×

ஆறுதல் தேடும் வயசா 57?

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் தோழிக்கு,

எனது பெற்றோருக்கு, ஆண், பெண் என 10 பிள்ளைகள். வீட்டில் கூட்டம் இருந்த அளவுக்கு வசதியில்லை. கோவிலில் கணக்கு எழுதியதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் மொத்த குடும்பமும் சாப்பிட்டோம்.  வீட்டில்  கஷ்டம் இருந்தாலும், கூட்டமாக இருந்தால் ஒரே கூத்தும், கும்மாளமாகவும் இருக்கும்.  அப்போதெல்லாம் வீட்டில் டிவி மட்டுமல்ல ரேடியோவும் கிடையாது. பக்கத்து வீட்டு ரேடியோவில்தான் உங்கள் விருப்பம், ஒலி சித்திரம் கேட்பது வழக்கம். அவர்கள் வீட்டு ரேடியோவில் பேட்டரி தீர்ந்தாலோ, அவர்கள் ஊருக்கு போய் விட்டாலோ எங்கள் பொழுது போக்கிற்கும் விடுமுறை தான்.
கூடவே ஊர் நூலகத்தில் இருந்து எங்கள் அண்ணன்கள் கொண்டு வரும் புத்தகங்கள் எங்களுக்கு அவ்வப்போது பொழுது போக்க உதவும். பெண்கள் வெளியில் போய் வருவதெல்லாம் அப்போது அரிது. பொங்கல், தீபாவளி சமயங்களில் கூட சினிமாவுக்கு போக முடியாது. காசும், அப்பாவுக்கு மனசும் ஒரு சேர இருந்தால் சினிமாவுக்கு போவோம்.

பெரும்பாலும்  சினிமா கதைகளை ரேடியோ ஒலிசித்திரத்திலும், பக்கத்து வீட்டு அக்கா, பள்ளி தோழிகளின் வாய் சித்திரத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்வோம். எனக்கு திருமணம் ஆகும் வரை எங்கள் ஊரில் யார் வீட்டிலும் டிவி கிடையாது. ஆண்களிடம் பேசும் வாய்ப்பு மிகவும் குறைவு.  தோழிகளிடமும்  வீட்டுக்குள், புறக்கடையில்தான் பேசிக் கொள்ள முடியும். திண்ணை, தெருவெல்லாம் ஆண்கள் பட்டா போட்டு வைத்திருப்பார்கள். எங்களை வெளியில் விட மாட்டார்கள். அதனால் காதல் எல்லாம் புத்தகம், ரேடியோ, சினிமாக்களில்  படித்தும், கேட்டும் பார்த்ததோடு சரி. நமக்கு காதல் எல்லாம் இல்லையே என்று ஏங்கியதெல்லாம் இல்லை. எனது அக்காக்களின் நிலைமையும் அதுதான். ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தவருக்கு இரண்டாம் தாரமாக அக்காவை திருமணம் செய்து வைத்தார் அப்பா. அடுத்த அக்காவின் கணவர் ஓய்வு பெற்றவர்.

ஆனால் மனைவி, குழந்தைகள் இல்லை. யாரும்  அப்பாவின் பேச்சுக்கு, மறுபேச்சு பேசவில்லை. அப்பா சொன்னபடி நடந்தனர்.  எனக்கும் அப்படித்தான் விதி என்று தோன்றினாலும், கொஞ்சம் பரவாயில்லாமல் நடக்கும் என்று நம்பினேன். எனக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு அது முதல் கல்யாணம் தான் என்றாலும், எனக்கும் அவருக்கும் 20 வயது வித்தியாசம். கொஞ்சம் மாற்றுத்திறனாளி.  அப்பாவின் கஷ்டம் தெரிந்ததால் வந்த மாப்பிள்ளைக்கு மறு பேச்சில்லாமல் நானும் கழுத்தை நீட்டினேன். அதுதான் வாழ்க்கை என்றான பிறகு அதற்கு பழகிக் கொண்டேன்.  திருமண வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சி எல்லாம்  இருந்ததில்லை. அதே நேரத்தில் கஷ்டப்பட்டு உட்காரும் நிலைமையும் இருந்ததில்லை. வரவுக்கு ஏற்ற  செலவு இருந்தாலும், அப்பா வீட்டு அளவுக்கு பொருளாதார கஷ்டம் இருந்ததில்லை.

அந்த தட்டுப்பாட்டிலும் பிறந்த 3 பிள்ளைகள்தான் எனக்கு ஆறுதல். பொறுப்பான பிள்ளைகள், படிப்பிலும் சோடை போகவில்லை. இவருக்கு தனியார் கம்பெனி வேலை என்றாலும், அவருக்கு அடிக்கடி இடமாறுதல் இருக்கும். சில நேரங்களில் அவர்களே வீடு தருவார்கள். பல இடங்களில் வாடகைக்கு செல்ல நேரிடும். அப்படி வாடகைக்கு குடியிருந்த இடத்தில்தான் அவரின் குடும்பமும் இருந்தது.  அவர் அரசு ஊழியர். போன கொஞ்ச நாட்களிலேயே அவர் மனைவியுடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. எங்கள் இருவரது பிள்ளைகளும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். என் வீட்டுக்காரரும் அவரிடம் நட்பாக பேசுவார். ஆனால் அவர் என்னிடம் அதிகம் பேச மாட்டார். அதேநேரத்தில்  அவர் என்னையே கவனிப்பதை  சில நாட்கள் கழித்து தெரிந்து கொண்டேன்.  என்னை பார்க்கும் போது லேசாக புன்னகை செய்வார். நானும் சிரிப்பேன். ஆனால் அதையெல்லாம் அவர் மனைவி கவனிக்காத போது செய்வதை உணர்ந்தேன். அவர் மனைவி இல்லாத போதுதான் ‘சாப்ட்டீங்களா..’ என ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார்.

ஆனாலும். ஏனோ அவரை  தவறாக நினைக்க தோன்றவில்லை.  எனக்கும் அது புது அனுபவமாக இருந்தது, மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மேல்  அவர் எல்லை தாண்டியதில்லை. அந்த ஊரில் 2 ஆண்டுகள் இருந்தோம்.  என் வீட்டுக்காரருக்கு  இடமாற்றல் வந்தது. அங்கிருந்த கிளம்பும் போது, ‘நீங்க இங்கே இருந்த நாட்கள்தான்  எனக்கு மகிழ்ச்சியான நாட்கள். அதை நிச்சயம் மறக்க மாட்டேன்’ என்றார்.  எனக்கும் அந்த ஊரை விட்டு செல்வது, ‘எதையோ இழந்தது’ போன்று கஷ்டமாகத்தான் இருந்தது. வேறு ஊருக்கு போனாலும், இரண்டு குடும்பங்களுக்கு இடையில் கடித போக்குவரத்து இருந்தது. மாதம் ஒரு கடிதமாவது எழுதி விடுவோம். அவர் வீட்டில் அவர்தான் எழுதுவார். எங்கள் வீட்டில் நான்தான் எழுதுவேன். கடிதங்கள் பொதுவான நலம் விசாரிப்பு, விசேஷங்களை சொல்லும் விதத்தில்தான் இருக்கும். அவர் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு போன போது, அவர் குடும்பத்திற்கு நான் எழுதிய கடிதங்களை எல்லாம் பத்திரமாக வைத்திருப்பதை காட்டினார். நானும் பத்திரமாக வைத்திருப்பதை சொல்லவில்லை.

இப்படியே பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பிள்ளைகளுக்கும் நல்ல  வேலை கிடைத்து, திருமணமும் ஆகிவிட்டது. பேரன் பேத்திகளும் இருக்கின்றனர். அவரும் பேரன் பேத்திகள் எடுத்து விட்டார். அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருக்கிறார்.  என் கணவர் முதுமை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் பயன்படுத்த ஆரம்பித்தேன். கடிதம் எழுதுவது இல்லை. போனில்தான்  அவரது குடும்பத்தினருடன் பேசுவேன். அவர் மனைவியிடம் செல்போன் இல்லாததால்,  அவருடைய போனில்தான் பேசுவேன். ஒருநாள்  பகல்  நேரத்தில் அவரிடம் இருந்து போன். அலுவலகத்தில் இருந்து பேசுவதாக சொன்னார்.  வழக்கத்திற்கு மாறாக ரொம்ப நேரம் பேசினார். முடிவில், ‘உங்களிடம் பேச நினைப்பேன். தைரியம் வரவில்லை. இப்போது வந்து விட்டது. இனி அடிக்கடி பேசலாமா’ என்று கேட்டார். நானும் மகிழ்ச்சியாக ‘சரி’ என்றேன். அதன் பிறகு அடிக்கடி பேச ஆரம்பித்தோம். பகலில் பிள்ளைகள், மருமகள்கள் என எல்லோரும் பள்ளி, வேலைக்கு என்று சென்று விடுவதால் நான் மட்டும் தனியாகத்தான் இருப்பேன்.

அந்த சமயத்தில் நீண்ட நேரம் பேசுவோம். மெல்ல என்னை பெயர் சொல்லி அழைத்தவர், பிறகு வாடி போடி என்று பேச ஆரம்பித்தார். ‘நீதான் என் பொண்டாட்டி’என்று சொல்வார். அவரிடம் பேச முடியாத நாட்களில் ஏதோ பறி கொடுத்தது போல் ஏக்கமாக  இருக்கும். நாங்கள் காதலர்களா, கணவன் - மனைவியா, இல்லை உலகம் ஏற்காத ஒரு உறவா என்று  சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த உறவு எங்களுக்கு பிடித்து இருக்கிறது. நேரில் சந்திக்கும் போது, அப்படி ஒரு மகிழ்ச்சி பெருகும். அருகில் யாரும் இல்லாவிட்டால் முன்பை விட அதிகமாக, மகிழ்ச்சியாக பேசுவோம். பிரியும் போது வாடிப்போவேன். செல்போனிலேயே நாங்கள் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். சுமார் ஏழெட்டு ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இப்போது எனக்கு 57 வயது.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், கொஞ்ச நாட்களாக இது தேவையா? அதுவும் 60 வயதை எட்டும் நிலையில், இளம் காதலர்கள் போல்  செல்போனில் பேசிக் கொண்டு இருப்பது நியாயமா? என்று தோன்றுகிறது.  

பெற்றோர் வீட்டில் அனுபவிக்காத, என் கணவரிடம் கிடைக்காத, என் பிள்ளைகளின் வசதியினால் வராத மகிழ்ச்சியும், இன்பமும் அவரிடம் பேசுவதால் கிடைக்கிறது. என் கணவருக்கோ, அவரது மனைவிக்கோ நான் துரோகம் செய்வதாக  எனக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லை.  மற்றவர்களுக்கு தெரிந்தால் என்னவாகும் என்று  வருந்தியதில்லை. அடிக்கடி அவர் , ‘நம்ம பிள்ளைகள் செட்டிலாகி விட்டார்கள். இனி கவலையில்லை. ஏதாவது பிரச்னை வந்தால் நாம் தனிக்குடித்தனம் போய்விடலாம்’ என்று சொல்வார். அது சாத்தியமா என்று யோசித்ததில்லை. இந்த வயதில் இது தேவையா? ஆறுதல் தேடும் வயதா இது? என்ற எண்ணங்கள் எனக்கு அடிக்கடி தோன்றுகின்றன.  இது சரியா?  தொடர்ந்து பேசலாமா? நிறுத்திவிடலாமா? யோசிக்க முடியவில்லை.  ஆனால் அவரிடம் பேசாமல் என்னால் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். என்ன செய்வது? எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.

இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்களின் கடிதம் கண்டேன் தோழி.   கணவருடன் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு  திருப்தியாக இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. ஏதோ பெற்றோர்களின் விருப்பப்படி உங்கள் திருமணம் நடந்துள்ளது. கணவர் உங்களுக்கு பொருத்தமானவரா என்பதை கூட யோசிக்க முடியாத நிலையில் இருந்துள்ளீர்கள். இருந்தாலும் பெற்றோர்களுக்காக, சமுதாயத்திற்காக வாழ்க்கையை வாழ்ந்து உள்ளீர்கள். நீங்கள் அவருடன் மனம் மற்றும் உணர்வு ரீதியான நெருக்கமும் இல்லாமல் இருந்து உள்ளதாகவே தோன்றுகிறது. அதனால்தான் உங்கள் அண்டை வீட்டு நபர் அக்கறையுடன் பேசியது, உங்களை ஈர்த்துள்ளது. அது உங்களுக்கு பிடித்தும் உள்ளது. கணவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த அன்பும் அக்கறையும்  அவரிடம் நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்களையும் அறியாமல் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்.  இருப்பினும் கணவரை விட்டு விலகி, அவரிடம் போகின்ற அளவுக்கு அந்த உறவை நீங்கள் எடுத்துச் செல்லவில்லை.  அது ஒரு எல்லைக்குள் உள்ளேயே இருந்திருக்கிறது.  

அதேநேரத்தில் முற்றிலும் அந்த உறவை துண்டித்துக்கொள்ளவும் இல்லை. கடிதப் போக்குவரத்து மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டுள்ளீர்கள். அந்த உறவை நீங்கள் அப்போது எப்படி புரிந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதை நட்பு என்று நினைத்தீர்களா அல்லது அதையும் தாண்டி வேறு ஒரு பந்தமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க முடியும். இப்பொழுது உங்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கத்திற்கு அந்த உறவை நீங்கள் நினைத்த விதம்தான்  முதற்படி. நீங்கள் கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது அந்த உறவில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்து இருக்கிறது. எனவே அது  நட்பைத் தாண்டிய ஏதோ ஒன்றாகவே இருந்திருக்கிறது.  இருந்தாலும் உங்கள் கணவருடன் வாழ்ந்த காலங்களில் அந்த உறவின் தேவை குறைவாகவே இருந்திருக்கும்.  

கணவருடன் நீங்கள் அந்த அளவிற்கு நெருக்கமாக இல்லாவிட்டாலும் அனுசரித்து அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு உள்ளீர்கள். அதனால்தான் நீங்கள் பழகிய போதும் கூட எல்லை தாண்டாத உறவாகவே அது இருந்துள்ளது. கணவர் இறந்த பின்பு நிச்சயமாக ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கும். அந்த சமயத்தில் அவரிடம் பழகுவதில் உங்களுக்கு குற்ற உணர்ச்சியும் இருக்கவில்லை.   அதனால்தான்  கணவருக்கு துரோகம் செய்வதாக உங்களுக்கு தோன்றவில்லை. கணவர் இருந்திருந்தால் இந்த அளவிற்கு நீங்கள் நெருக்கமாக அவரிடம் பழகி இருப்பீர்களா என்பது  சந்தேகம்தான். ஆனால் அவரோ மனைவி இருக்கும் போதே உங்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.  அவர் மனைவியை விட்டு விலக ஏதும் காரணம் இருப்பதாக தெரியவில்லை.... அல்லது நீங்கள் சொல்லவில்லை.  கூடவே உங்களின் இப்போதைய நிலைமைதான் அவரின் மனைவியைப்பற்றிய குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் செய்திருக்கிறது.

வயதைத் தாண்டி தேவை இருக்கும்போது நம்மால் சில விஷயங்களை யோசிக்க முடியாது. இருப்பினும் அவர் சொல்வதில் உங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் நெருடல் இருப்பதால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு விஷயம் நீங்கள் செய்யும்பொழுது அது உங்களுக்கு ஏற்புடையதா, சரி வருமா, நம் குடும்ப உறுப்பினர்களோ,  நம்மைச் சார்ந்தவர்களோ அதை ஏற்காத பட்சத்தில் நாம் அவர்களை எதிர்த்து இந்த விஷயத்தை செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க இயலுமா என்றெல்லாம் யோசனை செய்யவேண்டும். கடைசியில் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். கூடவே நீங்கள் அவருடன் தனியாகச் செல்லும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும்,  மற்ற பிரச்சனைகளையும் கொஞ்சம் அறிவுப் பூர்வமாக அணுகி முடிவெடுக்க வேண்டும். உங்கள் முடிவை மற்றவர்கள் எடுக்க இயலாது. மனநல மருத்துவராக நீங்கள் இதை செய்யுங்கள்,  இதை  செய்யாதீர்கள் என்று சொல்வது சரியாக இருக்காது.  

ஆனால் அவருடன் சென்றால் என்ன பிரச்சினைகள் வரும் என்பதை யோசிக்க  சொல்கிறேன். அப்படி செல்லாத பட்சத்தில் அவருடன் பேசாமல் இருக்கும் தருணங்களை எதிர் கொள்வதை பற்றியும் யோசியுங்கள் என்றும் சொல்கிறேன்.  இந்த இரண்டில் எது உங்களின் குணாதிசயத்திற்கு பொருந்தி வருகிறதோ, எது அறிவுபூர்வமாக சரியென்று படுகிறதோ எதை உங்களால் நெருடல் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியுமோ அதை செய்யுங்கள். நீங்கள் விரும்பி ஒன்றை செய்யவேண்டும். கட்டாயத்தின் பேரிலோ நிர்பந்தத்தின் பேரிலோ செய்தால் சிக்கல் ஏற்படும். சில நபர்கள் சமுதாயத்தில் நல்ல பெயர் வேண்டும் என்பதற்காக விருப்பம் இருந்தாலும் சில செயல்களை  செய்ய மாட்டார்கள். சிலர் சமுதாயம் என்ன சொல்லும்,  மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிய கவலை கொள்ள மாட்டார்கள்.

மனிதனின் இயல்பு ஆளுக்கு ஆள் மாறும்... உங்களின் இயல்புக்கு ஏற்றாற்போல் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். உங்களுக்கு என்று ஒரு அளவுகோல் இருக்கும். அதற்கேற்ப  யோசித்து முடிவெடுங்கள்... எந்த முடிவு  உங்களுக்கு ஏற்புடையது, உங்களின் அறிவிற்கும் மனதிற்கும் பொருந்தி வரும் என்று பார்த்து முடிவெடுங்கள். அதன்படி வாழ்க்கையை வாழுங்கள்.  இல்லை முடிவெடுக்க முடியாமல்  தடுமாறுகிறீர்கள், அதனால் மன உளைச்சலில் தவிக்கிறீர்கள்
என்றால் நல்ல மனநல மருத்துவரை அணுகி நேரில் ஆலோசனை பெறுங்கள். கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது போல் தோன்றுகிறது. நீங்கள் கொஞ்சம் பொறுமையாக யோசித்து முடிவு எடுங்கள். அவருக்கும் அவர் மனைவிக்கும் உள்ள உறவு,  அவர் குழந்தைகளுடன் எவ்வாறு நெருக்கமாக இருந்துள்ளார்? நீங்கள் உங்கள் குழந்தைகளுடனும் பேரக் குழந்தைகளுடனும் எவ்வளவு நெருக்கமாக உள்ளீர்கள்?  உங்கள் புதிய உறவை  அவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்? அப்படி புரிந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் அதை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?  என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

அவர் உங்களுடன் பேசும்பொழுதும் பழகும் பொழுதும் உங்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது. உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்காத அன்பும் பாசமும் அவரிடம் கிடைக்கிறது என்று நீங்கள் உணர்கிறீர்கள். இந்த உணர்ச்சிப்பெருக்கில் முடிவெடுக்கும்போது சற்று தடுமாற்றம் ஏற்படலாம். , உணர்ச்சி வசப்படாமல் குழப்பமில்லாமல் தெளிவாக யோசித்து உங்களுக்கு பொருத்தமான ஒன்றை செய்யுங்கள். அது உங்களை சரியாக வழி நடத்தும்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!