மாணவி மரணம் தொடர்பாக பொய் பிரசாரம் பாஜ கட்சியினரை கைது செய்ய வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்

சென்னை: ‘மாணவி மரணம் தொடர்பாக பொய் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜவினர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்’ என்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் வெளியிட்ட அறிக்கை: பிளஸ்2 படித்து வந்த அரியலூர் மாணவி பள்ளி விடுதியில் சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாஜவினர், மாணவியின் இறப்பிற்கு பின் பொய்ப் பிரசாரம் செய்யும் நிலையில், மருத்துவமனையில் உயிருடன் இருக்கும்போது மாணவி பேசிய முழுமையான வீடியோவில் தன்னை யாரும் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்று தெளிவாக கூறுவது வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம் பாஜவின் அண்ணாமலை போன்ற நபர்கள் திட்டமிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் மத ரீதியிலான பாகுபாட்டையும், வகுப்புவாத கலவரத்தையும் ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகி போனது. ஒரு கட்சியின் மாநில தலைவரே உண்மை என்ன என்பதனை அறியாமல் பொய்யான செய்தியை பரப்பி தமிழகத்தில் பதற்றத்தையும், கலவர சூழலையும் ஏற்படுத்த முயற்சித்திருப்பதை வன்மையாக கண்டிகிறோம். பொய்யை பரப்பிய அனைத்து பாஜவினர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: