ஷட்டர் ஸ்ட்ரீட் ஆர்ட்

நன்றி குங்குமம் தோழி

பூனாவில் அழுக்கும் சலிப்பும் நிறைந்த பழைய கடைகளைக் கலை கூடமாக மாற்றி வருகின்றனர் அனுஷ்கா ஹர்திகரும், அலிஃபியா கச்வாலாவும். பூனாவைச் சேர்ந்த இப்பெண்கள் இருவருமே நண்பர்கள். 24 வயதான அனுஷ்கா, கிராஃபிக் டிசைனராக இருக்கிறார். 25 வயதாகும் அலிஃபியா டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணிபுரிகிறார். இருவரும் இணைந்து ‘ஃப்ரெஷ் கோட்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். கடந்த நூற்றாண்டு வரை கொடிகட்டி பறந்த பல வணிகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் உலகமயமாக்குதலுக்குப் பின் மக்கள் மறந்து, மறைந்து வருகின்றன. இது போன்ற வித்தியாசமான இந்திய பொருளாதார வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த வணிக கடைகளை மக்கள் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதனை  புதுப்பித்து வருகின்றனர்.

முதலில் அலிஃபியாவின் தந்தைக்கு சொந்தமான கடையில்தான் தொடங்கினர். ‘‘எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் பேப்பர் கடை வெறும் வியாபாரமாக மட்டுமில்லாமல் எங்கள் குடும்பத்தில் அனைவரது அடையாளமாகவும் இருக்கிறது. முதலில் சுவர்களைத்தான் ஓவியத்திற்குப் பயன்படுத்த நினைத்தோம். ஆனால் போதுமான இடமில்லாததால், கடைகளின் வாசலில் இருக்கும் ஷட்டர்களை ஏன்  பயன்படுத்த கூடாது என நினைத்து அது குறித்து ஆராய்ச்சி செய்ததில், ஷட்டர் ஆர்ட் என்ற கலை குறித்துத் தெரியவந்தது” என்று கூறுகிறார் அலிஃபியா. ஒவ்வொரு கடையும் ஒரு கதையை சொல்லும். பலூன்களை மட்டுமே விற்கும் கடை, ஆணி திருகாணிகளை மட்டும் விற்கும் கடை, பழைய புத்தகங்களை சேகரித்து விற்கும் கடை, நோட்டு புத்தகங்களுக்கு பைண்டிங் செய்யும் கடைகள் எனத் தனித்துவம் மிக்க கடைகளுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் பதிவு செய்யும் விதமாகவும் இந்த கலைப் பயணத்தை இவர்கள் தொடங்கியுள்ளனர்.

இப்போது இந்தியா முழுவதுமே ஸ்ட்ரீட் ஆர்ட் என்று குறிப்பிடப்படும் தெருக் கலை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் உதவியுடன் பலர் ஒரு அமைப்பாகவும், தனியாகவும் தெருக்களையும், கட்டிடங்களையும் அழகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அழகியலை தாண்டி, சுகாதாரத்தையும் மனதில் கொண்டே இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. யாராக இருந்தாலுமே, அழகாக இருக்கும் இடத்தை அசுத்தம் செய்ய மனம் வராது. இப்படி பொது இடங்களில் கலையை உருவாக்கும் போது, மக்கள் அதை ரசிக்கத் தொடங்கி பாதுகாப்பாக சுத்தமாக அவர்கள் சூழலை உருவாக்கிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே இக்கலைகளை அரசாங்கமும் ஆதரிக்கிறது. அனுஷ்கா ஃப்ரெஷ் கோட் குறித்து பேசும் போது, “எங்கள் குழுவில் முப்பது கலைஞர்கள் இருக்கின்றனர்.  பொதுவாக வாரநாட்களில் மூன்று மணி நேரமும், ஞாயிறு முழுவதும் கூட தங்கி ஷட்டர் ஆர்ட் செய்து முடிப்போம்.

முதலில் அலிஃபியாவின் தந்தைக்கு சொந்தமான பேப்பர் கடையில் நாங்கள் வரைந்த ஓவியம் பலரையும் ஈர்த்தது. சிலர் நாங்கள் ஷட்டர்களில் விளம்பரம் வரைகிறோம் என்று தவறாக நினைத்தனர். ஆனால் சிலர் தாமாக முன்வந்து அவர்கள் கடைகளுக்கும் இது போல செய்து தரும்படி கேட்டனர். நாங்கள் அவர்

களுடன் பல முறை பேசி, வியாபாரம் தொடங்கியது முதல் முக்கிய விவரங்கள் அனைத்தையுமே சேகரித்து, அவர்கள் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொண்டு, அவர்கள் கதையை சொல்லும் விதமாக எங்கள் ஓவியத்தை உருவாக்குவோம்” என்கிறார்.   உதாரணமாக, பூனாவின் முதல் பைண்டிங் கடை 1937ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது.

அந்த காலத்திலேயே ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரமும்  இந்த கடையில் மற்ற இயந்திரங்களுக்கு மத்தியில் கம்பீரமாக நிற்கிறது.

முதல் கட்டமாக சுமார் 20 கடைகளை புதுப்பித்திருக்கும் இந்த பெண்கள், உரிமையாளர்களிடம் கலைக்குத் தேவையான பொருட்களை தவிர வேறு எந்த பணமும் வாங்காமல் இலவசமாக வேலை செய்து கொடுத்துள்ளனர். தங்கள் இரண்டாம் கட்ட திட்டத்தில் அதிக கலைஞர்களுடன், விளம்பரதாரர்கள் மூலம் நிதி சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்; ஜி.சிவக்குமார்

Related Stories: