பாதிப்பு தொடர்ந்து குறைகிறது தமிழகத்தில் 26,533 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சிகிச்சை பலனின்றி 48 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் தொற்று பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து நான்காவது நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று 26,533 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நேற்று 1,45,376 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,11,863 ஆக உள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 28,156 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை 30 லட்சத்து 29 ஆயிரத்து 961 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனையில் 24 பேரும் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 37,460 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று 5,246 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 3,448, செங்கல்பட்டு 1,662, ஈரோடு 1,261, சேலம் 1,387, திருப்பூர் 1,779 ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: