மக்கள் பசி நீக்கிய மதுரை குஞ்சரத்தம்மாள்

நன்றி குங்குமம் தோழி

கொடிய பஞ்சத்தில் பரிதவித்த பலரின் பசியினைத் தீர்க்க தன் சொத்து முழுவதையும் விற்று தன் வாழ்க்கையை இழந்த மதுரை குஞ்சரத்தம்மாவின் வாழ்க்கை நாம் இந்த கொரோனா நோய் தொற்று நேரத்தில் உணர வேண்டிய ஒன்று. கொரோனா நமக்கு கற்றுத் தந்த பாடம் ஏராளம். போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், மனிதன் சுதந்திரமாய் நடமாட அரசால் போடப்பட்ட தடை இரண்டு மாதங்களைத் தொட்டுவிட்டது. மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். அன்றாடம் காய்ச்சிகளான தினக்கூலித் தொழிலாளர்கள்  நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பலர் குழந்தையும் குடும்பமுமாய் உணவுக்கு கையேந்தும் நிலையில், தன்னார்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருவதோடு, உணவுகளைத் தயாரித்து வழங்கி வருகின்றனர். மனித கூட்டத்தின் அன்றாட வாழ்க்கையை ஒரு நோய் மிரட்டி இந்த நூற்றாண்டின் வரலாறாய் மாறி நிற்கிறது. ஆனால் 18ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது நாம் கேள்விப்பட்டதுண்டா? 1875 ல் தொடங்கி 1880 வரை கிட்டதட்ட 5 ஆண்டுகள் தமிழகத்தையே பெரும் பஞ்சம் ஒன்று புரட்டிப் போட்டது.  

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது. தாது வருடத்தில் ஏற்பட்ட அந்த பஞ்சம் தந்த பாடங்கள் இன்றும் வரலாற்றின் வலி மிகுந்த பக்கங்கள்.

மக்கள் வயல் வரப்புகளில் எறும்புகள் கூட்டமாய் சேர்த்து வைத்த புற்று அரிசியைக்கூட விடாமல் தோண்டி எடுத்து உண்டும், கிடைத்த கீரைகளை மூன்று வேளையும் அவித்துத்  தின்றும் உயிர் பிழைத்த மிகக் கொடிய பஞ்ச காலம் அது.  இந்தக் கொடூர பஞ்ச காலத்தில் சுமார் நாற்பது லட்சம் மக்கள் உணவு தட்டுப்பாட்டாலும், காலரா தொற்றாலும் தாக்குண்டு கொத்து கொத்தாக மடிந்தனர். பஞ்ச காலத்தின் கொடுமை குறித்து பல பதிவுகளை அப்போதைய ஆங்கில அதிகாரிகளும் தமிழ் இலக்கியவாதிகளும் பதிவு செய்துள்ளனர். பால் குடிக்கிற குழந்தைகளை விற்று நெல் வாங்கியது, தாலி அடமானம் வைப்பது, வீட்டுக் கூரைகளை பெயர்த்து விற்பது, கிழங்குகளை பறித்து உண்பது, பணங்குருத்தை உண்பது போன்ற கொடும் நிகழ்வுகளும் இதில் பதியப் பட்டுள்ளது. மக்கள் செய்வதறியாது கொள்ளையிலும் அதிகமாய் ஈடுபட்டனர்.

மதுரையைச் சேர்ந்த குஞ்சரத்தம்மாள் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த தாசி குலத்துப் பெண்.  மிகவும்  அழகு நிறைந்தவர்.  மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் பலரும் குஞ்சரத்தம்மாளின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இரண்டு பெரிய வீடுகள் அவருக்குச் சொந்தமானது. கொடும் பஞ்சத்தில் கஞ்சிக்கு வழியற்று, கணக்கின்றி மக்கள் இறப்பதைப் பார்த்து வேதனையால் துடித்த குஞ்சரத்தம்மாள் சட்டென அந்த முடிவினை எடுத்தார். பட்டினியால் பரிதவித்த மக்களுக்கு தினமும் சளைக்காமல் கஞ்சி காய்ச்சி ஊற்றத் தொடங்கினார். விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் பெரும் வட்டை ஒன்றை வைத்து அவர் கஞ்சி  காய்ச்சி ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீயாய் பரவியது. அவர் வசித்த வடக்கு ஆவணி மூல வீதியை நோக்கி மக்கள்  பெரும் கூட்டமாய் சாரை சாரையாக வரத் தொடங்கினர்.  அந்த மக்கள் கண்ணால் பார்க்க முடியாத நிலையில் எலும்பும் தோலுமாய் பரட்டைத் தலையுடன்,  துணியென்று சொல்ல முடியாத ஒன்றை இடுப்பில் சுற்றிய நிலையில்,  குழந்தைகளை இடுப்பில் தூக்கியபடி வரிசை வரிசையாக வந்து கொண்டிருந்தனர்.  

கஞ்சியை வாங்க காலையிலிருந்தே கால்கடுக்க மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். குஞ்சரத்தம்மாளின் கஞ்சி வட்டை, ஒன்றில் ஆரம்பித்து  மூன்றாக மாறியது, அதற்கு மேல் அவரால் அதிகப்படுத்த முடியவில்லை. பசியின் பயங்கரம் கொடிய பஞ்சத்தினால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு  இருந்தது. ஆனாலும் அவர் தன்னம்பிக்கையோடு அடுப்பில் விறகுகளைத் தள்ளி தொடர்ந்து எரித்துக் கொண்டிருந்தார். தாது வருடம் தொடங்கிய ஆறாவது வாரத்தில் தான் பொதுமக்கள் நிலைகண்டு, கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார், ஒரு வகையில் குஞ்சரத்தம்மாளின்  செயல் அதற்கு ஒரு முன் உதாரணமாக இருந்தது. நகரில் மூன்று இடங்களில் அரசு அடுத்தடுத்து கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தம்மாளின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சமாக மாறியது. இருந்தாலும் பதிமூன்று மாத காலமாக, தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தம்மாளின் அடுப்பு விடாமல் எரிந்தது. அவர் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை கஞ்சி உலையிலே தொடர்ந்து போட்டார்.

அவரின் கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம், ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி என குஞ்சரம் சேர்த்து வைத்த

செல்வங்களும் கஞ்சியாய் மாறி, நீண்ட வரிசையில் தட்டேந்தி நின்ற மக்களின் பசிப்பிணியினைத் தீர்த்தது. அடுப்பின் புகையடித்து, கரி படிந்திருந்த அவரின் வடக்கு ஆவணி மூல வீதியின் இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு அதுவும் தாதுவருடப் பஞ்சத்தின் கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில்தான் அவரின் அடுப்பும் அணைந்தது. இவளுக்கு எதற்கு இந்த வேலை. சொத்தையெல்லாம் இழந்து தெருவுக்கு வரப்போகிறார்  என்று பெரும் செல்வந்தர்கள் பேசினாலும், குஞ்சரத்தம்மாளின் இந்தத் தொடர்ச்சியான செயலால் அவர்கள் வெட்கிக் குறுகினர்.  அந்தக் கொடும் பஞ்சத்திலும்  குஞ்சரம்மாவின் கஞ்சி தானத்தைப் பற்றி ஊர் முழுவதுமே மக்கள் பேசினார்கள்.  இதனால் அவர் மிகச் சிறிய ஓட்டு வீட்டிற்கு மாறியதோடு,  படுத்த படுக்கையானார்,  ஒரு நாள் மகிழ்ச்சியான முகத்தோடு, அழகு நிறைந்த குஞ்சரத்தம்மாள் இந்த உலகை விட்டு விடைபெற்றார்.

அவரின் இறப்பைத் தங்கள் வீட்டில் நடந்த துக்கமாக பலரும் பார்த்தார்கள்.  கதறினார்கள். அவர் இறுதியாக வசித்த சின்ன ஓட்டு வீட்டிலிருந்து அவரது உடல் வெளியில் எடுத்து வந்த பொழுது வடக்கு ஆவணி மூல வீதி கொள்ளாத அளவு மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது.  மக்கள் பலரும் கட்டிப்புரண்டு கதறியழுதனர். கோவில் திருவிழா தவிர்த்து மதுரையில் மக்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பில் அதை பதிவேற்றியுள்ளார். தாசிகுலத்துப் பெண்ணாக அவர் அணிந்திருந்த சலங்கையை படையலிட்டு வணங்கி தெய்வமாகப் பார்க்கத் தொடங்கினர் மதுரை மக்கள். அவள் பசியால் வாடிய மக்களின் பெரும் தெய்வமாக பார்க்கப்பட்டார். நம் பக்கத்தில் இருப்பவர்களின் சிக்கலை, சாதாரண மக்களின் வலியை புரிந்து

கொள்ளாதவர்கள் மனிதர்களே இல்லை என்பதை அவர் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: