×

கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

நல்ல கல்வி கற்று சிலர் பண்பாளர்களாகத் திகழ்வர். பண்புகளால் மட்டுமே சிலர் சிறந்தவர்களாகத் திகழ்வர். தன் செயல்களாலேயே சிலர் நல்ல பெயரை தட்டிச் செல்வர். இது சிறியவர் முதல் அனைவருக்குமே பொருந்தும். முதல் மதிப்பெண் எப்பொழுதும் வாங்கியே, நல்ல பிள்ளைகளாகத் திகழ்பவர்கள் உண்டு. படிப்பில் சிறந்து விளங்காவிட்டாலும், பிறருக்கு உதவி செய்தல், மரியாதையோடு நடத்தல், சேவை மனப்பான்மையோடு எப்பொழுதும் செயல்படுதல் போன்றவற்றால்கூட நல்ல பெயரை அடைய முடியும். எவ்வளவு தான் படித்தாலும், முதல் மதிப்பெண் அல்லது முதலிடம் பெற்றாலும் அத்தகைய இடத்தைப் பிடிப்பது ஒருவராகத்தான் இருக்க முடியும். அதனால் மற்றவர் படிக்கவில்லையா என்று கேட்டால் அது அர்த்தமற்றதாகும். நம் அறிவுப்பசிக்காக, கல்வி என்னும் ஞானத்தை புத்தகங்கள் மூலம் அடைய விரும்புகிறோம்.

அது எந்த அளவில் நம் மனதில் பதிகிறதோ அந்த அளவுக்கு நம் திறமையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கும். குறைந்தபட்ச அடிப்படைக்கல்வி என்பது அனைவருக்கும் அவசியமாகிறது. பின் தன் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமா கிறது. தனக்குப் பிடித்ததை மற்றவர் மேல் திணிக்க முயற்சிப்பது என்பது நல்ல ஒரு நோக்கமாகாது. அதேசமயம், பிறரோடு சம்பந்தப்படுத்தி, ஒப்பிட்டுப் பேசுவதும் நல்லதல்ல. பிறருக்காக, பிடிக்காத ஒரு படிப்பை கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால், எந்த ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. தனக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே, தனிப்பட்ட ஒரு நபரால் பிரகாசிக்க முடியும். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நடைமுறை வாழ்க்கையில் கூறமுடியும். தன்னலமற்ற, ஒரு தியாகி மாணவனைக்கூட நாங்கள் என்றும் மறக்க முடியாத அளவில் நினைவில் வைத்துள்ளோம். சுமாரான அளவில் படித்த பெற்றோர் பிள்ளைக்காக எத்தனை வேண்டுமானாலும் தியாகம் செய்ய நினைத்தனர்.

ஆனால் அவனால் படிப்பில் சிறந்து விளங்க முடியவில்லை. காலையில் மணி அடிப்பதற்கு முன்பே வந்து, வகுப்பறைகளை அழகுபடுத்தி, சுத்தமாக வைப்பான். ஆசிரியர்களுக்கு வேண்டிய தினசரி குறிப்பேடுகள், கரும்பலகையில் எழுதத் தேவையான உபகரணங்கள், அழிப்பதற்குத் தேவையான துணிகள் ஆகிய அனைத்தும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். இது மட்டுமா, பாடம் கற்பித்தலை தவிர ஆசிரியர்களுக்கு வேலையே வைக்க மாட்டான்.  சொன்னாலும் கேட்க மாட்டான். மாணவர்கள் காலணிகள் சுத்தமாக உள்ளனவா, தங்கள் சாப்பாட்டுப்பை, புத்தகப்பைகளை வரிசையாக அடுக்குகிறார்களா ஆகிய அனைத்து கண்காணிப்புகளையும் தனக்குத்தானே வகுத்துக் கொண்டான். சிறிய வகுப்புப் பிள்ளைகளை பாசத்தோடு கை பிடித்து வகுப்பில் அவரவர் இடத்தில் உட்காரச் செய்வான். அவன் படிப்பை கவனித்துக் கொண்டால் போதும், மற்றவற்றை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான். இத்தகைய செயல்கள் மூலம் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு ‘‘அண்ணா’’ உறவை தேடிக்கொண்டான். ஆசிரியர்களுக்கு ‘‘வளர்ப்புப் பிள்ளை’’யானான்.

‘பொய்’ என்பதே அவனுக்குத் தெரியாது. இத்தகைய சேவை மனப்பான்மை, அவனுள்ளேயே குடிகொண்டுள்ளது. சொல்லித்தந்தால் மட்டும் வந்துவிடாது. படிப்பில் மட்டும் அவனால் கவனம் செலுத்த முடியாது. தன் இயலாமையை வெளிப் படையாகவே ஒப்புக்கொள்வான். எப்படியோ ஒவ்வொரு வகுப்பிலும், நாங்கள் தந்த ஊக்கத்தினால் தேர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவன் வளர வளர நாங்கள் ஒன்றைப் புரிந்துகொண்டோம். அவன் விளையாட்டுத்துறையில் பெரிய அளவில் சாதிப்பதற்குத்தான் பிறந்திருக்கிறானென்று. அவனுக்குள் நல்ல ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னடக்கம் அனைத்தும் குடிகொண்டுள்ளது போலும். மேனிலைப்பள்ளிக் கல்வி வரை அவனை அடிக்க விளையாட்டுத்துறையில் யாராலும் முடியவில்லை. ஆனால் எந்த ஆசிரியர் ஆசிரியையாக இருந்தாலும், உடன் குனிந்து மண்டியிட்டு அவ்வளவு பணிவுடன் பேச ஆரம்பிப்பான். எவ்வளவு கடின உள்ளம் கொண்டவராகயிருப்பினும், அவன் நடத்தையைப் பார்த்தால் கோபம் வராது. மாறாக, அன்புடன் கண்ணீர்தான் வரும்.

படித்து ‘ஓஹோ’வென்று சாதித்தவர்கள் அனைவரிடமும் இத்தகைய பணிவு இருக்கிறதா, என்ன? எனவே ‘ஏட்டுப்படிப்பு’ மட்டும் ஒருவரை சிறந்த மனிதராக ஆக்காது. ‘வாழ்க்கைக்கல்வி’ என்னும் படிப்புதான் மனிதனை மேம்படுத்துகிறது. அப்படிப்பட்டவன்  ஜில்லா, தலைநகரம், தேசிய அளவில் மிகப்பெரிய குத்துச்சண்டை வீரராகத் திகழ்கிறான். ‘குத்துச்சண்டை’ வீரராக இருந்தாலும் அவன் அன்பானவன். அனைவர் மனதிலும் இடம் பிடித்தவன். இதுபோல் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் திறமை ஒளிந்துகொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம், வெளிகொண்டுவர, கற்பிப்பவர் முயற்சித்தால் போதும். வாழ்க்கை அழகானது. அன்புடன் நேசித்தால், அது நமக்கு திரும்பக் கிடைக்கும். எத்தனையோ மாணவர்கள் படிக்கும் பிராயத்தில், எவராலும் கண்டுகொள்ளப்
படாதவர்கள் உண்டு.

அவர்களெல்லோரும், தனக்கென ஒரு துறையை தேர்ந்தெடுத்துக்கொண்டு சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அனைவரையுமே நம்மால் முடிந்த அளவுக்கு ஊக்கப்படுத்தி, அவர்களின் மனதைப்புரிந்து ஆலோசித்து வழிகாட்டினாலே போதும். அன்பு செலுத்த நாம் எதுவும் செலவு செய்யப்போவதில்லை. பிறருக்கு அன்பையும், ஆறுதலையும் தரும்பொழுது பிற்காலத்தில் அது நமக்கே வந்து சேரும். நெசவாளிகளுக்காக தன் மேலாடையை தியாகம் செய்த மகாத்மா வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக அரங்கில் எங்கு சென்று நோக்கினாலும், இந்திய மாணவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நம் கட்டுப்பாடு, பாசப்பிணைப்பு, கலாச்சாரம் இவைதான் அனைத்திற்கும் ஆணிவேராக அமைந்துள்ளது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பாக காணப்பட்ட சம்பவம். பிறவிக்கோளாறு என்று கேள்விப்பட்டோம். அழகான பெண் குழந்தை. கால்கள் செயலிழந்து பெற்றோர் தூக்கிக்கொண்டு வந்து பள்ளிக்கு விட்டுச்செல்வது வழக்கம். கே.ஜி.வகுப்பில் அவளருகில் உட்காரும் மாணவிதான் அவளுக்கு நெருங்கிய தோழி. கிட்டத்தட்ட முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருவரும் இரட்டையர்கள் போலவே மாறிவிட்டனர்.

எங்கு செல்ல நினைத்தாலும் தோழிதான் அவளை அழைத்துச் செல்வாள். ஆசிரியர்களுக்கே அதைப்பார்த்தால், பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். ஒருநாள்கூட இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தினமும் பள்ளி ‘கேட்’ அருகே தோழி அவளுக்காகக் காத்திருப்பாள். பெற்றோர்கள் இறக்கிவிட்டுச்
சென்றவுடன், புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொள்வாள். மறுகையால் அவளை அணைத்துக்கொண்டு நடக்கச் செய்வாள். வகுப்பு நடந்துகொண்டிருக்கும் பொழுது, தண்ணீர் வேண்டுமென்றால் எடுத்துத் தருவாள். ஏதேனும் அசெளகரியம் ஏற்பட்டால் அவளை ஓய்வு அறைக்கு அழைத்துச் செல்வதும் தோழியின் பழக்கம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பாடப்பிரிவு சமயத்திலும், குனிந்து அவள் பையிலிருந்து புத்தகங்கள், நோட்டுகள் இவற்றையும் எடுத்து வைத்து, குறிப்பிட்ட பாடப்பகுதி முடிந்துவிட்டால், அடுத்த வகுப்பிற்கும் எடுத்து வைப்பாள். இவற்றைக் கேட்கவே கடினமாக உள்ளதென்றால், அம்மாணவிக்கு எவ்வளவு உடல் சிரமம் இருக்கும்.

பள்ளிக்கு அனுப்பிவிட்டால், பெற்றோருக்கு பதில் தோழி தன் தோளில் சுமக்க ஆரம்பித்தாள். பாதிக்கப்பட்ட பெண்ணைவிட, தோழியின் நிலை பரிதாபமாக காணப்படும். ஒரு வயது வந்த பெண்ணை சுமப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ‘தோழி’ ஒரு தாயில்லாப் பெண். எனவேதானோ, என்னவோ கடவுள் அவளையே ஒரு தாய்க்குச் சமமான சேவையைச் செய்ய வைத்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அச்சிறு வயதில் அப்படியொரு சேவை மனப்பான்மை. இதுபோன்ற பல நிகழ்வுகளை தினம் தினம் கண்ட எங்களுக்கு எத்தனையோ அனுபவங்கள் கிடைத்தன. ஒவ்வொரு பிஞ்சு உள்ளங்களுக்கும் எத்தனை கஷ்டங்கள் புதைந்துள்ளன. அவற்றை நாம் பகிரும்பொழுதும் அவர்கள் மனம் லேசாகிறது.

வாழ்க்கை என்னும் சக்கரம் உருண்டோடினாலும், ஒரு சில நிகழ்வுகள் நம்மை ‘கண்கலங்கவே செய்யும். நடக்க முடியாத தோழிக்காக தம் இளமைப்பருவத்தையே தியாகம் செய்த தாயில்லா மற்றொரு தோழி பெரியவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்பதை, தன் சேவையால் நிரூபித்துவிட்டாள். அவள் மாணவிதான் என்றாலும், அந்த இடத்தில் அவள்தான் ஆசிரியை என்று சொல்லலாம். மாணவர்களிட மிருந்து நாமும் சிலவற்றை கற்றறிய முடியும் என்பதற்கு இதுவே சான்று. இறுதியாண்டு அரசுத்தேர்வு ஆரம்பித்தது. முதல் நான்கு நாட்கள் பொதுவாக மொழி ஒன்று இரண்டும், ஆங்கிலம் ஒன்று, இரண்டும் நடைபெறும். நல்ல திறமைசாலியான மாணவன். முதல் தேர்வு நாள் என்பதால், தாயும், தந்தையும் ஆசி தந்து, வழியனுப்பி பள்ளி வரை அழைத்து வந்தனர். அந்த நேரம்தான் அவனுக்கு மகிழ்ச்சியின் கடைசிக்கட்டம் என்பது தெரியவில்லை. தேர்வு அறைக்குள் நுழையும் வரை தாயும், தந்தையும் கையசைத்துக் கொண்டேயிருந்தனர்.

தேர்வு நெருங்கியவுடன் ‘கேட்டு’கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. தாயும், தந்தையும் மனதில்லாமல் புறப்பட்டனர். தந்தைதான் காரை ஓட்டிச்சென்றார். ஒரு பதினைந்து நிமிடம் ஓட்டியிருப்பார். தலையை சுற்றுவதுபோல் இருந்ததாம். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, மனைவியிடம் டாக்டர் யாராவது இருந்தால் அழைத்து வரும்படி சைகை காட்டியிருக்கிறார். மாணவன் தாய் இங்குமங்குமாக ஓடி ஒரு இருபத்திநாலு மணி நேர ஆஸ்பத்திரியிலிருந்து யாரையோ அழைத்துவர, அதற்குள் முழுவதும் மயக்கமடைந்து அப்படியே குப்புற சாய்ந்திருந்தார். கை வண்டி ஓட்டும் நிலையிலேயே  இருந்தது. அன்றைய தினம் அச்சிறுவனின் வாழ்க்கையில், அப்படியொரு சோக சம்பவம், அவன் வாழ்க்கையை உருட்டிப்போட வைத்தது. அவன் மனநிலை எப்படி யிருந்திருக்கும்? ஒருவழியாக உறவினர்கள் அவனுக்கு ஆறுதல் தந்ததோடு, அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து தந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளிந்துகிடக்கும் பல சோக சம்பவங்கள் பார்த்தால் புரியாது. உடன் இருந்து பார்த்து, துன்பத்தை பகிர நினைத்தவர்களுக்குத்தான் புரியும்.

யாரையும் காரணம் இல்லாமல் சொல்லிவிடக் கூடாது. இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள் மற்றொரு மாணவி. ஒருநாள் விடியற்காலை எழுந்து படித்துக்கொண்டிருந்தாள். சிறு வயது முதலே அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது வழக்கம். அன்று அவளுக்குப் பிடித்த தேர்வு என்பதால், பெற்றோரை எழுப்ப மனமில்லாமல், தண்ணீர் எடுத்து நிறைய குடித்திருக்கிறாள். தொண்டை அடைத்துத் திணறி, அப்படியே மயங்கி விழுந்திருக்கிறாள். சிறிது நேரத்தில், எழுந்த பெற்றோர் கதற அவளுக்குக் கேட்கவில்லை. புத்தகங்களுக்கு நடுவிலேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டாள். அதே ஆண்டு அவள் ‘சிவனா’க நடனமாடியது எங்கள் கண்கள் முன் பரவசப்படுத்தியது. படிக்கும் பிள்ளைகள் தன் எதிர்காலத்திட்டத்தை தீட்டுவதற்குள் என்ன ஒரு விதியின் கொடுமை?‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்றாலும், மாணவர்களின் வாழ்க்கையில் நடந்தவை பலப்பல. மனம் சிறியதாக இருந்தாலும், அவர்கள் மனதிலுள்ளதை மனம் திறந்து கேட்போம். புரிய வைப்போம். அவர்கள் புத்துலகம் படைக்கட்டும்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!