar ,jail ,
× RELATED பெங்களூரு சிறையில் கொள்ளையன் முருகன் சாவு