பாரம்பரியம் மிக்க கோயில்கள், சிலைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?...தொல்லியல் ஆலோசகர்கள் ஆய்வு செய்ய அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: சேதமடைந்த சிலைகள் மற்றும் பழங்கால பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நூற்றாண்டுகால பாரம்பரியம் மிக்க கோயில்களில் தொல்லியல் ஆலோசகர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய தொல்லியல் துறை மற்றும் மாநில தொல்லியல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் அனைத்து மண்டல இணை ஆணையர் பகுதிகளிலும் தொல்லியல் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொல்லியல் ஆலோசகர்களின் கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

* தொல்லியல் ஆலோசகர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள், கோயில் அமைந்துள்ள இடம், கோயில் வயது, கோயிலின் வரலாறு, கோயிலில் ஆகமம் பின்பற்றப்பட்டது, வழிபாட்டு முறை, கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், கோயிலின் தனிச் சிறப்புகள், கோயிலின் இலக்கிய அம்சங்கள், கல்வெட்டுகளின் இருப்பு, பாரம்பரியம்/ கட்டிடக்கலை அம்சங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

* சேதமடைந்த கோயில்களை சீரமைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். மேலும், அந்த கோயில்களை ஆவணப்படுத்த வேண்டும். தற்போதைய தளத் திட்டம், கட்டமைப்புகளின் விரிவான வரைதல், பாதுகாப்பு திட்டம், பராமரிப்பு நெறிமுறைகள் தொடர்பாக அறிக்கை தயாரிக்க வேண்டும்.

* கோயிலின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் பொருத்தமற்ற நவீன அல்லது சமீபத்திய சேர்க்கைகள் மற்றும் மாற்றங்கள் சமீப காலங்களில் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய தலையீடுகளை அகற்றி அதன் அசல் தன்மையை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

* பொறியாளர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு, பாரம்பரியக் கட்டமைப்புகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சி அளிப்பதற்கான பயிலரங்கம் நடத்த வேண்டும்.

* பழங்கால, பாரம்பரிய கோயில்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

* பாரம்பரிய கோயில்களை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* சிலைகள் மற்றும் சின்னங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

* கோயில்களில் பழங்கால பொருட்கள் மற்றும் சிலைகளை பதிவு செய்வதில் கோயில் அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

* சேதமடைந்த சிலைகள் மற்றும் பழங்கால பொருட்களை பாதுகாக்க வேண்டும்.

Related Stories: