நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் தொடக்கம்: விண்ணப்பம் விநியோகம்

திருவள்ளூர்: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 19ம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவித்தது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கி வரும் 4ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதற்காக திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கையும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் அறை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நாகராஜன், சீனிவாசன் கோவிந்தராஜூலு, சுதர்சன் ஆகியோரின் அறை, என நகராட்சி அலுவலகத்தின் உட்பகுதி, வெளிப்பகுதி என 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபர்களை வீடியோ பதிவு எடுத்து அதனை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகராட்சி அலுவலகத்தின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே வரும் நபர்களை தீவிர பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அதேபோல திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி தலைமையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வேட்புமனுக்கள் பெற தயார் நிலையில் இருந்தது. ஆவடி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி வரும் 4ம் தேதி வரை நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மாநகராட்சியான, ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.

இங்கு ஆண் வாக்காளர்கள் 1,54,633, பெண் வாக்காளர் 1,57,334, மூன்றாம் பாலினம் 73, என மொத்தம் 3,12, 033 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 350 வாக்குசாவடிகள் உள்ளன. இங்கு தேர்தலை நடத்த மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் எஸ்.முரளி, கண்காணிப்பாளர் பா.செல்வராணி, உதவி வருவாய் அலுவலர் ஜெ.இந்திராணி, உதவி பொறியாளர் பி.நிர்மலாதேவி, நகரமைப்பு ஆய்வாளர் ஜி.கணேசமூர்த்தி, உதவி வருவாய் அலுவலர் வி.ஜான்பாண்டியராஜ் ஆகிய 6 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேர்தலை நடத்த தலா 8 வார்டுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுவதற்கு வேட்புமனு விண்ணப்பத்தை நேற்று முதல் வழங்கி வருகின்றனர். இதனையடுத்து, நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் வேட்புமனு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். இந்த விண்ணப்பங்களை வாங்கி சென்ற அரசியல்  கட்சியினர்,  சுயேச்சைகள் வரும் 31ம் தேதி அமாவாசையன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், திருநின்றவூர் நகராட்சியில் 27வார்டுகள் உள்ளன.  இங்கு ஆண் வாக்காளர்கள் 20,333, பெண் வாக்காளர்கள் 21,177,  மூன்றாம் பாலினம் 8  என மொத்தம் 41,518 வாக்காளர்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகள் 48.

இங்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக வி.கலைச்செல்வன், பி.வி.ஜான்சி, எஸ்.மாணிக்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நகராட்சியில் தேர்தலை நடத்த, இவர்களுக்கு தலா 9 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கும், நேற்று ஒரே நாளில்  50க்கு மேற்பட்டோர் வேட்புமனு விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர். மேலும், அம்பத்தூர் மண்டலத்தில் 15வார்டுகள் உள்ளன. இங்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக உதவி வருவாய் அலுவலர் பி.வி.சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் டி.எம்.இளங்கோ, உதவி வருவாய் அலுவலர் எஸ்.சி.லோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட அலுவலர்கள் தலா 5 வார்டுகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.  மேற்கண்ட மாநகராட்சி, நகராட்சியில் வேட்புமனு தாக்கல் தொடங்கி, முடியும் வரை அனைத்து பதிவுகளையும் பதிவு செய்ய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. மேலும், போலீசாரும் மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: