×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* அதிரசத்துக்கு மிக்ஸியில் மாவு அரைத்ததும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அழுத்தி விட வேண்டும். காற்று புகாமல் இருக்க வேண்டும். பிறகுதான் வெல்லம் அல்லது சர்க்கரை, பால் சேர்த்து மாவை கொஞ்சம், கொஞ்சமாக கலக்க வேண்டும்
- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

* தயிர் சாதம் புளிக்காமல் இருக்க அரிசியை வேக வைக்கும்போதே பாலைக் கலந்து வேக விட வேண்டும். சாதம் ஆறிய பிறகு சிறிதளவு தயிர் சேர்த்தால் நேரம் கழித்துச் சாப்பிட்டாலும் அதிக புளிப்பு இருக்காது.

* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

* தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கிவிடும்.
- கவிதா சரவணன், திருச்சி.

* அரிசி, பருப்பு வகைகளை பத்திரப்படுத்தி வைக்கும்போது, காய்ந்த வேப்பிலைகளை சிறிது போட்டு வைத்தால், புழு, பூச்சிகள் வராது.

* டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்தால் அதிக சுவை கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும். கேக் கலவையில் அரை கப் ஆரஞ்சு சாறு சேர்த்தால், கேக் அதிக மென்மை பெறும்.

* மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய்ப்பொடி ஆகிய பொருட்கள் கெடாமல் இருக்க ஒரு துண்டு பெருங்காயத்தை போட்டு வைக்கலாம்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* பஜ்ஜி மாவுடன் புதினா அல்லது அரைக்கீரை போன்ற ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கிக் கலந்து பஜ்ஜி சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

* மாங்காய் ஊறுகாய் தாளிக்கும்போது கொஞ்சம் பூண்டு பற்களையும், கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொண்டால் ஊறுகாய் வாசமாக இருக்கும்.

* இட்லி மாவு, உளுந்து போதாமல் கல் மாதிரி இருந்தால், மாவில் இரண்டு கரண்டி ஆறின பாலும், இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயும் விட்டுக்கலந்து பின் இட்லி ஊற்றினால் இட்லி மிருதுவாக, சுவையாக இருக்கும்.

* கீரை வேக வைத்த தண்ணீரில் சோள மாவு கலந்து உப்பு சேர்த்து, நறுக்கிய மிளகாய், தக்காளி, வெங்காயத்தை வெண்ணெயில் தாளித்து ஊற்றினால் சுவையான, சத்தான சூப் ரெடி.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* பிஸ்கெட் பாக்கெட் பிரித்த பின்னர் மீதமுள்ளதை ஃப்ரிட்ஜில் வைத்தால் மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.

* காய்ந்த ரொட்டியை இட்லித்தட்டில் வேக வைத்து எடுத்தால் புத்தம் புதிதுபோல் இருக்கும்
- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

* கறிவேப்பிலையை காய வைத்து மிளகாய் மசாலா அரைக்கும்போது சேர்த்தால் குழம்பு சுவையாக மணத்துடன் இருக்கும்.

* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள கசப்பு நீங்கிவிடும்.

* பீங்கான் தட்டுகள், கண்ணாடிப் பொருட்கள் போன்றவற்றை வரிசையாக அடுக்கும்போது கீறல் விழாமல் இருக்க ஒவ்வொரு தட்டின் இடையிலும் டிஷ்யூ பேப்பரை வைத்து விடுங்கள். ஒன்றோடு ஒன்று உடையாமல் தட்டுகள் பாதுகாப்பாக இருக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* காய்கறிகள் வறுவல் செய்யும்போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் சிறிது சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் சுவையாக இருக்கும்.
- ச.லெட்சுமி, செங்கோட்டை.

* ஆம்லெட் போடும்போது தண்ணீரில் பாத்திரத்தை முக்கியெடுத்து விட்டு, அதில் முட்டையை அடித்து கலக்குங்கள். பாத்திரத்தில் தண்ணீர்த்தன்மை இருந்தால் முட்டைக்கூழ் ஒட்டிக்கொள்ளாது.

* அவலில் சிறிது இளம் சூடான பாலைத் தெளித்து, பிறகு அவலில் தேங்காய்த்துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்தால் சுவை கூடும்.

* அவலை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி பிறகு ஆற வைத்து பாட்டிலில் அடைத்து வைத்தால் அதிக நாட்கள் கெடாது.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.

* கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் இயந்திரத்தில் அரைத்து சப்பாத்தி செய்தால், சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

* சாலட் பிரெஸிங் தயாரிக்கும்போது எண்ணெயை தாராளமாகவும், வினிகரை குறைவாகவும் சேர்த்து கலக்க வேண்டும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* பொதுவாக பொரியல் செய்யும்போது இரும்புச்சட்டியில் வறுத்தால் இரும்புச்சத்து எளிதாக கிடைத்துவிடும்.

* கிரேவி வகைகள் செய்யும்போது இரண்டு கரண்டி வேர்க்கடலை தூளை கலந்தால் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

* ஜாம் கெட்டியாகி விட்டால் சுடுநீரில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் இளகி விடும்.
- நா.பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை.

டீ மசாலா

தேவையான பொருட்கள்

ஜாதிக்காய் - 1,
சுக்கு - 20 கிராம்,
மிளகு - 10 கிராம்,
ஏலக்காய் - 10,
பிரிஞ்சி இலை - 2 சிறு துண்டுகள்.

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும்  வெயிலில் நன்றாக காய வைத்து மொறுமொறுவென உள்ளபோது இடித்து நைஸாக பவுடராக தயார் செய்து கொள்ளவும். 6 கப் டீ தயாரிக்க 4  கப் தண்ணீரை சுட வைத்து, சர்க்கரை போட்டு (தேவையான அளவு), 1 டீஸ்பூன் மசாலா பொடி தூவி 2 நிமிடம் கொதித்ததும் தேவையான அளவு டீத்தூள் போட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து 2 கப் பாலை சூடாக்கி அத்துடன் சேர்த்து வடிகட்டி சாப்பிடலாம்.

- ஆர்.மகாலட்சுமி, சென்னை.

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்