சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 450 வீடுகள் அகற்றம்: பொதுப்பணித்துறை நடவடிக்கை

தாம்பரம்: சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 450  வீடுகளை அகற்றுவதற்காக வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் தெருவில் உள்ள கிராம நத்தம் பகுதியில் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி, அகற்ற முயற்சிப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, அந்த பகுதிகளை அளவீடு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில், வருவாய், பொதுப்பணி மற்றும் காவல்துறையினர் இணைந்து நில அளவீடு செய்யும் பணியை கடந்த வாரமாக  செய்தனர்.

பட்டா நிலங்களை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நில அளவீடு செய்யப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் சிட்லபாக்கம் ஏரியின் மேற்கு கரை பகுதியில் 2 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

பின்னர், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 450 வீடுகளை  பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, தாம்பரம் கோட்டாட்சியர் கூறுகையில், ‘‘சிட்லபாக்கம் ஏரியின் மேற்கு பகுதியில், கிராம நத்தம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மட்டும் அளவீடு செய்யப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: