×

நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் 7.5% உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்: பெரும்பாலானவர்களின் பெற்றோர் விவசாயிகள், கூலித் தொழில் செய்பவர்களே

சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்ததையடுத்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் சீட் கிடைத்த  அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்களின் பெற்றோர் விவசாயிகள், கூலி வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர்.  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் மதிப்ெபண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவப் படிப்புகளில் நீட்  தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களும் சேர வேண்டும் என்ற  நோக்கில், கடந்த ஆண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு  வரப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு 436 அரசு பள்ளி மாணவர்களுக்கு  எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கிடைத்தன.

இந்த ஆண்டு புதிதாக 11 அரசு  மருத்துவக் கல்லூரிகளும், 3 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 1 சுயநிதி  பிடிஎஸ் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு  மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் அதிகரித்துள்ளது.  அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு  ஒதுக்கீட்டு இடங்களில் 437 எம்பிபிஎஸ் இடங்களும், 107 பிடிஎஸ்.இடங்களும் என மொத்தம் 544 இடங்களில் இந்த ஆண்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி 1,806 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை 9 மணியளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியது. அதில் 1 முதல் 719  வரையிலான தரவரிசையில் இருந்த மாணவர்கள் நேற்று கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ்  படிப்புக்காக இடம் கிடைத்துள்ளதையடுத்து மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் தான்  படிக்காமல் விவசாயம், கூலி தொழில் பார்க்க வேண்டியதாக இருந்தது எங்களுடைய  பிள்ளைகளுக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக  உள்ளது. இதைப்போன்று 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கிடைத்த  அரசு பள்ளி  மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்களின் பெற்றோர் விவசாயிகள், கூலித்  தொழிலாளிகள், கூலி வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். ஒரே பள்ளியில் படித்தவர்களுக்கு இடம்: நெல்லை மாநகராட்சி மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவியர் இசக்கியம்மாள், யாமினி, பிரியா ஆகியோர் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் இடங்களை தேர்வு செய்தனர். அதைப்போன்று மதுரை ஈ.வெ.ரா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்த ராதிகா, நான்சி இருவரும் ஒரே மாதிரியான ஆடையில் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தனர்.

நாளை பொதுப்பிரிவு கலந்தாய்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் மொத்தம் 762 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 739 பேர் கலந்துகொண்டனர். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் 318 இடங்கள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 6 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 113 எம்பிபிஎஸ் இடங்களை தேர்வு செய்தனர். மேலும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 94 இடங்கள் என மொத்தம் நேற்று நடந்த கலந்தாய்வில் 541 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்.

இதில் பெண்கள் 377 பேர், ஆண்கள் 164 பேர். மேலும் 198 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிவா, பிரகாஷ், சந்தானம், வெங்கடேஸ்வரி உட்பட முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடஒதுக்கீடு ஆணையை வழங்கி பாராட்டினார். நாளை முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இறுதி ஒதுக்கீடு ஆணை, 11 அல்லது 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

Tags : MBBS , NEED EXAMINATION, INTERNATIONAL ASSISTANCE, MBBS, GOVERNMENT SCHOOL STUDENTS, PARENTER FARMERS, Mercenary
× RELATED நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப்...