கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* நெய் காய்ச்சும்போது அதோடு ஒரு டீஸ்பூன் உப்பைச் சேர்த்துக் காய்ச்சினால் நெய் நீண்டநாள் கெடாது.

* பட்சணங்கள், முறுக்கு, சீடை போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் கல் உப்பை போட்டு வைத்தால், நமுத்துப்போகாமல் கடைசி துண்டு வரை கரகரப்பாக

இருக்கும்.

- எல்.தீபிகா, சென்னை

* பச்சைக்காய்கறி  கூடை மீது ஈரத்துணியால் மூடி வைத்தால் காய்கறி வாடாமல் இருக்கும்.

* சிறிதளவு வசம்பை அரைத்து அதனுடன் சமையல் உப்பைக் கலந்து நீரில் கலக்கி தெளித்தால், பிறகு ஈக்கள் தொல்லை இருக்காது.

* காஃபிக்கு பயன்படுத்தும் தண்ணீரை அதிகம் கொதிக்க வைத்தால் காஃபியின் சுவை குறையும்.

- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி

* சப்பாத்தி மிகுந்துவிட்டால், அதை மிக்ஸியில் பூப்போல அரைத்து சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறுங்கள். குழந்தைகள் ஒன்ஸ்மோர் கேட்டு விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- எம்.சுகாரா, ராமநாதபுரம்

* சிறிது வினிகர் சேர்த்து பச்சைப்பட்டாணியை வேக வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.

* கிரேவி சமைக்கும்போது தண்ணீருக்குப்பதில் சிறிது பால் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

- இந்திராணி தங்கவேல், சென்னை

* காய்கறிகள் வாடியிருந்தால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1 மூடி எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து அதில் போட்டு 1/2 மணி நேரம் கழித்து எடுத்தால் ஃப்ரெஷ் ஆகிவிடும்.

* தோசை மாவு சிறிது புளித்தாற்போலிருந்தால் அதில் கொஞ்சம் பால் கலந்து வார்த்தால் புளிப்பு இருக்காது.

- கே.சாயிநாதன், சென்னை

* கீரை பொரியல்களைச் செய்யும்பொழுது தேங்காய் எண்ணெயில் தாளியுங்கள். சுவை அதிகமாக இருக்கும்.

* கத்திரிக்காய் பொரியல் மீதியாகி விட்டால் அதனை வீணாக்கி விடாதீர்கள். அதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலக்குங்கள். சுவையான பச்சடி கிடைக்கும்.

- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி

* கடலை மாவுத்தூளைக் கொண்டு பாத்திரங்களைக் கழுவினால், பாத்திரங்கள் பளபளவென பளிச்சிடும்.

- கஸ்தூரி கதிர்வேல், வேலூர்

8 வெண்ணெயைக் காய்ச்சி இறக்கும்பொழுது முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அரைத்தேக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

* ரசம் தாளிக்கும்பொழுது, தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல், தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாக இருக்கும்.

- எஸ். சுமதி, கரூர்

* எந்தக்கிழங்காக இருந்தாலும் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து பிறகு எடுத்து வேக வைத்தால் சீக்கிரம்

வெந்துவிடும்.

- கே.முத்துலட்சுமி, ராமநாதபுரம்

* வெல்லப்பாகு, சீனிப்பாகு காய்ச்சும்பொழுது, பதம் வந்ததும் சில துளிகள் எலுமிச்சை சாறு விட்டால் பாகு முறியாமல் இருக்கும்.

* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக்கல்லைப் போட்டு வைத்தால் நீண்டநாள் மணம் மாறாமல் இருக்கும்.

- கே.ராஜேஸ்வரி, திருச்சி

* தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கி வைத்து அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

* தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும்போது 2 டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.

- ஆர்.ஹேமமாலினி, திருச்சி்

* பாயசத்தில் போட முந்திரி இல்லாதபோது இரண்டு ஸ்பூன் நெய்யில் பொட்டுக் கடலையை பொன் நிறமாக வறுத்து பாயசத்தில் போட்டால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* சாம்பார் செய்து இறக்கும்போது வெந்தயமும், பெருங்காயமும் போடும்போது கொஞ்சம் வறுத்த கசகசாவையும் பொடி செய்து போட்டு இறக்கினால் சாம்பார் அதிக சுவையுடன் இருக்கும்.

* அவியலுக்கு தேங்காய், பச்சை மிளகாய் அரைக்கும்போது, கொழுந்து மாவிலையைக் கொஞ்சம் சேர்த்து அரைத்து அவியல் செய்தால் கூடுதல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

- கே.ஆர்.உதயகுமார், சென்னை

* கீரை மசியல் செய்யும்போது, சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.

* வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் வாசனை கமகமவென இருக்கும்.

* தேங்காய்க்குப் பதிலாக வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்

புடலங்காய் தோசை

தேவையான பொருட்கள்

பிஞ்சுப் புடலங்காய் துருவியது - 1 கப்,

அரிசி மாவு - 1½ கப்,

கடலை மாவு - 1/2 கப்,

காரப்பொடி - 4 டீஸ்பூன்,

வெங்காயம் - 1,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை

முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு புடலங்காய் துருவலையும் சேர்த்து சிறிது வதக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் போட்டு தேவையான உப்பு, காரப்பொடி சேர்த்து கரைத்து அதில் வதக்கியவற்றைப் போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். கரைத்த மாவை தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வார்க்கவும். சிவக்க விட்டு மொறு மொறுவென்று எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள வெண்ணெய், நெய், வெல்லம் போன்றவை ஏற்றது.

- கே. சாந்தி, சென்னை.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: