அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாஜ தலைவர்தான் முடிவெடுப்பார்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: அதிமுக உடன் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தமிழக பாஜ தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக பாஜ மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாஜ சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம்  நேர்காணல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளதால் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். இதையடுத்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தேர்வான வேட்பாளர்களை அறிவிப்பார். பின்னர் 31ம்தேதி பிறகு பாஜ வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள். இந்த தேர்தல் குறித்து மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

இதில் இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டது எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. அதிமுக உடன் கூட்டணியா? தனித்து போட்டியா? என்று கேட்கிறீர்கள். கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரம் தமிழக பாஜ தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் கூட்டணியா என்பது குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: