நன்றி குங்குமம் தோழி

இந்தியாவின் மிகப் பெரும் துயரங்களில் ஒன்றாக மாறியுள்ளது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை! நாங்கள் எப்போது ஊர் போய் சேர்வோம்.. எப்படிப் போய்ச் சேர்வோம்.. எதுவுமே தெரியாது… ஆனால் பயணத்தை தொடங்கிவிட்டோம்… வழியில் என்ன கிடைக்கிறதோ அதை உண்டு தொடர்ந்து நடக்கிறோம்..  இது தமிழகத்தில் இருந்தும்.. ஜார்கண்ட், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து செல்லும் தினக் கூலித் தொழிலாளர்களின் அவலம். இளைஞர்களில் சிலர் சைக்கிளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அரசால் சமூக முடக்கத்தின் நான்காம் கட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் போதுமான இரயில் வசதி, பேருந்து வசதி பற்றாக் குறையால் காத்திருந்த பலரும் நடக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு நாளைக்கு சராசரியாக 2000க்கும் அதிகமானவர்கள் நெடுஞ்சாலைகளில் கைகளில் குழந்தைகளோடும், தட்டுமுட்டு சாமான்களோடும், ஒரு சிலர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை சுமந்தபடியும் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தே கடக்கின்றனர். அரசு வழங்கும் அனுமதிச் சீட்டு சிலருக்குக் கிடைத்தாலும் இவர்களை இரயில் நிலையங்களுக்குக் கூட நடந்து செல்ல காவல்துறை அனுமதிப்பதில்லை. நடந்தவர்களில் பலர் மாநில எல்லைகளில் காவலர்களால் தடுக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது.

தினக் கூலியை எதிர்பார்த்து வாழும் எங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வருமானமும் இல்லை. வீட்டு வாடகையும் தர முடியவில்லை. சாப்பிடத் தேவையான கையிருப்பும் குறைந்துவிட்டது. எங்களால் இதற்கு மேல் முடியவில்லை. எங்கள் சொந்த மாநிலத்திற்கே சென்றுவிட்டால் எப்படியாவது சமாளிப்போம். தயவு செய்து எங்களை எங்கள் வீடுகளுக்குப் போகவிடுங்கள்… தடுத்து நிறுத்தாதீர்கள்… நாங்கள் ஒரு நிமிடத்தைக் கூட தாமதிக்க விரும்பவில்லை… நடக்க அனுமதியுங்கள் என்பதே இவர்களின் ஒட்டு மொத்த குரலாக உள்ளது. இவர்கள் எங்கே சாப்பிடுவார்கள்..? எப்படித் தூங்குவார்கள்..? குழந்தைகள், பெண்கள் உடனிருக்கும் நிலையில் எவ்வாறு ஓய்வெடுப்பார்கள்..? கழிப்பிட வசதி.. தண்ணீர் வசதிகளுக்கு என்ன செய்வார்கள். எதுவும் தெரியாது?  ஏதோ ஒரு நம்பிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்ட இவர்கள் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், மிகப் பெரிய ஐ.டி. நிறுவனங்கள், மால்கள், வளைந்து நெளிந்து செல்லும் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ இரயில் வசதிகள் என, மாநிலங்களின் தலை நகரங்களை ஆக்கப்பூர்வமாய் உருவாக்கியதில் இந்த புலம் பெயர் தொழிலாளர்களின் பெரும் உழைப்பு இருக்கின்றது.  

கட்டிடத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அது சார்ந்து இயங்கும் சிறுசிறு பணி செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பலரும் இதில் அடக்கம். நெடுஞ்சாலைகளில் அடிக்கும் வெயிலில் இவர்கள் டீ ஹைட்ரேஷன், டயோரியா போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அந்தந்த மாநிலத் தொழிலாளர்களை அரசு பொறுப்பேற்று அடுத்த மாநில எல்லைவரை இறக்கியிருந்தால் கூட இவர்கள் பாதுகாப்பாக ஊர்போய் சேர்ந்திருப்பார்கள். 40 நாள் ஊரடங்குக்குப் பிறகு ஒரு சில இரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டாலும், வேலையும் வருமானமும் இன்றி தவித்தவர்களிடம் பயண சீட்டிற்கான பணம் வசூலித்ததாகவும் தகவல்கள் வந்தது. டிக்கெட்டிற்குப் பணமில்லாத நிலையில் மேலும் பலர் கூட்டம் கூட்டமாகத் தங்கள் உறவுகள் வசிக்கும் இடம் நோக்கி உடமைகளோடு நடக்கத் தொடங்கினர்.

மார்ச் 24 சமூக முடக்கத்திற்குப் பிறகே தொழிலாளர் பிரச்சனை பெரிதாக வெளிச்சத்திற்கு வந்தது. புலம் பெயர் தொழிலாளர்களின் வேதனை மிகுந்த நாட்கள் ஆரம்பிக்கத் தொடங்கியது என்கிறார் இந்திய கிராமப்புற மக்கள் பாதுகாப்பு மையத்தின்(PARI) தலைவரான சாய்நாத். இதற்கு முன்புவரை இவர்களைப் பற்றி யாருமே பெரிதாகக் கவலைப்படவில்லை. பேசவும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர் மட்டும் விபரம் எதுவும் இல்லாமலே இவர்களது இறப்பு பதியப் பட்டுள்ளது என்கிறார் இவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக. செயல்பாட்டாளர்கள் சிலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எந்தெந்த மாநிலங்களில்  எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனத் தொழிலாளர்கள் துறை அமைச்சகத்திடம் கேட்ட கேள்விக்கு, அவர்களிடத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து சரியான தரவுகள் இல்லையெனத் தெரிய வந்துள்ளது என்கிறார் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரான அறிவரசன்.

வரிசை வரிசையாய் ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் வேய்ந்த அலுமினியக் கூரைக்கடியில், வெயில் அடித்தாலும், மழை வந்தாலும் அதற்குள் இருக்க முடியாத நிலையில்தான், தினக் கூலி வேலை செய்யும் இந்த மனிதக் கூட்டம் பேரவலங்களோடும், பெரும் துயரத்தோடுதான் இத்தனை நாள் கூட்டம் கூட்டமாகவும், சிலர் குடும்பமாகவும் அதற்குள் தங்கினார்கள். இவர்களைக் கூட்டி வந்த நிறுவனமும் அரசாங்கமும் கண்டுகொள்ளாது கைவிட்ட நிலையில், பிழைக்க வந்த இடத்தைவிட்டு நிற்கதியாய் செல்லும் இவர்களின் ஒட்டுமொத்த பதிலும் ‘நாங்கள் யாரும் பசியால் செத்துவிடக் கூடாது’ என்பதாகவே இருக்கிறது.

அடித்தட்டு மக்களின் உழைப்பை சுரண்டிவிட்டு அவர் களின கஷ்டத்தை உணராத சமூகம் சமூகமே இல்லை.

* மார்ச் 24 சமூக முடக்க அறிவிப்புக்குப் பிறகு டெல்லியில் ஒரே நாளில் ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்து நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவங்களும் நடந்தேறியது.

* மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி நடந்தே சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவழியில் குழந்தை பிறந்தது. 2 மணி நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் அந்த சிசுவை கைகளில் சுமந்தபடியே மேலும் 150 கி.மீ. பயணித்திருக்கிறார் ஊர்போய் சேரும்வரை தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார் அந்த பெண்ணின் கணவர் கலங்கிய நிலையில்.

* சிலர் லாரிகளிலும், டெம்போக்களிலும், கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை எந்திரங்களிலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி நெடுந்தொலைவு பயணித்தனர்.

* சாலை மார்க்கமாக நடந்தால் காவலர்களால் தடுக்கப்படுவோம் என அஞ்சி இரயில் பாதையில் மகாராஷ்டிராவில் இருந்து பயணித்த தினக் கூலித் தொழிலாளர்கள் அவுரங்கபாத் இரயில் பாதையில் இளைப்பாறியபோது, சரக்கு இரயில் ஏறி 16 உடல்களை அதே இடத்தில் சிதறடித்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இதில் குழந்தைகளும் அடக்கம்.

* பலர் ஆபத்தை உணர்ந்தும் யமுனை ஆற்றில் இறங்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.

* ஒரு குழந்தையை குழந்தையின் தாய் டிராலி சூட்கேஸின் மீது படுக்க வைத்து கால்கள் தரையில் பட தரதரவென்று இழுத்த படி நடக்கிறார். குழந்தைகள் பலரும் கொதிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் கால்கள் வலிக்க வலிக்க அழுது கொண்டே நடந்து செல்கின்றனர்.

* இந்த பெரும் துயரத்திலும் தங்களது வளர்ப்பு பிராணிகளை விட்டுச் செல்ல முடியாமல் நெஞ்சோடு அணைத்து பலர் விரைவாக ஊர் நோக்கிச் செல்கின்றனர்.

* பல தொழிலாளர்கள் நெடுஞ் சாலைகளில் நடக்கும்போதும், லாரி மற்றும் டெம்போக்களில் பயணிக்கும்போதும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories:

>