×

பீஸ் வொர்க் முறைக்கு மாறும் ஐ.டி. நிறுவனங்கள்

நன்றி குங்குமம் தோழி

புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்களுக்கு வருமானமில்லை. இது வெளிப்படையான செய்தி. ஆனால் வெளியில் தெரியாத மத்தியதர வர்க்கம் அதிக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, ஊதியக் குறைப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் லாக்டவுன் அறிவித்த நிலையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பக் கூடாது, லாக்டவுன் நேர ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் முழுமை யாய் தர வேண்டும் என்று அறிவித்தனர். அறிவிப்போடு சரி. கண்டிப்பு காட்டி நடைமுறைப்படுத்தி கண்காணிக்கவில்லை. இதனால் அரசின் இந்த அறிவிப்பை தனியார் நிறுவனங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பல நிறுவனங்கள் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

குறிப்பாக கொரோனா லாக்டவுன் நேரத்தில் இந்தியாவில் இயங்கும் ஐடி துறை சார்ந்த சின்னச் சின்ன நிறுவனங்கள், மெப் சைஸ் நிறுவனங்கள், பி.பி.ஓ.க்களில் நம் கவனத்திற்கு வராமலே வேலையிழப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஊழியர்களை மாஸாக லேஆஃப் செய்வது, கட்டாயப்படுத்தி பணியை விட்டு விலக வைப்பது, ஊதியக் குறைப்பு போன்றவை மறைமுகமாக நடந்து வருகிறது. மென்பொறியாளர்களுக்கான தொழிற்சங்கமான FITE (forum for IT employee) முழு நேர செயல்பாட்டாளரான பரிமளாவைச் சந்தித்து இது குறித்து பேசியபோது…

* நீண்ட கால லாக்டவுன் ஐ.டி. துறையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?

ஒட்டுமொத்த ஐ.டி.இண்டஸ்ட்ரியும், வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால் ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களின் உழைப்பை சுரண்டத் தொடங்கியுள்ளன. இது ரொம்பவே துயரம் நிறைந்ததாக இருக்கிறது. வீட்டில் சும்மாதானே இருக்கிறீர்கள்... வேலை செய்யுங்கள் எனக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலான ஊழியர்களின் புலம்பல் அதிக நேரம் எங்களை வேலை செய்யச் சொல்கிறார்கள் என்பதாகவே உள்ளது. வீட்டில் அடைபட்டு கிடப்பதால் எப்போதும் வேலை செய்யும் நிலை. அதற்கேற்ற கூடுதல் ஊதியமும் இல்லை.

எதிர்த்துக் கேள்வி கேட்டால் மிரட்டுவது, கட்டாயப்படுத்தி விடுமுறை எடுக்க வைப்பது, வேலையை விட்டு அனுப்பிவிடுவதாகச் சொல்வது, வற்புறுத்தி பணியில் இருந்து விலகச் சொல்வது, வேறு வேறு வகையில் ஊதியத்தை பிடிக்கும் வேலைகளைச் செய்வது போன்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. கார் தருபவர் பெயரை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில், யூனியனாகவும் தலையிட முடியவில்லை. புகார்கள் தொடர்பாக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.டி. ஊழியர்கள் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

போஸ்ட் கொரோனாவிற்கு பிறகான ஐ.டி. துறையின் நிலை?

40 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றி வரும் நிலையில், இந்த மாபெரும் லாக்டவுன் புதுவித அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இணையம் கைகளில் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் பணியாற்றலாம். இவ்வளவு பெரிய ஒர்க் போர்ஸை வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைத்த  அனுபவத்தை நாஸ்காம் (NASSCOM) எனப்படும் ஐ.டி. நிறுவனங்களின் அசோசியேஷன் ஸ்டடி செய்ததில், ஐ.டி நிறுவனங்கள் மட்டுமே தங்கள் பரிவர்த்தனையை எந்த இடையூறுமின்றி நடத்தி வருவதாய் தெரிவிக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலும் இடையூறில்லை என்றே வாடிக்கையாளர்களும் ஃபீட்பேக் கொடுத்துள்ளனர். வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பணியாளர்களின் புரொடக்டிவிட்டி அதிகரித்திருப்பதாக ஒட்டு மொத்த ஐடி நிறுவனங்களின் ரெப்ரெஸன்டேட்டிவாக நாஸ்காம் அறிவித்துள்ளது.

திடீர் லாக்டவுனால் ஐ.டி. ஊழியர்கள் சந்தித்த பிரச்சனை?

திடீர் லாக்டவுன் அறிவிப்பால் இணையத் தொடர்பு வசதி இல்லாதவர்களும், அதிவேக இணைய வசதி இல்லாதவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் கொடுத்த நேரத்திற்குள் பணியை முடிக்க முடியாத நிலை உருவானது. இதைக் காரணமாக்கி ஊதிய வெட்டு, பணியிழப்பு போன்ற சுரண்டலுக்கும் ஊழியர்கள் ஆளானார்கள். கிராமங்களை நோக்கிச் சென்றவர்கள் இணைய வசதி இன்றி பணியாற்ற முடியாத நிலையில், அவர்களது வேலையையும் சேர்த்தே செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர். திடீரென இழந்த அலுவலகச் சூழல். வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதில், நீண்ட நேரம் பணி செய்ய வேண்டிய நிலை, வசதியான இருக்கைகள் இன்மை.

நாடு தழுவிய லாக்டவுனால் குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இருப்பது, நண்பர்களைச் சந்திக்க முடியாமை போன்றவை பணியாற்றும் சூழலைத் தரவில்லை. 8 மணி நேரத்தை தாண்டி கூடுதலாக 2 முதல் 4 மணி நேரம் வேலை செய்யும் நிலையும் ஏற்பட்டது. வேலையைத்  தொடர்ந்து திணிப்பது. அன்றே முடித்துக் கொடுக்க நிர்பந்திப்பது. வார இறுதி என்றாலும் கூடுதல் சுமைகளை ஏற்றுவது. வீகெண்ட்  விடுமுறையை இழந்தது போன்றவை ஊழியர்களை சோர்வடையச் செய்து மன அழுத்தத்தை தந்துள்ளது.

ஊழியர் விஷயத்தில் ஐ.டி. நிறுவனங்கள் எந்த மாதிரியான நடவடிக்கையில் இறங்கியுள்ளன?

டிசிஎஸ் நிறுவனம் 25 சதவிகிதம் ஊழியர்கள் அலுவலகம் வருவார்கள், மீதி 75 சதவிகிதம் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என ஏற்கனவே அறிவித்துள்ளது. இதை அடிப்படையாய் கொண்டு எதிர்காலத்தில் 50 முதல் 75 சதவிகிதம் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய வைப்பதற்கான வாய்ப்பை நோக்கி ஐ.டி. இண்டஸ்ட்ரி நகரத் தொடங்கியுள்ளது. அலுவலகம் வரும் 25 சதவிகிதம் ஊழியர்கள் போக, மீதி 75 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்து பணியாற்ற தொழிலாளர் சட்டங்களில் எந்தெந்த திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனவும் அனலைஸ் செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஐ.டி. ஊழியர்களின் எதிர்காலம் என்னவாக மாறியுள்ளது?

சென்னையைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில் இருந்து தினமும் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் பயணிப்பவர்கள் அதிகம். இதில் பயண நேரம் குறைகிறது. மேலும் ஊழியர்களைப் பொறுத்தவரை ஒருவர் ஒரு நிறுவனத்தில் மட்டும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் அல்லது ஒரே ஆள் ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புராஜக்ட்டினை கையில் எடுத்து முடித்துக் கொடுக்கலாம். இது ஃப்ரீலான்ஸிங் மற்றும் கான்ட்ராக்ட் முறையில் வேலை செய்வது போன்ற நிலையை நோக்கி ஐ.டி. ஊழியர்களை நகர்த்த தொடங்கியுள்ளது. ஒரு புராஜக்டை எத்தனை நாட்களில் எவ்வளவு கூலிக்கு செய்து கொடுப்பாய் என்பது மாதிரியான சூழலுக்குள்ளும் கொண்டு செல்லும்.

ஏற்கனவே ஃப்ரீலான்ஸ் செய்பவர்கள் ஐ.டி. துறையில் உண்டு. அதாவது புராஜக்டை பிட்(bit) பண்ணுவது. யார் கம்மியாக பிட் பண்ணுவார்களோ அவர்களுக்கே புராஜக்ட். தன் உழைப்பை குறைந்த விலைக்கு விற்பவருக்கே இனி வாய்ப்பு.  இந்நிலை ஊழியர்களின் உழைப்பை எந்த அளவு குறைவாய் மலிவாய் விற்பது என்பதில் அடங்கும். ஓலா ஊபெர் நிறுவனங்கள் மாதிரியான கிக் வொர்க்கர்ஸ் (gig workers) திட்டங்களும் இதில் அடங்கும்.

ஐ.டி. ஊழியர் பாதுகாப்பில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்?

ஐ.டி. ஊழியர்களுக்கான பி.எஃப். சிஸ்டத்தை நீக்கிவிட்டு நேஷனல் பென்ஷன் திட்டம் மாதிரியான முறையினையும் கொண்டு வரும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளது. இனி ஐ.டி. ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு இல்லா நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம்... இன்னொரு பக்கம் அந்த வேலையை பெறுவதற்கான போட்டிகள் நிலவும். மேலும் திருப்பூர் மாவட்ட பின்னலாடை உற்பத்தியாளர்களின் பீஸ் வொர்க் மாதிரி, ஐ.டி. இண்டஸ்ட்ரி மலிவாகப் போவதற்கான பயங்கரங்களும் இதில் சாத்தியக்கூறு. டெய்லி கூலி வேலைக்குச் செல்கிறவர்களின் நிலையே இது. வேலை தனக்கு நிரந்தரமில்லை என்பது மாதிரியான அச்சத்தையே இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும்.

எதிர்காலத்தில் வேறு எந்த மாதிரியான மாற்றங்களை ஐ.டி. நிறுவனங்கள் சந்திக்கும்?

ஒரே வேலைக்கு அமெரிக்காவில் கொடுக்கும் சம்பளம் வேறு... இந்தியாவின் பெரு மற்றும் சிறு நகரங்களில் இருப்பவருக்கு கொடுக்கும் ஊதியம் வேறு. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வெளிநாட்டிற்கோ, பெருநகரத்திற்கு நகர்ந்தோ வேலை செய்ய வேண்டிய நிலை இல்லை. 25 சதவிகிதம் ஊழியர்கள் வேலை செய்ய சின்ன அலுவலகம் இருந்தாலே போதும்.. மிகப் பெரிய வளாகம், மின்சாரம், தண்ணீர் செலவு, வாடகை, வரி, போக்குவரத்து என அனைத்தும் குறைகிறது. மேலும் ஊழியர்களை கண்காணிக்கும் மைக்ரோ மேனேஜ்மென்ட் தேவைப்படாது. இதனால் பியுப்பிள் மேனேஜ்மென்ட், புராஜெக்ட் மேனேஜ்மென்ட் செய்பவர்கள் வேலையிழப்பிற்கு உள்ளாவார்கள். இதெல்லாம் ஐ.டி நிறுவனத்துக்கு சாதகம்தான்.

மேலும் ஐ.டி நிறுவனங்கள் சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனேவில் மட்டுமே அதிக அளவில் உள்ளது. இனி எல்லா நகரங்களுக்கும் பரவும் வாய்ப்பு ஏற்படும். அதுவே மதுரை, திருச்சி, கோவை என்றால் குறைவாக ஊதியம் கொடுக்கலாம். இந்த  மாற்றங்கள் அனைத்தும் 10 வருடத்தில் முழு அளவில் இருக்கும். இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இந்த போக்கு விரைவில் வரலாம். இவை வெளிப்படையாக தெரியவே 5 ஆண்டுகள் எடுக்கும். நமக்கான சிக்கலை கூட நமக்கான வடிவமாக மாற்ற வேண்டிய தேவை இங்கு நிறையவே இருக்கிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் நாம் நிற்கிறோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Companies ,
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!