சீன ஆய்வகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ள ‘நியோகோவ்’ குறித்து இப்போதைக்கு கவலைப்பட தேவையில்லை : உலக சுகாதார அமைப்பு!!

புதுடெல்லி: மனித குலத்திற்கே பேரழிவை ஏற்படும் என்று வுகான்  ஆய்வகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ள  ‘நியோகோவ்’ குறித்து இப்போதைக்கு கவலைப்பட தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட தென் ஆப்ரிக்காவில் சில வவ்வால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது புதுவகை வைரஸ் அல்ல.விலங்குகளிடம் பரவக் கூடியவை. ஆனாலும், இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎப்-2180-கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். மேலும் இந்த ‘நியோகோவ்’ எனும் கொலைகார வைரஸ் ஒமிக்ரானை போல வேகமாக பரவக்கூடியது என்றும் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவரின் உயிரை பறிக்கக் கூடியது என்றும் சீனாவின் வுகான் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்‘நியோகோவ்’ எனும் வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில், ‘நியோகோவ்’ பற்றி இப்போதே கவலைப்பட தேவையில்லை என்று கூறி உலக சுகாதார நிறுவனம், ஆறுதல் அளித்துள்ளது. இந்த வைரஸ் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்று இன்னும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும் வளர்ந்து வரும் ஜுனோடிக் வைரஸ்களின் அச்சுறுத்தலைக் கண்காணித்து, பதில் அளிப்பதற்கு உலக விலங்கு ஆரோக்கியத்துக்கான அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு ஆகியவற்றுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சீனா பகிர்ந்துள்ள புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தத் தகவலைப் பகிந்தமைக்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Related Stories: