இவாங்கா ட்ரம்பின் பாராட்டில் நனைந்த பீகார் சிறுமி

நன்றி குங்குமம் தோழி

நமது தேசம் முழுவதும் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தூரங்களைக் கடப்பதைப்போல, பீகாரைச் சேர்ந்த சிறுமியொருவர், தன் அப்பாவுடன் 1,200 கிமீ தூரத்தை சைக்கிளில் கடந்து பயணித்திருக்கிறார். இந்தச் செய்தி அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கில், தன்  தந்தையுடன் ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் சிக்கிக்கொண்டார்.

சிறுமியின் தந்தையோ, சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந் நிலையில் திடீர் என அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் என்ன செய்வதென குழம்பிய சிறுமியும் அவளின் தந்தையும் சேர்ந்து துணிச்சலோடு ஒரு முடிவை எடுத்தனர். அதாவது  தங்கள் கையில் இருக்கும் பணத்தில் சைக்கிள் ஒன்றை வாங்கி, அதில் தங்கள் சொந்த ஊரான பீகாருக்கு பயணிப்பதென முடிவானது. காலில் அடிபட்டு தந்தை நடக்க முடியாத நிலையில் சிறுமியே சைக்கிளை செலுத்துவதென முடிவானது. சைக்கிளின் பின் கேரியரில் தன் அப்பாவை சுமந்தபடி மன தைரியத்தோடு சைக்கிளை செலுத்தி, ஏழு நாட்களில் பீகாரை அடைந்

திருக்கிறார். சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும் சிறுமியின் துணிச்சல் சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இந்தச் செய்தி அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா ட்ரம்பின் கவனத்தையும் ஈர்க்கவே, தந்தை மீதான பாசத்தில் 1200 கிமீ தூரத்தை சைக்கிளில் துணிச்சலுடன் கடந்த சிறுமி ஜோதி குமாரியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டி புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தி மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பற்றியது. ஊடகங்களும் தங்கள் பங்குக்கு பீகார் சிறுமி மீது தங்கள் கவனத்தைத் திருப்பின. சிறுமியின் செயலைக் கவனித்த சைக்கிளிங் பெடரேசன் ஆஃப் இந்தியா சிறுமியின் திறமையை வியந்து பாராட்டியது. அவரது சைக்கிளிங் திறன் சோதிக்கப்பட்டு, பயிற்சியாளராய் நியமிப்பதாகவும் அறிவித்துள்ளது.

உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் சிறுமியின் தைரியத்தைப் பாராட்டி ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் புலம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் முழுவதுமாய் கைவிட்ட நிலையில், தனது துணிச்சலாலும் திறமையாலும் 1,200 கி.மீ தூரத்தைக் கடந்த வீரச்சிறுமிக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி

Related Stories:

>