பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுடன் ஊட்டிக்கு கொண்டு வந்தால் அபராதம்:ஐகோர்ட்டில் நீலகிரி நிர்வாகம் தகவல்

சென்னை:  வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைவாச தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருகிறார்கள். கோவை மாவட்ட எல்லையில் இதற்கென்று அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் தண்ணீர் பாட்டில்கள் கைப்பற்றப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, அங்கு கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுவதில்லை. சுற்றுலா பயணிகள் தான் அவற்றை கொண்டு வருகிறார்கள்.

அவற்றை பறிமுதல் செய்ய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 விசாரணையின்போது நீதிபதிகள், பிளாஸ்டிக் பாட்டிலுடன் வரும் வாகனங்களை 6 அல்லது ஓராண்டு வரை மீண்டும் அந்த சுற்றுலா பகுதிக்கு வர தடை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் சிந்திக்க  வேண்டும். திருப்பதியில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தி மேலே சென்றால் அந்த சுற்றுலா வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி ரத்து, வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் இருக்கிறது. கொடைக்கானல், நீலகிரியில் நிரந்தரமாக சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்கை கொண்டு வர தடை விதிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோனையை வழங்க வேண்டும் என்று தலைமை வன உயிரின காப்பாளர் சேகர் குமார் நீரஜிடம் அறிவுறுத்தினர்.

Related Stories: