தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சுவர் விளம்பரங்கள் அழிப்பு

மாமல்லபுரம்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், மாமல்லபுரத்தில் உள்ள சுவர் விளம்பரங்களை பேரூராட்சி ஊழியர்கள் அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தொடங்கிவிட்டது. இதையொட்டி, மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம், கோவளம் சாலை, இசிஆர் சாலை, பூஞ்சேரி, சாவடி, ஓஎம்ஆர் சாலை உள்பட அனைத்து பகுதிகளிலும் சுவர்களில் இருந்த விளம்பரங்களை பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பணியாளர்கள் நேற்று வெள்ளை அடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Related Stories: