×

QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!

நன்றி குங்குமம் தோழி

போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில்  சில  திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.
வீட்டைக் கட்டிப் பார், திருமணத்தை பண்ணிப் பார் என்பார்கள். நமது வீடுகளில் திருமணம் என்றாலே மகிழ்ச்சியோடு மலைப்பும் இருக்கும். எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே முடிவான திருமணங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது. அழைப்பிதழில் தொடங்கி, வாழ்த்த வந்தவர் கையில் தாம்பூலத்தை திணித்து மகிழ்ச்சியாய் வழியனுப்பும் வரை இடைப்பட்ட வேலைகளைச் செய்யும் திருமணம் சார்ந்த தொழில்கள் முற்றிலும் முடங்கியது. இதில் அழைப்பிதழ்களை அச்சடிக்கும் தொழிலும் அடங்கும்.

20 நபர்கள் மட்டுமே பங்குபெறலாம் என்ற நிலையை தற்போது அரசு கொஞ்சம் தளர்த்தி அதிகபட்சம் 50 பேருடன் திருமணம் நடத்தலாம் என அறிவித்தது. போக்குவரத்தே இல்லாத நிலையில், இரு வீட்டாரின் முக்கிய நபர்களுடன் வீட்டுக்குள்ளே பல திருமணங்கள் நடந்து முடிந்தன. என்றாலும் திருமண அறிவிப்பை சொந்த பந்தங்களுக்கு கட்டாயம் சொல்லித்தானே ஆக வேண்டும். கலந்துகொள்ளவே முடியாமல் போனவர்களுக்கு மாற்றாய் வந்தன காணொளி அழைப்பிதழ்கள்.
அதென்ன காணொளி அழைப்பிதழ் என்கிறீர்களா? இந்தவகை அழைப் பிதழை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டாலே திருமணத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடைக்கும் என்கிறார் திருமண அழைப்பிதழ் தயாரிப்பில் பல புதுமைகளை செய்துவரும்  கோவை ஸ்ரீராஜகணபதி கார்ட்ஸ்  உரிமையாளரான மாரிச்சாமி.

ஒரு லிங்கை உருவாக்கி QR கோடாக கன்வெர்ட் செய்து அதில் don’t miss the live marriage என்கிற வாய்சையும் சேர்த்து பிரிண்ட் செய்துவிடுவோம். குறிப்பிட்ட தேதியில் QR கோடை ஆண்ட்ராய்டு மொபைலில் ஸ்கேன் செய்யும்போது நேரலையாக திருமணக் காட்சிகள் நமது மொபைலில் தெரியும். இந்தவகை அழைப்பிதழ்களில் இரண்டு QR கோடுகள் இருக்கும். திருமணக் கவரில் இடம் பெற்றிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால் இருவீட்டாரின் பெற்றோர் திருமணத்திற்கு நம்மை வரவேற்கும் காணொளி இருக்கும். முகூர்த்த நேரத்தில் திருமணத்தை காண அழைப்பிதழின் உள் பக்கத்தில் இருக்கும் QR கோடை நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்கேன் செய்ய திருமணம் நேரலையாய் நம் மொபைலுக்குள் வர திருமணத்தை வீட்டிலிருந்தே கண்டுகளிக்கலாம். மேலும் அதில் இருக்கும் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு மணமக்களை அழைத்து திருமண வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம். லைவாகத் திருமணத்தை பார்த்தவர்கள் ஆன் லைனில் மொய் எழுத வசதியாய் வங்கி எண்ணும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

திருமணத்தை நேரலையிலும் பார்க்கத் தவறியவர்கள் QR கோடில் பதிவேற்றப்பட்டிருக்கும் திருமண வீடியோவை நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம். வெளியூர்களில் இருந்து திருமணத்திற்கு வர முடியாமல் போன நண்பர்கள், உறவினர்களுக்கு காணொளி அழைப்பிதழ்கள் திருமணத்தைப் பார்த்த மகிழ்ச்சியை நிறைவாய் தருகின்றது என்கின்றனர் QR கோட் அழைப்பிதழ்களை தயாரிப்பவர்கள். உணவைத் தவிர மற்ற எல்லா மகிழ்ச்சியையும் இந்த அழைப்பிதழில் அனுபவித்துவிடலாம் என்கின்றனர் ஆண்ட்ராய்ட் மொபைலில் திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்த சிலர். ஒரே நாளில் உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் நடக்கும் பல முகூர்த்தங்களை தவறவிட்டவர்களுக்கு இந்த QR கோட் அழைப்பிதழ் வரப்பிரசாதம். திரு மணங்களைப் பார்த்து வாட்ஸ் ஆப் வீடியோ காலில் அழைத்து மணமக்களை வாழ்த்திய பிறகு, மொய் பணத்தையும் கூகுள் பே எண்களுக்கு அனுப்பி விடலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!