×

தெங்குமரஹாடாவும் டாக்டர் ஜெயமோகனும்

நன்றி குங்குமம் தோழி

துடிப்பு மிக்க இளம் மருத்துவர் ஒருவரை நமது தமிழகமும் இந்திய தேசமும் இழந்து நிற்கிறது...

இந்தியாவில் சமூக முடக்கம் அறிவித்த சில நாளிலேயே கோவையில் உயிரிழந்த இளம் டாக்டர் ஜெயமோகனை நாம் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. கொரோனா தொற்றால் அவர் இறந்ததாக செய்தி பரப்பப்பட்டு அவரின் உடல் அடக்கம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினரின் தலையீட்டால், மருத்துவரின் இறப்புக்குக் காரணம் கொரோனா தொற்றல்ல என்பது தெளிவானது. ICMR அளித்துள்ள தகவல்படி காடுகளில் கண்டறியப்பட்ட காட்டு உண்ணி தாக்குதலில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ (Scrub Typhus) வைரஸ் நோய் தாக்கத்தில் டாக்டர் ஜெயமோகன் இறந்துள்ளார் என்கிறது. இந்த வகை வைரஸ் கொரோனா நோய் தொற்றுபோல் மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவாது என்கிறது மருத்துவ ஆய்வு.

+2ல் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்தவர் மருத்துவர் ஜெயமோகன். தனக்கு மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டிருப்பதாக மீண்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, அதில் அவரின் மதிப்பெண்கள் உயரவே மாநில அளவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களின் கரங்களால் சான்றிதழையும் பாராட்டையும் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புடன், கோல்டு மெடல் டிஸ்டிங்ஸன் என தொடர்ந்து
வெற்றிகளைக் குவித்து, கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே தனது மருத்துவ சேவைக்கான முதல் பணி வாய்ப்பாக மலைக் கிராமமான தெங்குமரஹாடாநோக்கிப் புறப்பட்டார். நீலகிரி மாவட்டத்தின் கடைகோடி கிராமம் தெங்குமரஹாடா. இயற்கை எழில் கொஞ்சும் வளமான கிராமம் இது. கொடநாடு காட்சி முனையில்(view point) இருந்து பார்த்தால் இந்தியாவின் வரைபடம் போல அழகாய் காட்சி தரும். இருபோகம் விளையும் நிலமிது. நீலகிரி மாவட்டத்திலே நெல் மற்றும் உணவு தானிய விளைச்சலுக்கு ஏற்ற நிலம் இங்குதான் இருக்கிறது. வாழை, மிளகாய், மஞ்சள், வேர்க்கடலை, ராகி, மக்காச்சோளம் என விளைவித்து ஏற்றி நகரத்துக்கு அனுப்பி வைக்கின்றனர் இந்த மலை கிராம மக்கள்.

இங்கு படுகர், இருளர், குரும்பர், ஆதி திராவிடர் மற்றும் கர்நாடகாவில் இருந்து புலம்பெயர்ந்த ஒக்கலிகக் கவுடர் இன மக்களும், அருகாமை கிராமங்களான அல்லிமாயார், கல்லாம்பாளையம் கிராமங்களில் இருளர் இன மக்களும் கலந்தே வாழுகின்றனர். இவர்களின் சுமார் 1200 குடும்பங்கள், 4000த்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை, மூதாதையர் வாழ்ந்த மண்ணின்  உணர்வுகளை இழக்க மனமின்றி, காடும் காடு சார்ந்த வாழ்க்கையுமாய் இன்றும் இருக்கிறார்கள். இவர்களைச் சென்றடைய அடர்ந்த காட்டிற்குள் போகவர 50 கிலோ மீட்டர் பயணித்து, இடைமறிக்கும் மாயாற்றைக் கடக்க வேண்டும். கோத்தகிரி மற்றும் மேட்டுப் பாளையத்தில் இருந்தும் தினமும் காலை மாலை இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே அடர்ந்த வனத்துக்குள் பயணிக்கும். கிராமம்வரை பேருந்து செல்ல முடியாத நிலையில் மாயாறு குறுக்கிடுவதால் ஆற்றுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விடும்.

ஆற்றைக் கடக்க தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் பரிசல் மூலமாகவே மக்கள் கிராமத்துக்குள் நுழைவர். சிலநேரம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டால் கரையிலே நிற்க வேண்டிய அவலமும் உண்டு. பரிசலையே செலுத்த முடியாத நிலையில் குறைவாய் தண்ணீர் ஓடினால் முதலைகள் இருக்கும் ஆற்றில் மக்கள் பயத்துடன் இறங்கி கரையேறுகின்றனர். அவசரத் தேவை, உடல் நலமின்மை, முதியோர் மருத்துவம், கர்ப்பிணிப் பெண்களின் அவசர நிலை, படிப்பிற்காக வெளியில் சென்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு, எதிர்பாராமல் நிகழும் விலங்குகளின் தாக்குதல், விஷக் கடி என எல்லாவற்றுக்கும் சரியான போக்குவரத்து இன்றி நூற்றாண்டைத் தொட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இளம் மருத்துவர் ஜெயமோகன் இந்த மக்களுக்காகத்தான் அடர்ந்த இந்த காட்டுக்குள் பயணித்து அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக மூன்றாண்டுகள் தொட்டு பணி செய்திருக்கிறார். அவரின் இறப்பு குறித்து தெங்குமரஹாடாவில் வசிக்கும் ஒரு சிலரிடம் பேசியபோது…

ரோஜாமணி, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்

அவரது ஊர் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை கிராமம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த ஊரில் எங்களோடு பயணித்தவர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் தங்கிதான் மருத்துவம் பார்த்து வந்தார். டிரைவர் இல்லாத நிலையில் அவருக்கு ஒரு ஜீப் வழங்கப்பட்டிருந்தது. அவரே அதை ஓட்டிக்கொண்டு அருகில் இருக்கும் பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தார். அனைவரிடத்திலும் இயல்பாகப் பழகும் தன்மை கொண்டவர். இறுதியாக ஆம்புலன்ஸில் ஏறியவர் திரும்பவும் இறங்கி வந்து லீவ் லெட்டர் எழுத மறந்துவிட்டேன் என எழுதி கையெழுத்திட்டு டேபிளில் வைத்துவிட்டுச் சென்றார் என அந்த நிமிடத்தை நினைத்து கண் கலங்கியவர், அதுதான் அவரின் இறுதி என நாங்கள் நினைக்கவில்லை என்றார்.
பெற்றோருக்கு அவர் ஒரே பையன். அவரின் ஒரே அக்கா திருமணமாகி வெளிநாட்டில் இருந்து வரமுடியாத நிலையில், அவருடன் படித்தவர்கள், பணியாற்றியவர்கள், எங்கள் ஊர் மக்கள் என யாருமே அவரது இறுதி மரியாதையில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த வாரம்தான் அவரின் அப்பா அறையைக் காலி செய்து, டாக்டரின் உடமைகளை எடுத்துச் சென்றார் என முடித்தார்.

வரதராஜன், தெங்குமரஹாடா

இது டைகர் ரிசர்வ் பாரஸ்ட் என்பதால் வனத்துறை அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்றே உள்ளே வர முடியும். காலை மற்றும் மாலை வேளைகளில் யானை, புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கரடி, செந்நாய், மான், முதலை, நீர்நாய், பாம்புகள் இந்த காட்டுக்குள் நிறைய உள்ளது. கொடிய  விலங்குகளின் தாக்குதலும் சில நேரங்களில் உண்டு. எங்களை அடிக்கடி யானை துரத்தும் என்று மேலும் அதிர்ச்சி கொடுத்தார்.  டாக்டர் ஜெயமோகனை கடித்த அதே வகை பூச்சி என்னையும் கடித்துள்ளது. எனது கழுத்துப் பட்டையில் மிகப் பெரிய புண் வந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சலில் அவதிப்பட்டேன். ஆசிட் பட்டால் வரும் எரிச்சல்போல் அது இருந்தது. அந்த வகை பூச்சிக் கடியில்தான் டாக்டர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேலாக கடும் காய்ச்சலில் இருந்துள்ளார். கொரோனா ஊரடங்கு என்பதால் அவரால் இங்கிருந்து உடனடியாகக் கிளம்பவும் முடியவில்லை. மாற்று மருத்துவர் இல்லாத நிலையில் விடுப்பு கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து காய்ச்சல் அதிகமாகவே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, எங்கள் கண் முன் நடந்து சென்றே ஆம்புலன்ஸில் ஏறி கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த இரண்டு நாட்களில் அவரின் இறப்புச் செய்திதான் எங்களுக்கு வந்தது. மிகவும் வேதனையான நாட்கள் அது. ஊரடங்கால் அவர் இறப்பில் கலந்துகொள்ள எங்களால் முடியவில்லை என வருத்தத்துடன் முடித்தார்.

தங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல மருத்துவரை திரும்பவும் பார்க்கவே முடியாத நிலையில், இழந்த சோகத்தில் இருந்து தெங்குமரஹாடா மக்கள் இன்னும்
வெளிவரவில்லை. இந்த மக்களின் நீண்டநாள் கோரிக்கை.. தாங்கள் எளிதில் சென்றுவர சாதாரணமான மண் பாதையும், மாயாற்றைக் கடக்க பாலமும் வேண்டும் என்பதே. மருத்துவர் ஜெயமோகனின் இறப்பிற்குப் பிறகாவது அரசு இந்த மக்கள் நலனில் கவனம் செலுத்துமா..?

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஸ்தேவன்

Tags : Jayamohan ,
× RELATED செல்போனுக்கு அடிமையான பிளஸ் 1 மாணவி...