காஞ்சி, செங்கை மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, வேட்புமனுதாக்கல் நேற்று காலை தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 287 வாக்குச்சாவடிகளில், 120 ஆண்கள், 120 பெண்கள், 47 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதில் சுமார் 1,300 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 2, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 2, மகளிருக்கு 24, பொது பிரிவினருக்கு 23 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர் பேரூராட்சியின் 18 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 1, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 1, மகளிருக்கு 8, பொது பிரிவினருக்கு 8 வார்டுகளும், வாலாஜாபாத் பேருராட்சியின் 15 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 3, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 2, மகளிருக்கு 5, பொது பிரிவினருக்கு 5 வார்டுகளும், ஸ்ரீபெரும்பதூர் பேரூராட்சியின் 15 வார்டுகளில் ஆதிதிராவிடர் மகளிருக்கு 2, ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு 1, மகளிருக்கு 6,பொது பிரிவினருக்கு 6 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையர் நாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நகராட்சி பொறியாளர் கணேசன், நகரமைப்பு அலுவலர் வேதாச்சலம் உள்பட 8 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆண்கள் 1,05,688, பெண்கள் 1,13,205, திருநங்கைகள் 28 பேர் என மொத்தம் 2,18,901 வாக்காளர்கள் உள்ளனர் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், அவர்களுக்கு முன்மொழிபவர்களும் தாங்கள் போட்டியிடும் உள்ளாட்சி மன்றத்தில் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவை எதுவும் நிலுவை இல்லை என்று சான்று பெற்று இணைக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இதையடுத்து, திருப்போரூர் பேரூராட்சியில், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி எதுவும் இல்லை என சான்று கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதனால், திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு கல்வெட்டுகளை மறைக்கும் பணி தொடங்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்று, பேரூராட்சியில் உள்ள சிலைகளின் பீடங்களில் இருந்த கல்வெட்டுகள், அரசு விளம்பரங்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். தேர்தல் நடைபெறும் பேரூராட்சி எல்லைக்குள் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 பறக்கும் படைகள் அமைப்பு

திருப்போரூர் பேரூராட்சியில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஷிப்ட் முறையில் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை துணை வட்டாட்சியர் சத்யா தலைமையில் ஒரு பறக்கும் படையும், மதியம் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் ஜெரால்டு தலைமையில் மற்றொரு பறக்கும் படையும், இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில் 3வது பறக்கும் படையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு எஸ்எஸ்ஐ மற்றும் ஒரு போலீசார் இணைந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: