CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட்...

நன்றி குங்குமம் தோழி

ஆன்லைன் மோசடி மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களை சைபர் க்ரைம் என்கின்றனர். சமுதாயத்தில் பிரபலமானவர்களை கடத்தி, மிரட்டி பணம் பறிப்பதுபோல, கம்ப்யூட்டர்களை முடக்கி பணம் பறிக்கும் டெக்னிக் உலகளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ‘வளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்க மட்டும் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம்... அதுல கொஞ்சம் எங்களுக்கு கொடுத்தா என்ன கொறஞ்சா போய்டுவீங்க’ என்பதுதான் சைபர் க்ரைம் குற்றவாளிகளின் போக்காக உள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்று கணினி பயன்பாடு பல மடங்கு மேம்பட்டதை அடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் சக்கை போடு போடுகின்றன.

வங்கிகள், இன்சூரன்ஸ், கனரக கார், மோட்டார் பைக் தயாரிக்கும் இன்ஜினியரிங் நிறுவனங்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு தொழில்களும், தரவுகளை (டேட்டா/Data) சேமிக்கவும், அவற்றை கையாளவும் ஆட்களை குறைத்து கம்ப்யூட்டரை நம்பியுள்ளது. கம்ப்யூட்டர் செயல்பாடு மனித மூளையை காட்டிலும் பல ஆயிரம் மடங்கு அதிகம் என்பதால் இந்த அசுர வளர்ச்சி. மேலும், காகித பயன்பாடும் அடியோடு ஒழிகிறது. இத்தனை பலனுள்ள கம்ப்யூட்டர்கள்தான் ரேன்சம்வேர்(Ransomware) என சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு பண மழை பொழிவிக்கும் கருப்பொருள் ஆகியுள்ளன.

ஆரம்ப  காலத்தில் இணையதள குற்றங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். குற்றவாளிகளும் வகையாக சிக்கினார்கள். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி ரேன்சம்வேர் குற்ற வாளிகளுக்கு சாதகமாகவும் உள்ளது. அவர்களை தடுத்து நிறுத்தும் வழிவகை தெரியாமல் சைபர் க்ரைம் போலீசாரும் திண்டாடுகின்றனர்.

பசியை போக்குவதற்காக தொடங்கிய திருட்டு எனும் விஷயம், ஆலமரமாய் எப்படி பரந்து விரிந்துள்ளதோ, அப்படித்தான் 1980களில் (PC Cyborg) சைபோர்க் எனும் ரேன்சம்வேர் அட்டாக் இணையங்களில் முதன் முதலாக உருவெடுத்தது. சைபோர்க் என்பது மென்பொருள் (சாஃப்ட்வேர்/software) தான். ஆனால் பொது பயன்பாட்டுக்கானது அல்ல. இணையதள நுகர்வோருக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிப்பதற்காக தொழில்நுட்ப ஜித்தன்களால் உருவாக்கப்பட்ட மால்வேர் ஆகும். காலப்போக்கில் சைபோர்க் மால்வேரில் இருந்த சில குறைபாடுகள் மேம்பாடு பெற்று வின்லாக் (WinLock) என்ற அட்டாக் ஆகியது.

அந்த வரிசையில் கொடிகட்டி பறக்கும் மால்வேர்கள் லாக்கி, சாம்சாம், வான்னக்ரை, க்ரிப்டோவால், ஸ்கேட்டர், சிடிபி-லாக்கர், லார்டெக், அவ்ரா, ஷேட், ஜிபிகோட், ரெவெட்டான், சொடினோகொபி, ரியுக், புர்கா, ஸ்டாப்... (CryptoWall, Scatter, CTB-Locker, Lortok, Aura, Shade, GpCode, Reveton, Locky, Sodinokibi, Ryuk, Purga, and Stop). மேற்கூறிய மால்வேர்களில் ரியுக், புர்கா, ஸ்டாப் (Ryuk, Purga, and Stop) போன்றவை நாட்டில் ஆன்லைன் நுகர்வோருக்கு பெரும் தொல்லையாக உள்ளது. அதுபோல, வான்னக்ரை (WannaCry) மால்வேர் மோசடிக்கு 150 நாடுகளில் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பேச்சுக்கு  ரூ.1,000 என ரேன்சம்வேர் கில்லாடிகள் கறந்திருந்தாலும், 3 லட்சம் பேரிடம் இருந்து எத்தனை கோடி பார்த்திருப்பார்கள் என நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். உண்மையிலேயே இலக்கில் சிக்கிய ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்கள் பறிப்பது அமெரிக்க டாலர்களில் பல லட்சங்கள்.

திருடன் எங்கேயாவது தடயத்தை விட்டுச் செல்வானா? ரேன்சம்வேர் கில்லாடிகளும் அப்படித்தான். எங்க வங்கிக் கணக்குல பணம் போடுங்கன்னு சொல்வதில்லை. அதிலும் டெக்னாலஜி டெவலப்மென்ட் டெக்னிக்கை கடைபிடிக்கிறார்கள். எல்லாமே பிட்காய்ன்(Bitcoin) பரிவர்த்தனைதான். இந்த நிகர்நிலை பண (பிட்காய்ன்) பரிவர்த்தனைகள் எல்லாமே ரகசியமானவை என்பதால், குற்றவாளிகள் பெரும்பாலும் சேஃப். அதனால்தான் சைபர் க்ரைம் போலீசார் திகைப்படைந்து உள்ளனர். ஓ.கே. ரேன்சம்வேர் அட்டாக்கர்ஸ்க்கு கம்ப்யூட்டர் நுகர்வோர் ஏன் பணம் கொடுக்க வேண்டும் எனும் சந்தேகம் இதற்குள் உங்களுக்கு வந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் ஆன்லைனில் மால்வேர் பயன்படுத்தி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். காலையில் ஆபீஸ் வந்ததும் கம்ப்யூட்டர் முன்னாடி கண்ணை மூடி, பிடித்த கடவுளை வேண்டிக் கொண்டு, அதை இயக்கியதும், ‘‘மெஷின் கரப்ட். டேட்டா எரேஸ்டு.

கேன்னாட் புரொசீட் (Machine Corrupt. Data Erased. Cannot Proceed / கம்ப்யூட்டர் பழுது, தரவுகள் போயே போச்சு, மேற்கொண்டு செயல்படாது) எனும் மிரட்டல் திரையில் பார்த்தால், என்ன பண்ணுவீர்கள்? அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் இருப்பீர்கள் இல்லையா? கொஞ்சம் தான் பிட்காய்ன் அனுப்புங்க. நாங்களே நல்ல புள்ளையா உங்க மெஷின்ல இருந்து போய்டறோம் அப்படின்னு மாய்மாலம் பண்ணுவாங்க. வேறென்ன தெண்டம் அழுவதை தவிர உங்களுக்கு வேறு வழியே இல்ல. அவங்க கேட்டதை கொடுக்கலைன்னா, உங்களுடைய கம்பெனிக்கு ஒவ்வொரு நொடியும் கொட்டும் பணம், அதோடு உங்களுக்கு வாரி வழங்கும் வாடிக்கையாளரையும் நீங்கள் இழக்கக் கூடும். அது மட்டுமன்றி தரவுகள் போயே போச்சுன்னா, எப்பிடி கடந்த கால பரிவர்த்தனைகளையும், அடுத்து நடக்கப்போற நடவடிக்கைகளையும் எப்படி செய்வீங்க? பிட்காய்ன் அனுப்புங்க என மிரட்டுவதே மால்வேர் ஸ்பெஷாலிட்டி.

இன்னும் கொஞ்சம் விரிவாக அலசுவோம். 2012ம் ஆண்டு தொடங்கி மால்வேர் மோசடி தலைவிரித்தாடி வருகிறது. இவர்கள் எப்படி எல்லாம் நுகர்வோரை மிரட்டுகிறார்கள், தங்களது மால்வேருக்கு வைத்துள்ள பெயர் என்றெல்லாம் பார்ப்போம்.

கொரோனா, சார்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என எப்படி எல்லாம் புதுப்புது வைரஸ் இயற்கையில் உருவாகிறதோ அதற்கு சற்றும் சளைக்காத வகையில் புதுப்புது மால்வேர்கள் கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் நெட்வொர்க் சந்தைகளை போட்டு தாக்குகின்றன. நுகர்வோர் ஒருவர் தனது கம்ப்யூட்டரை ஆன் செய்த அடுத்த நொடியில், இன்டர்நெட் மற்றும் விண்டோஸ் சாஃப்ட்வேர் இயங்கத் தொடங்கியதும் பலவிதங்களில் கம்ப்யூட்டரை மால்வேர் கபளீகரம் செய்யத் தொடங்கும். ஒட்டு மொத்த டேட்டாவும் அம்போ எனும் வகையில் அவற்றை சாமர்த்தியமாக தனக்குள் மறைத்துக் கொள்கிறது (என்க்ரிப்ட்/encrypt) மால்வேர். மற்றொரு வகை மால்வேர், திரையில் ஆபாச படங்களாக அள்ளித் தெளிக்கும். மால்வேர் தாக்கும்போது என்ன தான் அவற்றை முடக்கக் கருதினாலும், அடுத்தடுத்து அந்த படங்கள் ஆலங்கட்டி மழையால், அருவி கொட்டுவது போல கொட்டும். சில நிமிடங்களுக்கு பிறகு திரையில் தோன்றும் தகவல் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஆம். ‘‘நீங்கள் ஆன்லைனில் மோசடி செய்துள்ளீர்கள். உங்களது ஃப்ராடுத்தனம் எப்.பி.ஐ, (அமெரிக்க உளவுப்பிரிவு) இன்டர்போல் (சர்வதேச குற்ற விசாரணை போலீஸ்) துறைகளுக்கு தெரிந்துவிட்டது. நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள்.

சர்வதேச குற்றப்படி உங்களுக்கு தீவிர தண்டனை விரைவில் காத்திருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் பிட்காய்ன் அனுப்புங்க. நாங்க காப்பாத்துறோம்’’ என கம்ப்யூட்டர் திரையில் ெசய்தி தென்படும். கம்ப்யூட்டர் பயனாளர்கள் பலரும் பொதுவாகவே, பல சாஃப்ட்வேர்களை காசு கொடுத்து வாங்காமல், ஆன்லைனில் டவுன்லோடு செய்வதால் (சட்டப்படி தவறுதான். சாஃப்ட்வேர் விலை கண்ணை கட்டும்போது வேறு வழி). அப்படி நீங்கள் டவுன்லோடு செய்த எதையோதான் மால்வேர் அட்டாக்கர் கூறுகிறார் எனக் கருதுவர். சர்வதேச சட்டப்பிரச்னையில் இருந்து விடுபடும் நோக்கத்துடன் அட்டாக்கருக்கு பணம் அனுப்புவார்கள். அடுத்த நொடியில் பாதிப்பில் இருந்து கம்ப்யூட்டர் விடுதலை பெறும். உண்மையிலேயே சட்ட சிக்கல்கள் எதுவும் இருக்காது. மனிதருக்கு உள்ள அடிப்படை பயத்தை அட்டாக்கர் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே இதன் பொருள்.

(மால்வேர் அதிர்ச்சி அடுத்த வாரமும் தொடரும்.)

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: