227வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்!!

சின்னசேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மராஜன். இவரது வயது 62. கடந்த 1986-ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட இவர், அதன்பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டு ‘தேர்தல் மன்னன்’ என்ற பட்டத்துடன் உள்ளூரில் பிரபலமானார்.குறிப்பாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அகில இந்திய அளவில் இவர் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள இவர்,1988 முதல் உள்ளாட்சி தேர்தல், எம்எல்ஏ, எம்பி, குடியரசுதலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை இவர் 226 தடவை பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர்,  பதவிக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியதை அடுத்து வீரக்கல் புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதையும் சேர்த்து அவர் 227வது முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: