மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்ற அவகாசம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம்  பகுதியில்  மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக  மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015ம்  ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை  என கூறி ஐ.எச்.சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும்  நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில்  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை கலெக்டர் ஜெ.விஜயாராணி சார்பில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்பதே அரசின் நிலைப்பாடு. இதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்.  தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் அடிப்படையில் முதல்கட்டமாக கடந்த 24ம் தேதி 108 வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 84 வணிக கட்டிடங்களுக்கு மின் இணைப்புகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களில் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று 32 அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 7 சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு அரசு நிலம் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்.

மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ள மாற்று இடத்திற்கு மாறுவதற்கான உத்தரவாதத்தை அனைத்து ஆக்கிரமிப்பாளர்களிடமும் இருந்து ஒரு மாதத்திற்குள் பெறப்படும். மாற்று இடம் பெற விரும்பாதவர்களின் இறுதி பட்டியல் பிப்ரவரி 28ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மாற்று இடத்திற்கு செல்ல விரும்புபவர்களில் முதல்கட்டமாக 100 பேருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் கட்டியுள்ள வீடுகள் மார்ச் 31ம் தேதிக்குள் ஒதுக்கப்படும். இரண்டாம் கட்டமாக 1348 பேருக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடுகள் ஒதுக்கப்படும். மாற்று இடம் பெற விரும்பாதவர்கள் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்படுவார்கள்.  

கொரோனா தொற்று பரவல் மற்றும் அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வயதானவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்கள் தற்போது ஆன்லைன் மூலம் படித்து வரும் நிலையில் மின் இணைப்பை துண்டித்தால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும். இந்த கல்வியாண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிவடையவுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி 156 ஏக்கர் நிலம் அரசால் மீட்கப்படும் என்றார்.

அப்போது, பெத்தேல் நகரை சேர்ந்த குடியிருப்புவாசிகள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி, நாங்கள் இந்த வழக்கில்  இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். எங்கள் வாதத்தையும் கேட்க வேண்டும். மொத்தம் 5000 குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்றனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

போராட்டம் ஒத்திவைப்பு

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையே, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அரசு நிலத்தை 30 நபர்கள் ஆக்கிரமித்து,   சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் சோழிங்கநல்லூர் தாசில்தார் மணிசேகர் நீலாங்கரை போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (56), கன்னியப்பன் (56), சோழன் (47), வெங்கடேசன் (60), அரிதாஸ் (57) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: